தமிழகத்தில் கனிமவள கொள்ளை நடைபெறுகிறது; தவெக ஆட்சியில் விவசாயிகளின் பயிர் கடன்களை ரத்து செய்வோம் என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்தார்.
தஞ்சாவூரில் இன்று மார்ச் 4-ந் தேதி தவெக நிர்வாகிகளுடனான சந்திப்பு கூட்டத்தில் விஜய் பேசியதாவது: நான் போன மீட்டிங்ல வேலூர்ல பேசும்போது சொல்லியிருந்தேன், ‘தமிழ்நாடுதான் விஜய், விஜய் தான் தமிழ்நாடு’ அப்படின்னு நான் சொல்லியிருந்தேன். அது ஏன் அப்படி சொன்னேன் அப்படின்னா, தமிழ்நாட்டு மக்களுடைய ஒரே பிரதிநிதியா, உண்மையான ஒரு பிரதிநிதியா நாம மட்டும் தான் இருக்கிறோம் அப்படின்றதுக்காக தான் அப்படி சொன்னேன்.

விஜய் Vs ஸ்டாலின்
அப்புறம் இந்த தேர்தல் பத்தியும் நான் சொல்லியிருந்தேன்: ‘தமிழ்நாடு வெர்சஸ் ஸ்டாலின் சார்’, அதாவது ‘விஜய் வெர்சஸ் ஸ்டாலின் சார்’. அதையும் நான் சொல்லியிருந்தேன். அப்புறம் இன்னொரு கேள்வியும் கேட்டிருந்தேன், ‘இது தமிழ்நாடு சட்டசபைக்கான ஒரு தேர்தல், இதை ஏன் வந்து தமிழ்நாட்டுக்கும் டெல்லிக்கும் ஆன ஒரு எலக்ஷன்-ன்னு சொல்றீங்க?’ அப்படின்னும் நான் கேட்டிருந்தேன்.
உடனே, ‘விஜய் வந்து பாஜாக-வுக்காக பேசுறாரு’ அப்படின்னு எல்லாம் திரிச்சு பேச ஆரம்பிச்சுட்டாங்க. அப்புறம் ரெகுலரா ஒன்னு பண்ணுவாங்க இல்ல, நம்மளுடைய சிறுபான்மை சகோதரர்களை பயமுறுத்தி பயமுறுத்தி ஒரு ஏமாத்து வேலை ஒன்னு செய்வாங்க இல்ல, அது இனிமே அவங்களால தொடர்ந்து செய்ய முடியாதுன்னு அவங்களுக்கு தெரிஞ்சு போச்சு. அதனாலதான் நான் என்ன பேசினாலும் அதை திரிச்சு பேசுறது, அந்த தில்லுமுல்லு வேலைகள் எல்லாம் அவங்க செய்ய ஆரம்பிச்சுட்டாங்க.

திமுக மீது கடும் தாக்கு
சென்னையில ‘டெல்லி டெல்லி’-ன்னு கூவுறதும், அடிக்கிற கொள்ளைக்கு ரைடு வந்துட்டா டெல்லிக்கு வெள்ளைக்கொடை பிடிக்கிறதும்.. இதெல்லாம் யாருன்னு உங்களுக்கே நல்லா தெரியும். ‘தமிழ்நாட்டை காப்பாத்துறது திமுக தான், தமிழ்நாட்டை பிழைக்க வைக்கிறது திமுக தான், இதெல்லாமே பண்றது திமுக தான், ஸ்டாலின் சார் தான்’ இதெல்லாம் ஒர்க்அவுட்டே ஆகாது பாஸ்! சின்ன பசங்க எல்லாம் சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க: ‘ஓம் சக்தி பராசக்தி, திமுக ஒரு தீய சக்தி’.
அதனால இந்த தமிழ், தமிழ், தமிழ்நாடு.. இன்னொன்னு வேற ஒன்னு சொல்றாங்க. அது என்னடான்னா, ‘தமிழ்நாடு அணி, டெல்லி அணி’-யா. கிரிக்கெட்ல கூட தமிழ்நாடு அணியை டெல்லி அணியால தொட்டுக்கூட பார்க்க முடியாது. அப்படி இருக்கும்போது.. கிரிக்கெட்லயும் விசில போடுறது தமிழ்நாடு தான் – சிஎஸ்கே! வரப்போற எலக்ஷன்லயும் விசில போடப்போறது நம்ம தமிழக வெற்றிக் கழகம் (TVK) தான்.
தமிழ்நாடு தான் TVK, TVK தான் தமிழ்நாடு. இந்த அணி, அந்த அணி, டெல்லி அணி இதெல்லாம் அனைத்தும் உடைஞ்சு நொறுங்கும், TVK அடிச்சு நொறுக்கும்.

