தொண்டாமுத்தூர் அருகே உள்ள அண்ணா நகர் பகுதியில் சாதி தீண்டாமை காரணமாக 21ம் எண் அரசு பேருந்து இயக்கப்படாமல் இருப்பதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியருக்கும், போக்குவரத்து செயலாளருக்கும் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் உள்ள கெம்பனூரில் இருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ளது அண்ணா நகர் பகுதி உள்ளது. இங்கு கோவை அரசு பேருந்து கழகம் சார்பில் 64டி, S15A/1C, S3 பி, 21, 21பி ஆகிய 5 பேருந்துகள் காந்திரம் மற்றும் டவுன்ஹால் பகுதியில் இருந்து நீக்கப்படுகிறது.
கொரோனா ஊரடங்கு கட்டுப்பாட்டுகள் அமலில் இருந்த போது அப்பகுதிக்கு பேருந்துகள் இயக்கப்படாமல் இருந்தது. ஆனால் கட்டுப்பாடுகள் நீங்கிய பிறகும் அண்ணா நகர் பகுதிக்கு பேருந்துகள் இயக்கப்படாமல் இருந்தது. இதனால் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து 21,21பி பேருந்துகளை மட்டும் அப்பகுதியில் இயக்காமல் மற்ற 3 பேருந்துகளை இயக்கி உள்ளனர். அந்த பேருந்துகளும் முழுமையாக இயக்கப்படவில்லை. காலை 6 முதல் 10மணி வரையும் மாலை 4.30க்கு மேல் வெறும் 2 முறை மட்டுமே இயக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
இதற்கு முக்கியமான காரணம் அண்ணாநகரில் இருந்து பேருந்து இயக்கப்பட்டால் பட்டியலின மக்கள் வரும்போதே அமர்ந்து கொள்கின்றனர். அவர்களுடன் சரிசமமாக அமர்ந்தோ அல்லது அவர்கள் முன்பு நின்று கொண்டு வர வேண்டுமா என சாதிய ஆதிக்க நோக்கத்துடன் சிலர் போக்குவரத்து அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளனர்.
இதனால் சாதிய ஆதிக்கவாதிகளின் வற்புறுத்தலை தொடர்ந்து பேருந்து இயக்கப்படாமல் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடமும் புகார் அளிக்கப்பட்டது. இந்த விவகாரம் குறித்த செய்திகள் வெளியான நிலையில் மாநில எஸ்சி, எஸ்டி ஆணையம் செப்டம்பர் 24ம் தேதிக்குள் 21ம் நம்பர் பேருந்தை இயக்க வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால் இந்த உத்தரவை கண்டுகொள்ளவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது.
அதே சமயம் போளுவாம்பட்டி செல்லும் 64சி பேருந்தை அண்ணா நகர் பகுதியில் இயக்கியதோடு சாதிய பிரச்சனைகள் இல்ல என்று அறிக்கை சமர்பிக்கப்பட்டது. இதன் சாதிய ஆதிக்கவாதிகளுக்கு ஆதரவாக சில அரசியல் கட்சிகளின் பிரமுகர்களும் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் 21 எண் பேருந்தை அண்ணா நகர் பகுதியில் இயக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணத்திற்கு கடந்த மாதம் புகார் அனுப்பினர்.
இதைத்தொடர்ந்து தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் மாவட்ட ஆட்சியருக்கும் போக்குவரத்து துறை செயலாளருக்கும் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில் அண்ணா நகர் பகுதியில் பேருந்தை இயக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
