சிஎம் பதவியை ராஜினாமா செய்யும் நிதிஷ் குமார்… ஏன்? அடுத்த முதல்வர் யார்?

Published On:

| By Kavi

தமிழ்நாடு, அசாம், மேற்கு வங்கம், புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களுக்கான தேர்தல் பரபரப்புக்கு மத்தியில் பீகாரில் அரசியல் புயல் அடித்துள்ளது.

1974ல் இருந்து பீகாரின் தவிர்க்க முடியாத முக்கிய அரசியல்வாதியாக இருந்து வருபவர் நிதிஷ் குமார்.

ADVERTISEMENT

சட்டமன்ற உறுப்பினர், மக்களவை உறுப்பினராக இருந்து வந்த நிதிஷ் குமார் முதல்முறையாக 2000ஆம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணியில் போட்டியிட்டு முதல்வரானார். ஆனால் ஒரு மாதத்திலேயே தனது பதவியை ராஜினாமா செய்தார்.

மீண்டும் 2005-2010, 2010 – 2014,  2015 (பிப்ரவரி – நவம்பர்), 2015 – 2017 (மகா கூட்டணி சார்பில்), 2017 – 2020 (பாஜக-வுடன் இணைந்து), 2020 – 2022, 2024 (ஜனவரி மாதம் மீண்டும் பாஜக-வுடன் இணைந்து பதவியேற்றார்). 2025 (நவம்பர் மாதம் நடந்த சட்டப்பேரவை தேர்தல்) என 10 முறை பீகாரில் முதல்வராக இருந்தவர். 

ADVERTISEMENT

முன்னதாக நிதிஷ் குமார் பாஜகவை கடுமையாக எதிர்த்தவர். 2014ஆம் ஆண்டில் மோடிதான் பிரதமர் வேட்பாளர் என்று அறிவித்த போது  பாஜகவுடனான உறவை முறித்துக்கொண்டார். 

ஏன்… 2024 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றாக இணைந்தால் தான் பாஜகவை வீழ்த்த முடியும் என்று  அவர் எடுத்த தீவிர முயற்சியால் தான் ‘இந்தியா கூட்டணி’ அமைந்தது.  இந்தசூழலில் நிதிஷ்குமாரை இந்த கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் காங்கிரஸ் தலைவர் கார்கே அறிவிக்கப்பட்டார். இந்தசூழலில், இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறிய நிதிஷ் குமார் பாஜகவுடனே இணைந்துவிட்டார். 

ADVERTISEMENT

தொடர்ந்து 2025 தேர்தலில் பாஜக என்.டி.ஏவுடன் இணைந்து நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் போட்டியிட்டது.  

பீகார் சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 202 தொகுதிகளில் வெற்றி பெற்று தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியைத் தக்க வைத்தது. இதில் பாஜக 89, ஐக்கிய ஜனதா தளம் 85 தொகுதிகளில் வெற்றி பெற்றன. இதைத்தொடர்ந்து நிதீஷ் குமார் 10-வது முறையாக முதலமைச்சராகப் பதவியேற்றார்.

ஆனால் முதல்வராக பொறுப்பேற்ற மூன்று மாதங்களிலேயே அந்த பதவியை ராஜினாமா செய்துவிட்டு ராஜ்யசபா எம்.பியாக முடிவெடுத்துள்ளார் நிதிஷ் குமார். 

எப்போதும் பீகாரிகளுக்காக பாடுபடுவேன் என்று கூறிவந்த நிதிஷ் குமார், மாநில அரசியலில் இருந்து விலகியிருப்பது ஐக்கிய ஜனதா தள கட்சியில் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

நிதிஷ் குமார் நாடாளுமன்றத்துக்கு செல்லவிருக்கும் நிலையில் அவரது மகன் நிஷாந்த் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கவிருக்கிறார் என்ற யூகங்களும் பரவி வருகின்றன. ஆனால் வாரிசு அரசியலை கடுமையாக எதிர்த்தவர் நிதிஷ் குமார்.

