அடுத்த ஜென்மத்தில் நான்.. விஜய் ஆசை

Published On:

| By Pandeeswari Gurusamy

தஞ்சாவூர் செங்கிப்பட்டியில் நடந்த நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் இன்று (மார்ச் 4) தவெக தலைவர் விஜய் பேசுகையில், “நீங்கள் எல்லோரும் எனக்கு ஓர் உறுதிமொழியைத் தர வேண்டும். ஊழலற்ற, உண்மையான சமூக நீதியை நிலைநாட்ட நமது ஆட்சியை அமைப்பீர்கள் தானே? இந்த விஜய்க்கு ஒரு வாய்ப்புக் கொடுப்பீர்கள் தானே? உண்மையிலேயே கொடுப்பீர்கள் தானே? இந்த விஜயை நம்புகிறீர்கள் தானே? ஒவ்வொரு வீட்டிலும் விசில் சத்தம் கேட்கும் தானே? அந்த விசில் சத்தம் ஒவ்வொரு பூத்திலும் புயலாக ஒலிக்கும் தானே?”

இதைக் கேட்டதும் கூட்டத்தில் இருந்தவர்கள் “ஆம்!” என்று முழக்கமிட்டனர். அதைத் தொடர்ந்து விஜய் பேசியதாவது:

ADVERTISEMENT

“ஒரு டாக்டர் இருந்தால் நாம் எப்போது அவரைப் பற்றி யோசிப்போம்? நமக்கு உடல்நிலை சரியில்லை என்றால் அவரைப் பற்றி யோசிப்போம், அவர் ஞாபகம் வரும். நமக்கு ஒரு பிரச்சனை என்றால் வழக்கறிஞரைத் தேடிப் போவோம். இது மனித இயல்பு. ஆனால், நாம் சும்மா சாப்பிடும்போது கூட நம்மை அறியாமல் ஒருவரைப் பற்றி நினைப்போம்; நம்மை அறியாமல் ஒருவருக்கு நன்றி சொல்வோம். அந்த மதிப்பிற்குரிய மனிதர்கள் வேறு யாரும் இல்லை… விவசாயி! விவசாயி! விவசாயி!

அவர்கள் பார்ப்பதற்கு வேண்டுமானால் சாதாரணமாக இருக்கலாம், ஆனால் அவர்கள் சாதாரண மனிதர்கள் கிடையாது. இந்த உலகத்தையும் மனிதர்களையும் படைத்தது கடவுள் என்று சொல்வார்கள். ஆனால், அந்த கடவுளுக்கே படையல் போடும் உயர்ந்த மனிதர்கள்தான் நமது விவசாயிகள். இந்தப் பூமியில் உயிர் உள்ளது, இந்தப் பூமியில் பூப் பூக்கும், காய் காய்க்கும், பூத்துக் குலுங்கும் என்று அழகாகக் காட்டி, இந்தப் பூமியைச் ‘சாமியாக்குவதில்’ இயற்கையோடு சேர்ந்து நமது விவசாயிகளுக்கும் முக்கியப் பங்கு உள்ளது.

ADVERTISEMENT

நான் கொஞ்சம் ஓவராகச் சொல்கிறேன் என்று நினைக்காதீர்கள்… எனக்கு அடுத்த ஜென்மம், மறுபிறவி பற்றி எல்லாம் எதுவும் தெரியாது. ஆனால் அது உண்மை என்றால், அடுத்த ஜென்மத்தில் நான் ஒரு விவசாயிக் குடும்பத்தில் பிறக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். எனக்கு விவசாயத்தைப் பற்றி எல்லாம் முழுமையாகத் தெரியாதுதான், அதை நான் ஒப்புக்கொள்கிறேன். அதற்காக மற்றவர்களைப் போல, ‘நானும் டெல்டாக்காரன்தான்’ என்று உங்கள் காதில் ‘டால்டா’ ஊற்ற நான் வரவில்லை. எனக்கு விவசாயத்தைப் பற்றித் தெரியவில்லை என்றாலும், அவர்கள் படும் கஷ்டத்தைப் பற்றி எனக்கு நன்றாகவே தெரியும்.

நம்முடைய முதல் அரசியல் பயணமே அந்தப் பரந்தூர் விவகாரத்தைக் கையில் எடுத்துதான் தொடங்கியது. எனவே, நமது ஆட்சி அமைந்ததும் தீர்க்க வேண்டிய முக்கியமான பிரச்சனைகளில் விவசாயிகளின் பிரச்சனையும் ஒன்று. முதல்வர் அவர்களே… நீங்கள் ‘இதைச் செய்துவிட்டோம், அதைச் செய்துவிட்டோம்’ என்று பெருமையாகச் சொல்லிக்கொள்கிறீர்களே? ஒரு அடிப்படைப் பிரச்சனையைப் பற்றிப் பேசுவோமா?

