கோழி பிடிப்பது போல தத்ரூபமாக நடித்துக் காட்டி அதன் மூலம் வாய்ப்புப் பெற்று சின்னத்திரையில் நடிகராக அறிமுகமானவர் போஸ் வெங்கட்.
சின்னத் திரையில் இருந்து பெரிய திரை நடிகர்… அப்புறம் கன்னி மாடம் என்ற படத்தின் இயக்குனர்…
மேற்கொண்டு திமுக அரசியல்வாதி என்று, படிக்கட்டையே லிஃப்ட் ஆக்கி முன்னேறியவர் போஸ் வெங்கட்.
இவர் அடுத்து இயக்கிய சார் என்ற படம் வெற்றி எனும் விருதை வாங்கவில்லை.
ஆனாலும் மனம் தளராத விக்ரமன் போல செயல்பட்டு, சினிமா என்னும் வேதாளத்தை சமாதானப்படுத்திய போஸ் வெங்கட் தனது அடுத்த படத்தை இயக்குகிறார்.
கடந்த 35 ஆண்டுகளாக துபாயில் முன்னணி தொழிலதிபராக திகழும் கே ஆர் ஜி மூவிஸ் கண்ணன் ரவி தயாரிப்பில் ஏழாவதாக உருவாகும் இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.
“விளையாட்டை மையமாகக் கொண்ட இந்த படம் காதல், குடும்பம், சமூகம் என்று பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து சுவாரசியமாகப் பேசும்.. யுவன் ஷங்கர் ராஜாவுடன் இணைவது மிகுந்த மகிழ்ச்சி. என்கிறார் போஸ் வெங்கட்”.
படம் சிறப்பாக இருந்தால் மக்களும் மகிழ்வார்கள். விளையாட்டுப் படம் என்பதற்காக விளையாட்டுத்தனமாக இருக்க முடியாதே.
– ராஜ திருமகன்
