திருமணம் நடந்தால் மகிழ்ச்சி… இல்லையென்றால் அதை விட மகிழ்ச்சி… என நடிகை நித்யா மேனன் கூறியுள்ளார்.
ஓகே கண்மணி, திருச்சிற்றம்பலம், காதலிக்க நேரமில்லை உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்து தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டனர் நித்யா மேனன்.
இன்று (ஜூலை 25) நித்யாமேனன், விஜய் சேதுபதி நடிப்பில் தலைவன் தலைவி படம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது.
படம் வெளியாவதையொட்டி, ப்ரோமோசன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட நித்யா மேனன், பல்வேறு யூடியூப் சேனல்களுக்கும் பேட்டி அளித்தார்.
இதில் ‘ சினிஉலகம்’ சேனலுக்கு நடிகை சுகாஷினியிடம் நித்யா மேனன் அளித்த பேட்டியில், “என்னுடைய உடலமைப்பை, தலைமுடியை எல்லாம் மாற்றிக்கொண்டுதான் நடிக்க வேண்டுமென்றால் அப்படி ஒரு படம் எனக்கு வேண்டாம். நான் இப்படிதான் இருப்பேன். என்னால் எதையும் மாற்றிக்கொள்ள முடியாது. உங்களுக்கு ஓகே என்றால், நான் நடிக்க வருகிறேன் என்றுதான் சொல்வேன்.
நான் முதன்முதலில் தெலுங்கு படத்தில் நடிக்க வந்தபோது, மற்ற நடிகைகள் எல்லாம் உயரமாக, அழகாக இருப்பார்கள். ஆனால் நான் அப்படி இருக்கமாட்டேன்.
அந்த படத்தில் நான் நடித்ததை தொடர்ந்து, எல்லோரும் சுருட்டை முடியை நம்பிக்கையுடன் வைத்துக்கொள்ள விரும்பினர். இன்றைக்கு எல்லோரும் இதை விரும்புகிறார்கள்.
என்னிடம் ஒருவர் கதை சொல்ல வருகிறார், அதை பிடிக்காமல் நான் மறுக்கிறேன் என்றால் உடனே அவருக்கு ஈகோ வந்துவிடும். உடனே என்னை குள்ளமாக இருக்கிறாள், இந்த கதைக்கெல்லாம் செட் ஆக மாட்டாள் என என்னை குறை சொல்வார்கள். இதெல்லாம் நடந்திருக்கிறது” என தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்.
தொகுப்பாளின் ரம்யாயின் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், ”நான் குழந்தையாக இருக்கும் போது எனது அம்மா பாட்டியிடம் விட்டுவிட்டு வேலைக்கு சென்றுவிடுவார். நான் பாட்டியைதான் அம்மாவாக பார்த்தேன். பள்ளிகளிலும், நட்பு வட்டாரங்களில் இருந்தும் நான் தனியாகத்தான் இருந்தேன்” என்றார்.
தனது காதல், திருமண அனுபவம் குறித்து பேசிய நித்யா மேனன், எனது காதல் அனுபவங்கள் வலியுடையதாகவே இருக்கும். வாழ்க்கையில் ஒரு ஆத்ம துணையை தேடினேன். ஆனால் அப்படியொரு துணை கிடைக்கவில்லை. இதுபோன்ற உணர்வுகளில் இருந்து நான் வெளியே வந்துவிட்டேன். தனியாக பயணம் செய்வதுதான் உண்மையான சுதந்திரத்தை தருகிறது.
ஒருவேளை அப்படிப்பட்ட ஆத்ம துணையை கண்டுபிடித்தால் நாளையே கூட திருமணம் செய்துகொள்வேன். திருமணம் நடந்தால் மகிழ்ச்சி… இல்லையென்றால் அதை விட மகிழ்ச்சி… ரத்தன் டாடாவும் திருமணம் செய்துகொள்ளவில்லை” என்று கூறியுள்ளார்.