கட்டாயப்படுத்தி முதல்வராக்கினார்கள்.. நான் என்ன தவறு செய்தேன்- ஓபிஎஸ் கேள்வி

Published On:

| By Pandeeswari Gurusamy

ops

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு தன்னை கட்டாயப்படுத்தி முதல்வராக்கினார்கள் என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு இன்று தேனியில் அவரது உருவப்படத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் மலர் தூவி மரியாதைசெலுத்தினார். இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ““எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தொண்டர்களுக்காகவே கட்சியை நடத்தினார்கள். கடந்த 1991ஆம் ஆண்டு கட்சியில் இருந்து பிரிந்தவர்களை ஒன்றுபடுத்தியவர் ஜெயலலிதா. அவர் ‘தாலிக்கு தங்கம்’, பெண்களுக்கு ஸ்கூட்டி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை மக்களுக்கு வழங்கினார்.

ADVERTISEMENT

அனைவரும் ஒற்றுமையாக இருந்தால்தான் சோதனைகளை சமாளிக்க முடியும் என்று நான் தொடர்ந்து கூறி வந்தேன். கட்சிக்கு சோதனை ஏற்பட்டபோது, ஜெயலலிதா என்னிடம் முதல்வர் பதவியை ஒப்படைத்தார். அவரது கட்டளையை ஏற்று இரண்டு முறை முதல்வராகப் பதவி ஏற்றேன்.

ஆனால் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு, முதல்வராகும் விருப்பம் இல்லை என்று தெரிவித்திருந்த போதிலும், என்னை கட்டாயப்படுத்தி முதல்வராக்கினார்கள். நான் ஜெயலலிதாவிற்கும், கட்சிக்கும் எந்தத் துரோகமும் செய்யவில்லை.

ADVERTISEMENT

ஒரு அரசியல் பிரபலத்தின் அறிவுறுத்தலின் பேரில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டேன்.

கட்சியில் பல்வேறு சோதனைகளை சந்தித்துள்ளேன். ஒன்றுபட்டால்தான் அ.தி.மு.க. வெற்றி பெறும் என்பதை சிலர் ஏற்கவில்லை. தற்போது தனிக்கட்சி தொடங்க வேண்டும் என்று சிலர் கூறி வருகின்றனர். ஆனால் நான் இப்போது மட்டுமல்ல, எப்போதும் தனிக்கட்சி தொடங்கமாட்டேன்.

ADVERTISEMENT

கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பே தனிக்கட்சி தொடங்குமாறு பண்ருட்டி ராமச்சந்திரன் என்னிடம் தெரிவித்தார். ஆனால் அதற்கு நான் உடன்படவில்லை.

எந்த சூழ்நிலையிலும் தனிக்கட்சி தொடங்க மாட்டேன். அ.தி.மு.க.வின் அடிப்படை உரிமைகளை மீட்டெடுக்கவே ‘உரிமை மீட்புக் கழகம்’ தொடங்கப்பட்டது.

என்னை முழுமையாக கட்சியில் இருந்து நீக்கியதற்கான காரணத்தை தற்போதைய பொறுப்பில் உள்ளவர்கள் விளக்க வேண்டும். நான் தவறு செய்ததாக நிரூபிக்கப்பட்டால், அரசியலை விட்டே விலகத் தயார்,” என அவர் தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share