கோயில் குடமுழுக்கில் யாருக்கும் முதல் மரியாதை கூடாது என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்டம் மேலப்பனங்காடி கிராமத்தில் உள்ள அய்யனார் கோயில், முனியாண்டி சுவாமி கோயில், அருள்மிகு கருப்பசாமி கோயில், முத்துமாரியம்மன் கோயில் குடமுழுக்கை நடத்துவதற்கு அந்த ஊரில் வசிக்கும் முத்தரையர், மறவர் மற்றும் ஆதி திராவிடர் சமூக உறுப்பினர்களை கொண்ட ஒரு குழுவை அமைக்க வேண்டும் என்று மதுரையைச் சேர்ந்த ரத்தினம் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணையின் போது அறநிலையத் துறை சார்பில், ஏற்கனவே ஒரு தகுதியான நபர் கோயில் நிர்வாகத்தைக் கவனிக்க நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
ஐந்தாவது எதிர்மனுதாரர் ராஜேஷ்கண்ணன் சார்பில், குடமுழுக்கை நடத்தும் உரிமை தமக்கே இருக்கிறது என்று வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
அனைத்து தரப்பு வாதங்களையும் தொடர்ந்து இன்று (பிப்ரவரி 6) உத்தரவு பிறப்பித்த நீதிபதி ஸ்ரீமதி, “குடமுழுக்கு விழாவில் எந்தவொரு தனிநபருக்கோ அல்லது குறிப்பிட்ட சமூகத்தினருக்கோ ‘முதல் மரியாதை வழங்கக்கூடாது.
இந்த திருவிழாவை ஒரு தனிநபர் நடத்தக்கூடாது. மாறாக, அறநிலையத்துறையால் நியமிக்கப்பட்ட ‘தக்கார்’ தலைமையில், ஊரில் உள்ள அனைத்து சமூகங்களிலிருந்தும் தலா ஒரு பிரதிநிதியைக் கொண்டு ஒரு குழுவை அமைத்து விழாவை நடத்த வேண்டும்.
குடமுழுக்கு நடத்தும் உரிமை தமக்கு மட்டுமே இருக்கிறது என்று கூறிய ராஜேஷ்கண்ணன் என்ற தனிநபரின் வாதத்தை நீதிமன்றம் நிராகரிக்கிறது.
மத நிகழ்வுகளை நடத்துவதில் எந்த பாகுபாடும் இருக்கக்கூடாது.
ராஜேஷ் கண்ணன் அறநிலையத் துறையால் நியமிக்கப்பட்ட நபரிடமும், அவர் அமைக்கும் குழுவிடமும் குடமுழுக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்” என்று கூறி வழக்கை முடித்து வைத்தார்.
வரும் பிப்ரவரி 8ஆம் தேதி குடமுழுக்கு நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