குடும்ப உறவு
எனக்கும் என்னோட மக்களுக்கும் நடுவுல வேற யாராலயும் உள்ள நுழையவே முடியாது. இது ஒரு அம்மா-பையன் உறவு, அப்பா-புள்ள உறவு, அண்ணன்-தங்கச்சி உறவு, அண்ணன்-தம்பி உறவு, அக்கா-தம்பி உறவு. இது சும்மா ஒரு எலக்ஷனுக்கு வந்த உறவு அப்படின்னு நினைச்சிடாதீங்க, இது இயற்கையாகவே அமைந்த உறவு. இது எவ்வளவு ஆழமான உறவுன்றத நான் உணர்ந்திருக்கிறேன். அதே மாதிரி நம்ம தமிழ்நாடு மக்களும் இதை உணர்ந்து இருக்காங்க.
இன்னும் சிம்பிளா சொல்லணும்னா, மத்தவங்களுக்கு வேணா இது எலக்ஷன், ஆனா எனக்கும் என்னை நேசிக்கிற மக்களுக்கும்: It is an emotion. And it is not an ordinary emotion, it is a powerful oceanic emotion.

உறுதி மொழி கொடுங்க..
இப்படி இருக்கும் போது வீட்டுக்கு வீடு விஜய், தமிழ்நாட்டுக்காக விஜய், வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு – இதெல்லாமே 100% இந்த எலக்சன்ல அது ப்ரூவ் ஆகும். நீங்க எல்லாரும் எனக்கு இன்னொரு உறுதிமொழியை ஒன்னு கொடுக்கணும்.
ஊழலற்ற, உண்மையான சமூக நீதியை நிலைநாட்ட நம் ஆட்சியை அமைப்பீங்கதானே? உங்களத்தான் கேட்கறேன், நம் ஆட்சியை அமைப்பீங்கதானே?
இந்த விஜய்க்கு ஒரு வாய்ப்பு கொடுப்பீங்கதானே? உண்மையிலேயே கொடுப்பீங்கதானே? இந்த விஜய நம்புறீங்கதானே? ஒவ்வொரு வீட்லயும் விசில் சத்தம் கேட்கும் தானே?
அந்த விசில் சத்தம் ஒவ்வொரு பூத்துலயும் புயலா ஒலிக்கும் தானே?
தேங்க்யூ… தேங்க்யூ… தேங்க்யூ…
விவசாயி மகனாக பிறக்க ஆசை
ஒரு டாக்டர் இருக்காருன்னா நாம எப்ப அவரப் பத்தி யோசிப்போம்? இப்ப நமக்கு ஏதாவது உடம்பு சரியில்லை அப்படின்னா அவர யோசிப்போம், அவர் ஞாபகம் வரும்.

அதே மாதிரி நமக்கு ஏதாவது ஒரு பிரச்சனை அப்படின்னா ஒரு வக்கீலை தேடிப் போவோம், அவர் ஞாபகத்துக்கு வருவாரு. இது மனித இயல்பு.
அந்தந்த பிரச்சனை வரும்போது நம்ம அவங்க அவங்களத் தேடிப் போவோம்.
ஆனா, on a daily basis நம்ம சும்மா சாப்பிடும்போது கூட நம்மள அறியாம ஒருத்தங்களப் பத்தி நினைப்போம்.
நம்மள அறியாம அவங்களுக்கு நாம நன்றி சொல்லுவோம்.
அந்த மதிப்பிற்குரிய அந்த மனிதர்கள் வேற யாருமில்லை – விவசாயி, விவசாயி, விவசாயி.
அவங்க பாக்குறதுக்கு வேணா சாதாரணமா இருப்பாங்க, ஆனா அவங்க சாதாரணமான மனிதர்கள்லாம் கிடையாது.
இந்த உலகத்தையும் மனிதர்களையும் படைச்சது கடவுள்னு சொல்லுவாங்க, ஆனா அந்த கடவுளுக்கே படையல் போடுற உயர்ந்த மனிதர்கள்தான் நம்ம விவசாயிகள்.

இந்த பூமியில உயிர் இருக்குது, இந்த பூமியில பூ பூக்கும், காய் காய்க்கும், பூத்துக் குலுங்கும்னு இந்த பூமியை அழகா காட்டி, இந்த பூமியை சாமியாக்கறதுல இயற்கையோடு சேர்ந்து நம்ம விவசாயிகளுக்கும் ஒரு முக்கிய பங்கு ஒன்னு இருக்கு.
அதனால நான் ஏதோ ஓவரா ஏதோ சொல்றேன்னு நினைக்காதீங்க. எனக்கு இந்த அடுத்த ஜென்மம், மறுபிறவியைப் பத்தி எல்லாம் எனக்குத் தெரியாது, அது உண்மை அப்படின்னா அடுத்த ஜென்மத்துல நான் ஒரு விவசாயி குடும்பத்துல பிறக்கணும்னு ஆசைப்படறேன்.
எனக்கு விவசாயத்தைப் பத்தி டீடைல்டா தெரியாது தான் – நான் ஒத்துக்குறேன்.
