புதிதாக ஒரு திரைப்படம் வெளியாகும்போது, தியேட்டருக்கு வர வேண்டுமென்ற உந்துதலை ரசிகர்களுக்குத் தருவது எது?
அந்த படத்தில் அமைந்துள்ள ‘காம்பினேஷன்’. இந்த படத்தின் நாயகன், நாயகி யார் என்று தொடங்கி இதன் இயக்குனர், வசனகர்த்தா, ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் என்று அனைத்து கலைஞர்களின் ஒன்றிணைப்பும் இணையும்போது, ரசிகர்கள் மனதில் அது குறித்த கற்பனை தானாகப் பெருகும். அது உயர்ந்து நின்றால் கூட்டம் தியேட்டருக்குப் படையெடுக்கும். Thalaivan Thalaivi Teaser
கிட்டத்தட்ட அப்படியொரு ‘காம்பினேஷனாக’ அமைந்திருக்கிறது பாண்டிராஜ் – விஜய் சேதுபதி இணைந்திருக்கிற புதிய படம்.
இதில் நாயகி நித்யா மேனன் என்றதும் அந்த ஆச்சர்யம் இன்னும் அதிகமானது. இசையமைப்பது சந்தோஷ் நாராயணன். ஒளிப்பதிவு செய்திருப்பவர் எம்.சுகுமார். வீரசமர், பிரதீப் இ.ராகவ், எம்.ஆர்.ராஜகிருஷ்ணன், பாபா பாஸ்கர் என்று பல கலைஞர்கள் இதில் இணைந்திருந்தாலும், ஆக்ஷன் கொரியோகிராபி செய்திருக்கும் கலை கிங்சனின் பெயர் சற்று பளிச்சென்று தெரிகிறது.
என்னதான் ‘குடும்பப்படம்’ என்கிற முத்திரை பதிந்தாலும், இதில் ஆக்ஷனுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும் என்று உணர்த்தியிருக்கிறது இப்படத்தின் டைட்டில் டீசர்.
இப்படத்தின் பெயர் ‘தலைவன் தலைவி’. ‘இவங்க நம்மளை மாதிரி நார்மல் இல்ல ப்ரெண்ட்ஸ்’ என்று யோகிபாபு பேசுகிற வசனத்திற்கு முன்னதாக, கொத்து புரோட்டாவை தோசைக்கல்லில் அடித்தவாறே விஜய் சேதுபதியும் நித்யா மேனனும் ‘கணவன் – மனைவி’யாகச் சண்டையிடுகிற ஷாட் இடம்பெற்றிருக்கிறது. இது போக கிராமத்து கதை, குலதெய்வக் கோயில், காதல் திருமணம், சொந்த பந்தங்கள், துப்பாக்கி பயம் என்று சில விஷயங்கள் இக்கதையில் அடங்கியிருப்பதை உணர்த்துகிறது இந்த டீசர்.
‘முரட்டுத்தனமான காதல் கதை’ என்கிற அர்த்தம் தொனிக்க, தலைவன் தலைவியை ஒட்டி ‘a rugged love story’ என்ற வார்த்தைகள் ‘டேக்லைன்’ஆகத் தரப்பட்டிருக்கின்றன.
சமீபகாலமாக சத்யஜோதி தயாரிப்பில் வந்த படங்கள், தற்போதிருக்கிற ட்ரெண்டை தலைகீழாகப் புரட்டிப் போடுவதாக அமையவில்லை. இந்த படம் அந்தக் குறையைத் தீர்க்குமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். Thalaivan Thalaivi Teaser
விஜய் சேதுபதியைப் பொறுத்தவரை, இப்படம் ‘மகாராஜா’வுக்குப் பிறகு வெளியாகிறது. அந்த எதிர்பார்ப்பை ஈடு செய்கிற வகையில் இருந்தாலே இது மாபெரும் வெற்றியைப் பெறும்.
‘எதற்கும் துணிந்தவன்’னில் வேறொரு பார்முலாவில் இறங்குகிறேன் என்று நம்மைச் சோதித்திருந்தார் இயக்குனர் பாண்டிராஜ். இப்படத்தில் அப்படியான விஷப் பரீட்சைகள் இல்லாமல் நம்மை மகிழ்விப்பார் என்று நம்புவோம்.. Thalaivan Thalaivi Teaser


