மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக, இந்தியாவில் சமையல் எரிவாயு (LPG) தட்டுப்பாட்டைத் தவிர்க்கவும், கள்ளச் சந்தையைத் தடுக்கவும் எண்ணெய் நிறுவனங்கள் முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளன.
ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்திய தாக்குதலால் போர் ஒரு வாரத்தைத் தாண்டியுள்ளது. இதனால் ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) வழியாக எரிபொருள் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, இந்தியாவுக்கு இறக்குமதி சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 60 சதவீதத்திற்கு மேல் உயர்ந்து, 100 டாலரைத் தாண்டியுள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அண்மையில் உயர்த்தப்பட்டுள்ளது. வணிகப் பயன்பாட்டு (19 கிலோ) சிலிண்டர் விலை ரூ.115 உயர்ந்து, சென்னையில் ரூ.2,043.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. டெல்லியில் ரூ.1,883, மும்பையில் ரூ.1,835 ஆக உள்ளது.வீட்டு உபயோக சிலிண்டர் (14.2 கிலோ) விலை சென்னையில் ரூ.60 உயர்ந்து ரூ.928.50க்கு விற்கப்படுகிறது.
போர் பதற்றம் காரணமாக பொதுமக்கள் தேவைக்கு அதிகமாக சிலிண்டர்களை வாங்கத் தொடங்கியுள்ளனர். முன்பு 55 நாட்கள் இடைவெளியில் முன்பதிவு செய்தவர்கள், தற்போது 15 நாட்களுக்குள் முன்பதிவு செய்யத் தொடங்கியுள்ளதாக அரசு தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.இதனால் செயற்கைத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, எண்ணெய் நிறுவனங்கள் முன்பதிவு கால அவகாசத்தை 21 நாட்களிலிருந்து 25 நாட்களாக அதிகரித்துள்ளன. ஒரு சிலிண்டர் வாங்கிய பிறகு அடுத்ததை முன்பதிவு செய்ய குறைந்தபட்சம் 25 நாட்கள் காத்திருக்க வேண்டும்.
மத்திய பெட்ரோலிய அமைச்சகம் எடுத்துள்ள முக்கிய நடவடிக்கைகள்:
உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க அனைத்து சுத்திகரிப்பு நிலையங்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. வீடுகளுக்கான சமையல் எரிவாயு விநியோகத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
வளைகுடா நாடுகளைத் தவிர்த்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நார்வே போன்ற நாடுகளிலிருந்து எரிவாயு இறக்குமதி ஒப்பந்தங்களைத் துரிதப்படுத்தியுள்ளது.
போதிய கையிருப்பு இருப்பதாக மத்திய அரசு தெரிவித்தாலும், சென்னை உள்ளிட்ட சில பகுதிகளில் வணிக சிலிண்டர் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் வணிக சிலிண்டர் விநியோகத்தை கட்டுப்படுத்தியுள்ளதால், உணவகங்கள், சிற்றுண்டி கடைகள் போன்றவை கடும் நெருக்கடியில் உள்ளன.
உணவகங்களுக்கு நெருக்கடி
கோவை, சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களில் உணவகங்கள் மெனுவைக் குறைப்பதாகவும், சில இடங்களில் செயல்பாட்டை நிறுத்துவதாகவும் அறிவித்துள்ளன.
இது குறித்து நேற்று எண்ணெய் நிறுவனங்களுடன் தமிழக தலைமைச் செயலாளர் முருகானந்தம் ஆலோசனை நடத்தினார். இதைத்தொடர்ந்து தமிழ்நாடு அரசு, எண்ணெய் நிறுவனங்களிடம் சமையல் எரிவாயு கையிருப்பு குறித்த அறிக்கையை இன்று மதியத்திற்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
சிலிண்டர் தட்டுப்பாடு தொடர்ந்தால் வீட்டு உபயோக சிலிண்டர் விலை மேலும் ரூ.200 வரை உயரலாம்; வணிக சிலிண்டர் விலை ரூ.400 அல்லது அதற்கு மேல் உயர வாய்ப்புள்ளது என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
