நிபா வைரஸ்: கோவையில் 6 சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு தீவிரம்!

Published On:

| By Minnambalam Desk

Kerala TN Nipha Virus

கேரள மாநிலம் மலப்புரம், பாலக்காடு ஆகிய மாவட்டங்களில் கடந்த சில மாதங்களாக நிபா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளது. இதைத் தொடர்ந்து தமிழக கேரள எல்லைப் பகுதிகளில் 6 சோதனை சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. Nipah Virus

வவ்வால்கள் சாப்பிட்ட பழத்தை மனிதர்கள் சாப்பிடுவதால், நிபா வைரஸ் தொற்று ஏற்படுகிறது. இது மனிதர்களிடையே பரவக்கூடியது. மனித உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் இந்த நோய் கேரளாவில் பரவி வருகிறது.

ADVERTISEMENT

கேரளாவில் பாலக்காட்டைச் சேர்ந்த 58 வயது நபர் அங்குள்ள மருத்துவமனையில் நிபா வைரஸ் அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அந்த நபர் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது ரத்த மாதிரிகளைப் பரிசோதித்ததில் நிபா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு மாவட்டங்களில் நிபா நோய் அறிகுறிகளுடன் சுமார் 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் நிபா வைரஸ் பாதிப்பால் பலியானவர்கள் மற்றும் நோய் அறிகுறி உள்ளோருடன் தொடர்பிலிருந்த 500க்கும் மேற்பட்டோர் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கோழிக்கோடு, மலப்புரம், திருச்சூர், வயநாடு, கண்ணூர், பாலக்காடு ஆகிய மாவட்டங்களில் தீவிர நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியுள்ளார். ஏற்கனவே மலப்புரத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி 10 நாட்களுக்கு முன் நிபா பாதிப்பால் பலியான நிலையில் தற்போது இரண்டாவது நபர் உயிரிழந்துள்ளார்.

ADVERTISEMENT

தமிழக கேரள எல்லையில் கண்காணிப்பு தீவிரம்

இதைத்தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக கேரள எல்லையோர பகுதிகளில் கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து கோவை வரும் மக்களுக்கு தெர்மல் ஸ்கேன் கருவி மூலம் காய்ச்சல் பரிசோதனை செய்த பின்னரே மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர். கேரளாவின் எல்லை பகுதியில் அமைந்துள்ள கோவையில் வாளையார், மீனாட்சிபுரம், கோபாலபுரம், ஆனைகட்டி, வீரப்ப கவுண்டனூர், பட்டசாலை ஆகிய 6 இடங்களில் உள்ள சோதனைச் சாவடிகளில் மாவட்ட சுகாதாரத் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

ADVERTISEMENT

சுகாதார ஆய்வாளர் செவிலியர் உள்ளிட்ட மூன்று பேர் அடங்கிய குழுவினர் கேரளாவில் இருந்து கோவை வருபவர்களுக்கு தெர்மல் ஸ்கேன் மூலம் காய்ச்சல் பரிசோதனை செய்து வருகின்றனர். அதேபோல் உடல் வலி உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால் முகவரி விபரங்கள் சேமிக்கப்படுகின்றன.

நீலகிரியில் நோய் பாதிப்பு இல்லை

இதேபோல் கேரள எல்லையோர பகுதியில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டத்தில் உள்ள புதிர்காடு, தாளூர், கீழ்நாடு காணி உள்ளிட்ட சோதனை சாவடிகளில் சுகாதாரத்துறை அறிவுறுத்தலின் பெயரில் கேரளாவிலிருந்து வரும் வாகனங்கள் சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றன. இந்நிலையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அம்மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா, நீலகிரியில் இதுவரை நிபா வைரஸ் பரவல் இல்லை. நிபா வைரஸ் தொற்றுக்கான அறிகுறி தென்பட்டால் சுகாதார துறையினரை தொடர்பு கொள்ள கட்டணமில்லா தொலைப்பேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை” என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share