அதனால மத்தவங்க மாதிரி நானும் “டெல்டாகாரன் தான்” அப்படின்னு உங்க காதுல டால்டா ஊத்தலாம் நான் வரல.
திமுக அரசுக்கு கேள்விகள்
எனக்கு விவசாயத்தைப் பத்தி டீடைல்டா தெரியலைனா கூட அவங்க படுற கஷ்டங்களைப் பத்தி எனக்கு நல்லாவே தெரியும். நம்மளுடைய முதல் அரசியல் பயணம் தொடங்குனதே அந்த பரந்தூர் விஷயத்தைக் கையில எடுத்துதான்.
அதனால நம்மளுடைய இந்த ஆட்சி அமைஞ்சதும் தீர்க்க வேண்டிய முக்கியமான பிரச்சனைகள்ல நம்மளோட விவசாயப் பிரச்சனைகளும் ஒண்ணு.

முதல்வர் அவர்களுக்கு – “நீங்க அது செஞ்சுட்டேன், இது செஞ்சுட்டேன்” அப்படின்னு நிறையப் பெருமையா சொல்லிக்கிறீங்களே, ஒரு அடிப்படை ஒரு பிரச்சனையைப் பத்தி ஒன்னு பேசுவோமா?

தண்ணீர் திவால்
கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஐநா சபை ஒரு ரிப்போர்ட் ஒன்னு வெளியிட்டிருந்தாங்க. அது கூட தினத்தந்தி நியூஸ்ல கூட வந்துச்சு.
உடனே கூகுள் பண்ணி எதுவும் தேடாதீங்க. உங்க ஏஜென்சி வச்சு ஏதோ சர்வே கிர்வே எடுக்காதீங்க, எதுக்கு உங்களுக்கு சிரமம்? நானே என்னன்னு சொல்றேன்.
“தண்ணீர் திவால்” அப்படின்ற அந்தத் தலைப்புல, தண்ணியே இல்லாம திவாலாகப் போகுது அப்படின்ற அந்த கட்டுரையைப் படிக்கும்போது உண்மையிலேயே மனசுக்கு ரொம்ப பகீர்னு இருந்தது.
இந்தியாவுலயே, அதுவும் முக்கியமா நம்ம தமிழ்நாட்டுல இன்னும் கொஞ்ச காலத்துலயே தண்ணியே இல்லாம திவாலாகப் போகுதாம். அதுக்குக் காரணம்…
நிலத்தடி நீரை பாதுகாக்காம விட்டதுதான் காரணமாம். மண்ணையும் மணலையும் கொள்ளையடிச்சா பின்ன வேற என்ன நடக்கும்? மலைகளை முழுங்குனா பின்ன வேற என்ன நடக்கும்? கனிம வளங்களை கொள்ளையடிச்சா பின்ன வேற என்ன நடக்கும்?
மணல் கொள்ளை
இந்த மணல் கொள்ளையில ஈடுபட்டவங்க மேல நீங்க சரியா நடவடிக்கை எடுக்கலைன்னு, அது போதுமானதாக இல்லை அப்படின்ட்டு சென்னை உயர் நீதிமன்றம் சொன்னிச்சே மறந்துட்டீங்களா? இந்த மணல் கொள்ளை, கனிம வளக் கொள்ளை இதுக்கெல்லாம் காரணம் மணல் மாஃபியா குரூப் தான் அப்படின்னு மதுரை உயர் நீதிமன்ற அந்த கிளை சொன்னிச்சே அதை மறந்துட்டீங்களா? இந்த மணல் மாஃபியா குரூப்புக்கு ஆதரவு அளிக்கிறது யாரு? உங்க திமுக கவர்மெண்ட் தானே? அது இல்லைன்னு சொல்ல முடியுமா? அவங்களோட டீலிங்ல இருக்கிறது யாரு? நீங்க தானே? அது இல்லைன்னு சொல்ல முடியுமா?
தண்ணி திவாலாக போகுது, மணல் திவாலாக போகுது, கனிம வளம் திவாலாக போகுது. மொத்தத்துல உங்க ஆட்சியில தமிழ்நாடு திவாலாக போகுது. கடன் மேல கடன் வாங்கிட்டு உங்க கவர்மெண்ட்டே குப்புறப் படுத்துக்கிச்சு. உங்ககிட்ட பேசுறதும் ஒன்னுதான்…
விவசாயிகள் மீது குண்டாஸ்
சரி அதை விடுங்க. நம்ம விவசாயிகள் கஷ்டப்பட்டு விளைய வெச்ச அந்த நெல்லெல்லாம் மழையில நனைஞ்சு வீணா போச்சே, டெல்டாகாரன்னு சொல்லிக்கிற நீங்க அதை ஏதாவது கவனிச்சீங்களா? அவங்களோட போராட்டம் எதுக்காவது கூட போய் நின்றிருக்கீங்களா? குண்டாஸ்ல மட்டும் போடுவீங்க, இதானே உங்களோட அந்த சாதனை? பரந்தூர் பிரச்சனை உங்களோட உண்மையான நிலைப்பாடு என்ன? மேல்மா, மேல்மா விஷயத்துல உங்களோட உண்மையான நிலைப்பாடு என்ன?
