தமிழக பாஜகவில் 28 பதவிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்ட நிலையில், தான் உட்பட ஒரு இஸ்லாமியருக்கு கூட பொறுப்பு வழங்கவில்லை என அக்கட்சியை சேர்ந்த அலிஷா அப்துல்லா கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜகவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவு, அரசு தொடர்பு மற்றும் மத்திய நலத்திட்டங்கள் பிரிவு, தேசிய மொழிகள் பிரிவு, விருந்தோம்பல் பிரிவு, ஆன்மீக மற்றும் கோயில் மேம்பாட்டு பிரிவு, விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு என மொத்தம் 28 பிரிவுகளுக்கு நேற்று புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டனர்.
அதில் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவுக்கு நியமிக்கப்பிட்ட இரண்டு பொறுப்பாளர்களில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனின் மகன் நயினார் பாலாஜியும் ஒருவர்.
இந்த அறிவிப்பு கட்சியினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்ப்பாக பாஜகவில் இருக்கும் கிருஸ்துவ மற்றும் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு எந்த பதவியும் வழங்கப்படவில்லை என்பது விவாதப் பொருளாகியுள்ளது.

இதுதொடர்பாக பைக் ரேஸரான அலிஷா அப்துல்லா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் , “பிரதமர் மோடி மற்றும் அண்ணாமலைக்காக மட்டுமே பாஜகவில் நான் இணைந்தேன். ஏனென்றால், அவர்களின் பார்வை மிகவும் தெளிவாக உள்ளது. மதம் இல்லை! சாதி இல்லை! வெறும் கடின உழைப்பு மட்டுமே.
ஆனால் தற்போது வழங்கப்பட்டுள்ள கட்சி நியமனப் பட்டியலை பார்க்கும்போது, இந்தியாவின் பிரபலமான விளையாட்டு வீரர்களில் ஒருவராக இது மிகவும் வருத்தமளிக்கிறது.
நான் இந்த கட்சிக்கு 3 ஆண்டுகள் இரவு பகலாக மிகவும் கடினமாக உழைத்தேன்! ஆனால் துரதிர்ஷ்டவசமாக, 12 ஆண்டுகளாக கட்சியில் இருக்கும் கேசவன் விநாயகம் எந்த நல்ல காரியமும் செய்யவில்லை. நான் எனது வேலையைக் காண்பிக்க அவரை அணுகியபோது, அவர் என்னை அவமானப்படுத்திவிட்டு நடந்து சென்றுவிட்டார்.
இது முஸ்லிம்களுக்கு இங்கு இடமில்லை என்பதை நிரூபிக்கிறது. எனது அனைத்து கடின உழைப்பும் வீணாகிப் போனது வருத்தமாக உள்ளது. 28 பொறுப்புகளில் ஒரு கிறிஸ்தவர்களுக்கோ அல்லது முஸ்லிம்களுக்கோ இடமில்லை” என அலிசா தனது வேதனையை தெரிவித்துள்ளார்.