டொனால்ட் டிரம்பின் கனவான நோபல் பரிசை இதுவரை அமெரிக்காவின் 4 அதிபர்களும், ஒரு துணை அதிபரும் பெற்றுள்ளனர்.
உலக அளவில் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் போன்ற துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் கடந்த திங்கள் கிழமை தொடங்கி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று வழங்கப்படும் அமைதிக்கான நோபல் பரிசுக்கு 338 பேர் பரிந்துரைக்கப்பட்டதை நார்வே நோபல் குழு உறுதி செய்துள்ளது. இதில் 244 தனிநபர்களும் 94 அமைப்புகளும் அடங்கும். இந்நிலையில் 2025 அமைதிக்கான நோபல் பரிசு யாருக்கு என்பதை உலகம் முழுவதும் எதிர்நோக்கி காத்திருக்க காரணம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.
7 போர்கள் நிறுத்திம்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தான் அதிபராக உள்ள நிலையில், இந்தியா, பாகிஸ்தான், தாய்லாந்து, கம்போடியா, ஆர்மீனியா, அஜர்பைஜான், கொசோவோ மற்றும் செர்பியா, இஸ்ரேல் மற்றும் ஈரான், எகிப்து மற்றும் எத்தியோப்பியா, ருவாண்டா மற்றும் காங்கோ போர் என 7 போர்களை நிறுத்தி உள்ளேன். அதனால் எனக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று தனது ஆசையை வெளிப்படுத்தி இருந்தார். அதிபர் டிரம்பிற்கு இந்த ஆசை வர இவருக்கு முன் பாரக் ஒபாமா உள்ளிட்ட 4 அதிபர்களுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டதும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.
நோபல் பரிசு பெற்ற அமெரிக்க அதிபர்கள்
தியோடர் ரூஸ்வெல்ட்
நோபல் பரிசைப் பெற்ற முதல் அமெரிக்க அதிபரான ரூஸ்வெல்ட்டுக்கு, 1906ம் ஆண்டு வழங்கப்பட்ட அவரது பதக்கம் இன்னும் வெள்ளை மாளிகையின் மேற்குப் பிரிவின் ரூஸ்வெல்ட் அறையில் வைக்கப்பட்டுள்ளது. போர்ட்ஸ்மவுத் ஒப்பந்தத்தின் மூலம் ரஷ்ய-ஜப்பானியப் போருக்கு மத்தியஸ்தம் செய்ததற்காக விருது வழங்கப்பட்டது.
உட்ரோ வில்சன்
அமெரிக்காவின் 28-வது அதிபரான வில்சன், முதல் உலகப் போரை முடிவுக்குக் கொண்டு வந்ததிலும், அமைதியை பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட உலகின் முதல் அரசுகளுக்கிடையேயான அமைப்பான லீக் ஆஃப் நேஷன்ஸை உருவாக்கியதிலும் அவரது பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் 1919ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
ஜிம்மி கார்ட்டர்
அமெரிக்காவின் 39-வது அதிபரான ஜிம்மி கார்ட்டருக்கு கடந்த 2002ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. சர்வதேச மோதல்களுக்கு அமைதியான தீர்வுகளைக் காணவும், ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளை முன்னேற்றவும், பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியை மேம்படுத்தவும் அவர் மேற்கொண்ட முயற்சிகளுக்காக இந்த விருது வழங்கப்பட்டது.
பராக் ஒபாமா
44-வது அமெரிக்க அதிபரான ஒபாமா, தான் பதிவியேற்ற ஒரு வருட காலத்திற்குள்ளாகவே, அணு ஆயுதக் குறைப்பு மற்றும் காலநிலை நடவடிக்கைக்கான அவரது பரிந்துரைகள் உட்பட, “சர்வதேச ராஜதந்திரத்தையும், மக்களிடையே ஒத்துழைப்பையும் வலுப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டதற்காக கடந்த 2009ம் ஆண்டு அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.
அல் கோர் (துணை அதிபர்)
அமெரிக்க முன்னாள் துணை அதிபர் அல் கோர். இவர் மனிதனால் உருவாக்கப்பட்ட காலநிலை மாற்றம் குறித்த அதிக அறிவை வளர்த்து பரப்புவதற்கான அவரது முயற்சிகளுக்காக அவருக்கு 2007ம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசை, காலநிலை மாற்றம் தொடர்பான அரசுகளுக்கிடையேயான குழுவுடன் பகிர்ந்து கொண்டார்.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்புக்கு இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்குமா என்பது ஒரு சில மணி நேரங்களில் தெரியவரும்.
டிரம்ப் விமர்சனம்
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், “நான் 8 போர்களை நிறுத்திவிட்டேன். இதற்கு முன்பு அதுபோன்று நடந்ததில்லை. ஆனால் அவர்கள் (நோபல் பரிசு குழு) என்ன செய்தாலும் பரவாயில்லை. நான் அதற்காக அதை செய்யவில்லை என்பது எனக்கு தெரியும். நான் நிறைய உயிர்களைக் காப்பாற்றவே அதை செய்தேன். அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா ஒன்றும் செய்யவில்லை. இருந்தபோதிலும் அவருக்கு ஒரு பரிசு கிடைத்தது. ஆனால் அவர் நம் நாட்டை அழித்தார். ஒபாமா ஒரு நல்ல அதிபர் அல்ல” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்
இந்தியாவை பொறுத்தவரை கடந்த 1979ம் ஆண்டு ஏழை மற்றும் ஆதரவற்றவர்களுக்கு சேவை செய்ததற்காக அன்னை தெரசா அமைதிக்கான நோபல் பரிசை வென்றார்.
இதேபோல் குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிராக போராடிய அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி பெறுவதை உறுதி செய்வதற்காக கடந்த 2014ம் ஆண்டு கைலாஷ் சத்யாந்திக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழக்கப்பட்டது.