கடைசி நேர திட்டங்கள்
தமிழகத்துல இருக்கிற எல்லா ஆறுகளையும் இணைப்போம், இந்தியாவிலேயே நாங்க தான் அதைப் பத்தி ஃபர்ஸ்ட் யோசிச்சோம் அப்படின்னு பெருமையா சொல்லிக்கிற இந்த திமுக கவர்மெண்ட் அவங்களோட நக் (Knack) என்னன்னு சொல்லவா? இந்த மாதிரி பெரிய பெரிய திட்டங்கள் எல்லாம் ஆட்சிக்கு வந்த உடனே செய்ய மாட்டாங்க. அந்த ஆட்சி முடியுற டைம்ல, அந்த கடைசி ஆறு மாசம், அந்த ஒரு வருஷம், அந்த ஒன்றை வருஷத்துல அதுக்கான திட்டத்தைக் கொண்டு வருவாங்க, அதுக்கான அடிக்கலை நாட்டுவாங்க.
அதுக்கப்புறம் எலக்சன் வரும், தோத்துருவாங்க. கேட்டா ‘எங்க ஆட்சி தான் முடிஞ்சிருச்சே’ அப்படின்னு நாடகமாடுவாங்க. இல்ல நான் தெரியாம தான் கேக்குறேன், மக்கள் மேல உங்களுக்கு உண்மையிலேயே அந்த அக்கறை இருந்துச்சுன்னா, ஆட்சிக்கு வந்த உடனே இந்த மாதிரி பெரிய பெரிய திட்டமெல்லாம் ஸ்டார்ட் பண்ணி பண்ண வேண்டியதுதானே? அது என்ன ஆட்சி முடியும்போது அடிக்கல் நாட்டுறது? ஓட்டுக்காக என்னென்னமோ பேசுவீங்க, ஆனா மக்கள் இதெல்லாம் நம்புறதுக்கு அவங்க என்ன ஏமாளின்னு நினைச்சீங்களா?

தவெக ஆட்சியில்…
மக்களே, நம்மளுடைய ஆட்சி அமைஞ்சதும் இந்த மாதிரி பெரிய பெரிய திட்டங்கள் எல்லாம் உடனே ஸ்டார்ட் பண்ணி பண்ணுவோம். அது அந்த அஞ்சு வருஷத்துக்குள்ள அதை முடிக்கவும் ட்ரை பண்ணுவோம். சோ இப்படிலாம் நம்ம பேசினா, காவேரி பிரச்சனையில உன் கருத்து என்ன? முல்லைப் பெரியாறு பிரச்சனையில உன் கருத்து என்ன? இப்படிலாம் அதெல்லாம் பத்தி உனக்கு என்ன தெரியும்? அப்படின்னு கேட்க ஆரம்பிச்சுருவாங்க. ஐயா உலக மகா மேதைகளே, ROV (Remotely Operated Vehicle) அதை வெச்சு தண்ணிக்குள்ளேயே போயி அணைகளோட உறுதித்தன்மையை ஆராய்ஞ்சு பார்க்கிற வரைக்கும் நான் எல்லாம் தெரிஞ்சு தான் வெச்சிருக்கேன்.
ஒருத்தன் சைலன்ட்டா இருக்கான் அமைதியா இருக்கான் அப்படின்னா உடனே அவனுக்கு எதுவுமே தெரியாதுன்னு நினைச்சுறாதீங்க. சும்மா கருத்து சொல்லிக்கிட்டு, கருத்து சொல்லிக்கிட்டு கம்பு சுத்திக்கிட்டு இருந்தா எல்லாமே நடந்துருமா? நச நச நசன்னு பேசி பேசி, அதை கேட்டு கேட்டு மக்கள் வெறுத்துப் போயிட்டாங்க. உருப்படியா ஏதாவது யோசிங்கய்யான்னு மக்கள் நினைக்கிறதை யாருக்கு தெரியுதோ தெரியலையோ எனக்கு அது நல்லாவே தெரியுது. உரிய இடத்துக்குப் போய் சம்பந்தப்பட்டவங்களோட பேசி அதுக்கான சொல்யூஷன் (Solution) என்னன்னு தெரிஞ்சுக்கிட்டு அதை ப்ராப்பரா (Properly) எக்ஸிகியூட் (Execute) பண்ணனும்.
மீனவர்கள் பிரச்சனை
அடுத்து நம்மளுடைய கடல் விவசாயிகளான நம்மளுடைய மீனவர்கள். மீனவர்களோட பிரச்சனைக்கு அப்பப்போ எந்திரிச்சு கடிதம் எழுதிட்டு திரும்ப தூங்க போயிருவாரு. அவ்வளவுதான், அதோட அது அப்படியே கிடக்கும். மானே, தேனே, பொன்மானே இப்படிலாம் கடிதம் எழுதுறதெல்லாம் வேலைக்கு ஆகாது. ஒன்றிய அரசுக்கு அந்த உண்மையான உணர்வுப்பூர்வமான அந்த அழுத்தத்தை கொடுக்கணும். நம்ம மீனவர்கள் மேல அவங்க கையே வைக்கக்கூடாது… கை வைக்க விடக்கூடாது.
