பகுதி நேர ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்களை தொடர்ந்து சத்துணவு ஊழியர்களும் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.
பணி நிரந்தரம், சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பகுதி நேர ஆசிரியர்களும், இடைநிலை ஆசிரியர்களும் தனி தனியே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் சத்துணவு ஊழியர்களும் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
இன்று (ஜனவரி 19) சத்துணவு ஊழியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜெசி தலைமை செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “03.01.2026 அன்று முதல்வர் வெளியிட்ட அறிவிப்பில் சத்துணவு ஊழியர்களுக்காக எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை.
எனவே, மாநிலச் செயற்குழு முடிவின்படி, கடந்த 12.01.2026 அன்று போராட்ட ஆயத்த மாநாடுகள் நடத்தப்பட்டன. வரும் 20.01.2026 முதல் சத்துணவு மையங்களை மூடிவிட்டு காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்திற்குச் செல்ல நாங்கள் திட்டமிட்டிருந்தோம். இடையில், கடந்த 14.01.2026 அன்று அதிகாரிகள் எங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இன்னும் 15 நாட்களில் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என உறுதியளித்தனர். ஆனால் இன்று துறைச் செயலாளர் மீண்டும் ஒரு வாரம் அவகாசம் கேட்டிருக்கிறார். இது எங்களுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
சுமார் 45 ஆண்டுகளாகச் சத்துணவு ஊழியர்கள் கொத்தடிமை போன்ற ஊதியத்தையே பெற்று வருகின்றனர். 40 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு வெறும் ரூ.2000 மட்டுமே ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது. ஒரு நாளைக்குச் சராசரியாக ரூ.66.70 மட்டுமே கிடைப்பதால், ஓய்வுபெற்ற பல ஊழியர்கள் கோயில்களிலும் தெருக்களிலும் பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
எனவே, தொகுப்பு ஊதிய முறையை ஒழித்து, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். சத்துணவு ஊழியர்களுக்கு ரூ. 5 லட்சமும், சமையலர் மற்றும் உதவியாளர்களுக்கு ரூ.3 லட்சமும் பணிக்கொடையாக வழங்க வேண்டும். முறையான குடும்ப ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல் போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம்” என்று கூறினார்.