நிதிஷ்குமாருக்கு தற்போது 75 வயதாகிறது. கடந்த சில ஆண்டுகளில், பொது நிகழ்ச்சிகளில் முதலமைச்சர் கலந்துகொண்ட சில வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. முக்கிய எதிர்க்கட்சியான தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா தளம் (RJD), இந்த வீடியோக்களை ஆதாரமாகக் கொண்டு முதலமைச்சரின் உடல்நிலை குறித்துக் கேள்விகளை எழுப்பி வந்தது.

எனவே,  அனுபவம் வாய்ந்த தலைவருக்கு  ஏற்பட்டுள்ள பணிச் சுமையைக் குறைக்கும். அதே சமயம், அவரது உடல்நிலை குறித்து எழுப்பப்படும் தொடர் கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டிய கட்டாயத்தில்  இம்முடிவை ஆளும் கூட்டணி எடுத்திருப்பதாக தகவல்கள் வருகின்றன. 

நிதிஷ் குமார் மாநிலங்களவைக்கு சென்றால் பாஜகவை சேர்ந்த ஒருவர் தான் முதல்வராவார் என்று கூறப்படுகிறது.  அப்படி நடந்ததால் பாஜகவை சேர்ந்த ஒருவர் பீகாருக்கு முதல்வராவது இதுவே முதல்முறை. 

இந்தசூழலில் நிதிஷ் குமாருக்குப் பதிலாக முதலமைச்சர் நாற்காலியில் அமரப்போகும் பாஜக தலைவர் யார் என்பது குறித்த யூகங்களால் பீகார் அரசியல் வட்டாரங்கள் பரபரப்பாகக் காணப்படுகின்றன.

துணை முதலமைச்சர் சாம்ராட் சௌத்ரி, மத்திய அமைச்சர் நித்யானந்த் ராய் மற்றும் பீகார் அமைச்சர் திலீப் குமார் ஜெய்ஸ்வால் ஆகியோர் முதல்வர் ரேஸ் பட்டியலில் முன்னிலையில் உள்ளனர். 

தற்போது முக்கிய இலாகாவான உள்துறையைக் கவனித்து வரும் சாம்ராட் சௌத்ரி, பீகார் பாஜகவின் செல்வாக்கு மிக்க தலைவர்களில் ஒருவராகவும், அரசாங்கத்தில் இரண்டாவது இடத்திலும் இருக்கிறார்.

நித்யானந்த் ராய் மத்திய உள்துறை இணையமைச்சராக உள்ளார். இவரும் முன்னாள் பீகார் பாஜக தலைவராவார்; மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் , ஒருமுறை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர்.

திலீப் குமார் ஜெய்ஸ்வால் மூன்று முறை சட்ட மேலவை உறுப்பினராகவும், பீகார் பாஜக தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

இவர்களுடன் டிகா தொகுதி எம்.எல்.ஏ சஞ்சீவ் சௌராசியா பெயரும் அடிபடுகிறது. இருப்பினும், பாஜக கடைசி நேரத்தில் ஆச்சரியமான முடிவுகளை எடுப்பதில் பெயர் பெற்றது. எனவே, தற்போது விவாதத்தில் இல்லாத ஒரு புதிய பெயரை முதலமைச்சர் பதவிக்கு அவர்கள் கொண்டு வரவும் அதிக வாய்ப்புள்ளது. 

எனினும் நிதிஷ் குமார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதற்கு அவரது கட்சியினர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.  “நிதிஷ் குமாரை வைத்துதானே வாக்கு கேட்டு நாங்கள் வீடு வீடாகச் சென்றோம். அவர் இனி முதல்வராக இல்லாவிட்டால், பீகார் மக்கள் எங்கே போவார்கள்?” என்று அவரது கட்சி சகா ராஜீவ் ரஞ்சன் படேல் கேள்வி எழுப்பியுள்ளார்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share