உங்களுக்கான அந்த பாதுகாப்பு பக்காவா இருக்கணும், அதுதான் நம்மளோட ஒரே அஜெண்டா. மீனவர்களே, அடுத்து நம்மளோட ஆட்சி தான்! கவலைப்படாதீங்க, தைரியமா இருங்க. உங்களுக்கான பாதுகாப்பு பக்காவா இருக்கும்.
இப்படி இருக்கும்போது, ‘அடுத்ததும் நாங்க தான்’ அப்படின்னு சி.எம் சார் சொல்லுவாங்க. அதெல்லாம் நடக்கவே நடக்காது. ரெண்டாவது முறை வந்ததெல்லாம் சரித்திரமே கிடையாது.
இந்த சைனால ‘கிரேட் வால் ஆஃப் சைனா’ (Great Wall of China) கேள்விப்பட்டிருப்பீங்க. அதோடைய நீளத்தை விட பெரிய டாஸ்க் இது. ஆனாப்பட்ட அவங்க அப்பாவாலயே முடியல.
நான் முன்னாடியே சொன்ன மாதிரி, உரிய இடத்துக்குப் போய் சம்பந்தப்பட்டவங்களோட பேசி அதுக்கான சொல்யூஷன் என்னன்னு தெரிஞ்சுகிட்டு அதை எக்ஸிகியூட் பண்றதுதான் ஒரு தெளிவான அரசியல். சும்மா ஆறுதல் சொல்றதெல்லாம் தெளிவான அரசியல் கிடையாது.
மக்களுக்கான அரசியல்
இதெல்லாம் ஒரு ஹம்பக் அரசியல். அரசியலுக்கு வந்துட்டா கலெக்ஷன் பார்க்கலாம் அப்படின்றதெல்லாம் அரசியல் கிடையாது. உண்மையிலேயே மக்களுக்கான அந்த உழைப்பு இருக்கணும். அதனாலதான் நாம அரசியலுக்கு வந்திருக்கோம்.
இது எதிரிகளுக்கு நல்லாவே தெரியும். அதனாலதான் நம்மள சுத்தி அத்தனை சதிகள். அதுல முக்கியமான சதி என்ன தெரியுமா? ‘ஏய் இதப்பாரு… ஒன்னு நீ, இல்லன்னா நான். நான் இல்லன்னா நீ, நீ இல்லன்னா நான். நம்ம புள்ள வேற எவனும் நடுவுல வந்துறக்கூடாது’.
‘நாம ரெண்டு பேரால மட்டும்தான் மக்களை ஈஸியா ஏமாத்த முடியும். இந்த விஜய் வந்ததுனால நமக்கு பொழப்பே போச்சு. மக்கள் வேற அவனத்தான் நம்புறாங்க’.
‘நாம வெளிய அடிச்சுக்கிற மாதிரி அடிச்சுக்கிட்டாலும், உள்ள நம்மளோட டீலிங் பக்காவா இருக்கணும். மக்களோட ஃபீலிங்ஸ பத்தியெல்லாம் நமக்கு கவலை இல்லை. நமக்கு டீலிங் தான் முக்கியம். மாத்தி மாத்தி ஆட்சிக்கு வந்துரலாம்னு நினைச்சோம், ஆனா அது நடக்காது போல இருக்கு’.
கட்டுப்பாடுகள்
‘அதனால நீ என்ன பண்ற? எஸ்பிஓ (SPO), எஸ்பிஓ-ன்னு போட்டு ஒரு பக்கம் அவனைத் தடுத்துரு. இன்னொரு பக்கம் அவன் மேல பழி மேல பழி மேல பழி போட்டு நானும் தடுத்துறேன். என்ன ஓகேவா? டீலிங் ஓகேவா? ஓவர் ஓவர்’.
இல்லங்க, உண்மையிலேயே சிரிக்கிறதா என்ன பண்றதுன்னு எனக்குத் தெரியல. உண்மையிலேயே இப்படித்தான் இருக்கு அவங்க டீலிங் எல்லாம்.

ஜனநாயகனுக்கு குரல் கொடுத்தவர்கள்
இப்படி பழி மேல பழி போட்டு, கரூரில் ஆரம்பிச்சு நம்ம ‘ஜனநாயகன்’ படம் ரிலீஸ் வரைக்கும்… ஆனா அந்த ரிலீஸ் பிரச்சனைல நிறைய பேர் குரல் கொடுத்தாங்க.
ஆனா எனக்கும் என்னை நேசிக்கிற மக்களுக்கும் ‘இட் இஸ் ஆன் எமோஷன்’ (It is an emotion). எனக்கு முன்னாடி பட்டும் படாம குரல் கொடுத்தாங்க… பட் வாட் எவர் இட் இஸ் (But whatever it is). ‘அண்ட் இட் இஸ் நாட் அன் ஆர்டினரி எமோஷன்’ (And it is not an ordinary emotion). இந்த நேரத்துல என்னோட நன்றியைத் தெரிவிச்சுக்கிறேன்.
இப்படி நாம ஒன்னு வெளிப்படையா பேசுறதுனால, சி.எம் சாரோட மனநிலை இப்ப எப்படி இருக்கும் தெரியுமா? ஏற்கனவே கட்சிக்காரங்க தொல்லை தாங்க முடியல, தூங்க விடமாட்டேங்குறாங்க.
‘இந்த விஜய் வந்து தூங்க விடமாட்டேங்குறான். நம்ம பாட்டுக்கு ஹைவேல, சைக்கிள்ல, சோலோவா போலாம்னு நினைச்சோம். இவன் என்னடான்னா மக்கள் சக்தியோட வந்துட்டு இருக்கான்’.
‘இவன்தான் கேள்வி கேக்குறான்னு பார்த்தா, மக்களையும் கேள்வி கேட்க வைக்கிறான். 1000 ரூபாய் கொடுத்துட்டு இருந்தோம், 5000 ரூபாய் கொடுத்து ஏமாத்தலாம்னு பார்த்தா அதையும் கேள்வி கேட்க வைக்கிறான்’.
‘விசில் சத்தம் வேற விண்ணை முட்டுது. கூட்டணிக் கட்சிகள் தொல்லை வேற தாங்க முடியல. இவன் பண்ற பிரச்சாரத்தை முடக்கலாம்னு பார்த்தா, அப்பவும் மக்கள் அவன் பின்னாடிதான் நிக்கிறாங்க. என்ன பண்றது ஏது பண்றதுன்னு தெரியாத ஒரு மனநிலையில இருப்பாரு’.
ஒவ்வொரு வீட்டுலேயும் விஜய்..
ஆனா சார், நீங்க இந்த விஜயை முடக்கலாம். ஆனா ஒவ்வொரு வீட்டுல இருக்குற ஒவ்வொரு விஜயையும், ஒவ்வொரு விஜியையும் உங்களால முடக்கவே முடியாது.
அவங்கெல்லாம் ஆல்ரெடி பிரச்சாரத்தை ஸ்டார்ட் பண்ணிட்டாங்க சார். வீட்டுலயே குடும்பம் குடும்பமா இறங்குவாங்க பாருங்க பிரச்சாரத்துக்கு… அப்போ உங்களால மட்டும் இல்ல, எந்த… யாராலயும் தடுக்க முடியாது. ..முடியாது. நம்ம டவுன் சவுத்ல, ஒரு ஊர்ல உங்க அப்பாவுக்கு வெண்கலச் சிலை வைக்கணும்னு ட்ரை பண்ணீங்கல்ல? அதுக்கு சுப்ரீம் கோர்ட் என்ன சொன்னாங்க? ‘மக்களோட பணத்துல யாருக்கு புகழ் பாடப் பாக்குறீங்க?’ அப்படின்னு கேட்டாங்கல்ல? அதுக்கு என்ன அர்த்தம் தெரியுமா? ஊரான் வீட்டு நெய்யில உங்க வீட்டுக்கு ஸ்வீட் செய்யாதீங்க. எப்படி? ஊரான் வீட்டு நெய்யில உங்க வீட்டுக்கு ஸ்வீட் செய்யாதீங்கன்னு அர்த்தம்.
நிதிச்சுமையும் சிலைகளும்
மக்களோட ஒரு அடிப்படை வாழ்வாதாரத்துக்கு ஏதாவது பிரச்சனைன்னு கேட்டா ‘நிதிச்சுமை, நிதிச்சுமை’ன்னு சொல்றீங்க; சிலை வைக்கிறதுக்கு மட்டும் எங்கிருந்து சார் காசு வருது? முதல்ல மக்களுக்கு அந்தச் சோறு… சோறுக்கு வழி பாருங்க சார், சிலை வைக்கிறதப்பத்திலாம் அப்புறமா யோசிக்கலாம்.
- கேஸ் சிலிண்டருக்கு மானியமா 100 ரூபாய் தரேன்னு சொன்னீங்களே, என்னாச்சு?
- கரும்புக்கு ஆதார விலையா 4,000 ரூபாய் தரேன்னு சொன்னீங்களே, என்னாச்சு?
- ரொம்ப நாள் கல்யாணமே ஆகாம இருக்கிற பெண்களுக்கு, அவங்களுடைய கல்வித் தகுதிக்கேற்ப அரசு வேலை கொடுப்போம்னு சொன்னீங்களே, என்னாச்சு?
- இதெல்லாம் வெறும் சாம்பிள்தான், இதவிட ஹைலைட் ஒன்னு இருக்கு. மாநில அரசால முடியவே முடியாதுன்னு தெரிஞ்சுக்கிட்டும், ‘நாங்க வந்தா நீட்ட ஒழிப்போம்…’ ஆஹா, ஆஹா, ஆஹா! எவ்வளவு பெரிய ஒரு மோசடி இது? கேட்டா ‘நாங்கதான் முன்மாதிரி ஆட்சி’ன்னு சொல்லுவாங்க – மோசடி ஆட்சி
மோசமானவங்கள்லயே முக்கியமானவங்க கேள்விப்பட்டிருக்கீங்களா? அந்த மாதிரி மோசடி ஆட்சியிலேயே முக்கியமான ஆட்சி இந்த திமுக ஆட்சி. மக்களே, மக்களை நேசிக்கிற விஜய் வேணுமா, மக்கள் விரோத ஆட்சி நடத்துற ஸ்டாலின் சார் வேணுமா? இந்த விஜய் நம்புறீங்களா, ஸ்டாலின் சார நம்புறீங்களா?
திமுக ஆட்சி மறையட்டும்
இந்த சத்தத்துக்கு அர்த்தம் தெரியுமா சார்? ‘ஸ்டாலின் தொடரட்டும்’ அப்படின்னு அர்த்தம் கிடையாது; தீயசக்தி திமுக ஆட்சி மறையட்டும், தூயசக்தி டிவி கே ஆட்சி வரட்டும், நானும் உதிக்கட்டும்னு சொல்லாமனு நினைச்சேன், பாத்தா அத வேற திரிச்சு பேச ஆரம்பிச்சிருவாங்க.
நாங்குநேரி பிரச்சனை
திருநெல்வேலியில, நாங்குநேரியில இப்போ ரீசண்டா… ஒரே லைன்ல சொல்லணும்னா நம்ம நண்பர் ஒருத்தர் ட்வீட் போட்டிருந்தாரு, அதையே சொல்றேன்: ‘ஸ்டாலின் தொடரட்டும், சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கட்டும்.’ இதுதான் அந்தப் பிரச்சனைக்கு ஒரே லைன்.

புதிய வாக்குறுதிகள்
மக்களே, காஞ்சிபுரத்துல, வேலூர்ல எல்லாம் நம்மளோட விஷனைப் பத்தி சொன்னோம் இல்லையா? அதே மாதிரி இங்கேயும் சில விஷன்ஸ்சச் சொல்லணும். இது மத்தவங்க மாதிரி தேர்தல் வாக்குறுதின்னு சொல்லி ஏமாத்துறது கிடையாது. நம்மள நம்புற மக்களுக்கு நம்பிக்கை தர்றது. நம்ம ஆட்சிக்கு வந்ததும் இதெல்லாம் செய்ய நடவடிக்கை எடுப்போம்னு சொல்றது.
- டெல்டா விவசாயிகள் சமீபத்துல கூட உரத் தட்டுப்பாட்டை சந்திச்சீங்கல்ல? சில பேர் உரத்தைப் பதுக்கி வச்சு அதிக விலைக்கு வித்ததா நியூஸ் கூட வந்துச்சு. நம்ம டிவி கே ஆட்சி வந்ததும் உரத் தட்டுப்பாடு இல்லாம பாத்துக்குவோம்.
- 5 ஏக்கர் வரை நிலமுள்ள விவசாயிகள் வேளாண் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய பயிர்க்கடன் முழுமையாக ரத்து செய்வதற்கும், 5 ஏக்கருக்கு மேல் உள்ள விவசாயிகள் வேளாண் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய பயிர்க்கடன் 50 சதவீதம் வரை ரத்து செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து உறுதியாக நடவடிக்கை எடுப்போம்.
திமுக மாதிரி எல்லாருக்கும்னு சொல்லிட்டு அதுல தகுதி பிக்ஸ் பண்ணிப் பாகுபாடு காட்டி ஏமாற்ற மாட்டோம். எல்லாத்தையும் வெளிப்படையாச் சொல்லுவோம்.
- 2 ஏக்கர் வரை நிலமுள்ள விவசாயிகள் மற்றும் நிலமற்றவர்கள் குடும்பத்தில் யாரும் மாநில மற்றும் ஒன்றிய அரசு ஊழியராக இல்லாமல் இருக்கும் பட்சத்தில், அவர்களின் குழந்தைகளின் பொறியியல் மற்றும் மருத்துவம் உள்ளிட்ட தொழிற்கல்வி முதல் அனைத்து வகைப் படிப்புகளுக்குமான முழுச் செலவையும் அரசே ஏற்கும்.
- விவசாயிகளின் விருப்பத்திற்கு எதிராக எந்தத் திட்டமாக இருந்தாலும், ஒன்றிய அரசின் நெருக்கடியாகவே இருந்தாலும், அந்தத் திட்டத்தை உங்களுடைய தமிழக அரசு முழுமையாக நிராகரிக்கும்.
எப்போதும் விவசாயிகளின் பக்கமே நம் ஆட்சி நிற்கும். - கொள்முதல் நிலையங்களில் முறையாக நெல் மூட்டைகள் பாதுகாக்கப்படும். நெல் முளைத்து வீணாவதைப் பார்த்துக் கொண்டு நமது அரசு சும்மா இருக்காது. போதுமான கொள்முதல் நிலைய வசதிகள் ஏற்படுத்தப்படும். அதேபோல கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்வதற்கோ மூட்டை ஏற்றி இறக்கவோ ஒரு பைசா கமிஷன் வாங்காமல் பார்த்துக் கொள்ளப்படும். அப்படி கமிஷன் வாங்குவது யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
- 500 ரேஷன் கார்டுகளுக்கு ஒரு ரேஷன் கடை என்ற வரையறை நிர்ணயிக்கப்படும். கிராமங்களிலும் எடையாளர் நியமிக்கப்படுவார். பெண் விற்பனையாளருக்கு பெண் எடையாளர், ஆண் விற்பனையாளருக்கு ஆண் எடையாளர் என்பது பின்பற்றப்படும்.
- ரேஷன் கடைகளில் அரிசி தவிர அனைத்துப் பொருள்களும் பாக்கெட் செய்து விநியோகிக்கப்படும்.
- மீனவர்களுக்கு ஒன்றிய அரசு சட்டப்படியான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அதற்கான உண்மையான உணர்வுப்பூர்வமான அழுத்தத்தை ஒன்றிய அரசுக்கு நமது தமிழக அரசு கொடுக்கும்.
நான் மீண்டும் மீண்டும் சொல்றேன், கல்வி, மருத்துவம், ரேஷன், குடிநீர், சாலை வசதி, பஸ் வசதி இது மாதிரி அடிப்படை விஷயங்களுக்காகத் தான் நம் அரசு முதல்ல முக்கியத்துவம் கொடுக்கும். எனக்கு நம்மளோட குழந்தைகள், நம்ம பெண்கள், நம்ம இளைஞர்கள் லைஃப்க்கு முன்னுரிமை கொடுக்கணும்.
அரசு வேலை வாய்ப்புகள் மட்டும் இல்லாம, தனியார் வேலை வாய்ப்புகளுக்கான வழியையும் உத்தரவாதத்தையும் உருவாக்கணும். அப்படி நாம உருவாக்கிட்டாலே அவங்களுக்கான ரூட்டை நம்ம இளைஞர்கள் அவங்களே தேர்ந்தெடுத்துப்பாங்க.
இத்தனை கோடி அத்தனை கோடி ஒப்பந்தம்னு சொல்லி விளம்பரம் மட்டும் செய்யாம, உண்மையான ஒப்பந்தம் போட்டு வெள்ளை அறிக்கை வெளியிட்டு அதைச் செயல்படுத்தினாலே போதும், எல்லாம் தன்னாலே நடக்கும்.

ஊழல்
இங்க இன்னொன்னும் சொல்ல நினைக்கிறேன். இங்க அடுத்து நாங்க தான் நாங்க தான்னு நெஞ்சை நிமிர்த்தி கூவுற யாராச்சும், நாங்க ஊழலே செய்யாதவங்கன்னோ, ஊழல் செய்யவே மாட்டோம்னோ நெஞ்சைத் தொட்டு மனசாட்சியோட சொல்ல முடியுமா? ஆனா நாம இன்னைக்கு இல்ல, ஆட்சிக்கு வந்ததுக்கு அப்புறமும் ஓப்பனா, தில்லா, கட்ஸா சொல்லுவோம். ஊழல் லஞ்சம் இல்லாத ஒரு ஆட்சியை கொடுக்க உண்மையா ட்ரை பண்ணாலே போதும், எல்லாம் தன்னாலே நல்லா நடக்கும்.
எல்லாரும் கொஞ்சம் கைய இப்படி வைங்களேன்.
எங்க ஓட்டு எங்க உரிமை! எங்களை யாரும் விலைக்கு வாங்க முடியாது!
எங்க ஓட்டு விசில் சின்னத்துக்குத் தான்! யாரையும் நம்பி ஏமாற மாட்டோம்! எங்க வார்த்தையிலிருந்து மாற மாட்டோம்!
இது நிஜம்! தேங்க்யூ.
என் நெஞ்சில் குடியிருக்கும் தஞ்சை மக்களே! என் நெஞ்சில் குடியிருக்கும் வேலூர் மக்களே! வேலூர்ல இத நான் சொல்ல மறந்துட்டேன். சாரி, உங்களுக்காக இங்க நான் சொல்றேன். உங்களோட நான் இருக்கேன், நம்மளோட நம்ம மக்கள் இருக்குறாங்க. இதுக்கு மேல என்ன வேணும்? கான்ஃபிடெண்ட்டா இருங்க. நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம். மீண்டும் சந்திக்கும் வரை நன்றி, வணக்கம். இவ்வாறு விஜய் பேசினார்.