ADVERTISEMENT

தண்ணீர் திவால்

கொஞ்ச நாட்களுக்கு முன் ஐநா சபை ஒரு அறிக்கையை வெளியிட்டது. உடனே கூகுள் செய்து தேடாதீர்கள், உங்கள் ஏஜென்சிகளை வைத்து சர்வே எடுக்காதீர்கள்; உங்களுக்கு அந்தச் சிரமம் வேண்டாம், நானே சொல்கிறேன். ‘தண்ணீர் திவால்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியானது. அதைப் படிக்கும்போது மனதிற்கு மிகவும் பகீர் என்று இருந்தது. இந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில் இன்னும் கொஞ்ச காலத்தில் தண்ணீரே இல்லாமல் திவாலாகப் போகிறதாம். அதற்குக் காரணம் நிலத்தடி நீரைப் பாதுகாக்காமல் விட்டதுதான்.

மண்ணையும் மணலையும் கொள்ளையடித்தால் வேறு என்ன நடக்கும்? மலைகளை விழுங்கினால் என்ன நடக்கும்? கனிம வளங்களைக் கொள்ளையடித்தால் வேறு என்ன நடக்கும்? மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் மீது நீங்கள் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை, உங்கள் நடவடிக்கை போதுமானதாக இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் சொன்னதை மறந்துவிட்டீர்களா?

மணல் மாஃபியா குரூப்களுக்கு ஆதரவு அளிப்பது உங்கள் திமுக அரசுதானே? அவர்களுடன் டீலிங்கில் இருப்பது நீங்கள் தானே? தண்ணீர் திவாலாகப் போகிறது, மணல் திவாலாகப் போகிறது, கனிம வளம் திவாலாகப் போகிறது… மொத்தத்தில் உங்கள் ஆட்சியில் தமிழ்நாடே திவாலாகப் போகிறது. கடன் மேல் கடன் வாங்கிவிட்டு இந்த அரசு குப்புற விழுந்து படுத்துக்கொண்டது.

நிலைப்பாடு என்ன?

நமது விவசாயிகள் கஷ்டப்பட்டு விளைவித்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகப் போனதே, ‘டெல்டாக்காரன்’ என்று சொல்லும் நீங்கள் அதைக் கவனித்தீர்களா? அவர்களது போராட்டத்திற்கு ஒருமுறை கூடச் சென்றிருக்கிறீர்களா? குண்டாஸ் சட்டத்தில் மட்டும் போடுவீர்கள்… இதுதான் உங்கள் சாதனை? பரந்தூர் பிரச்சனையில் உங்கள் உண்மையான நிலைப்பாடு என்ன? மேல்மா விஷயத்தில் உங்கள் நிலைப்பாடு என்ன?

‘தமிழகத்தில் இருக்கும் எல்லா ஆறுகளையும் இணைப்போம், இந்தியாவிலேயே இதைக் குறித்து நாங்கள்தான் முதலில் யோசித்தோம்’ என்று திமுக பெருமையாகச் சொல்லிக் கொள்ளும். ஆனால், பெரிய திட்டங்களை எல்லாம் ஆட்சிக்கு வந்தவுடன் செய்ய மாட்டார்கள். ஆட்சி முடியும் தருவாயில் – கடைசி ஆறு மாதம் அல்லது ஒரு வருடத்தில் – அதற்கான திட்டத்தைக் கொண்டு வந்து அடிக்கல் நாட்டுவார்கள். அதன் பிறகு தேர்தலில் தோற்றுவிடுவார்கள். கேட்டால், ‘எங்கள் ஆட்சிதான் முடிந்துவிட்டதே’ என்று நாடகமாடுவார்கள்.

மக்களுக்கு உங்கள் மேல் உண்மையான அக்கறை இருந்தால், ஆட்சிக்கு வந்த உடனேயே இதுபோன்ற பெரிய திட்டங்களை ஆரம்பிக்க வேண்டியதுதானே? கடைசி நேரத்தில் அடிக்கல் நாட்டுவது ஓட்டுக்காகத்தானே? மக்கள் என்ன ஏமாளிகள் என்று நினைத்தீர்களா? மக்களே நமது ஆட்சி அமைந்ததும் இதுபோன்ற பெரிய திட்டங்களை உடனே ஆரம்பிப்போம். ஐந்து வருடத்திற்குள் அவற்றை முடிக்கவும் முயற்சிப்போம்.” என்றார்.

இப்படியெல்லாம் நான் பேசினால், ‘காவிரி பிரச்சனையில் உங்கள் கருத்து என்ன? முல்லைப் பெரியாறு பிரச்சனையில் உங்கள் கருத்து என்ன? அதுபற்றி எல்லாம் உங்களுக்குத் தெரியுமா ஐயா?’ என்பார்கள்.

எனக்கு தெரியும்

உலக மகா மேதைகளே… ROV (Remotely Operated Vehicle) கருவியை வைத்துத் தண்ணீருக்குள் சென்று அணைகளின் உறுதித்தன்மையை ஆராய்வது வரை நானும் எல்லாம் தெரிந்துதான் வைத்திருக்கிறேன். ஒருவன் அமைதியாக இருக்கிறான் என்றால், அவனுக்கு எதுவும் தெரியாது என்று நினைத்துவிடாதீர்கள். சும்மா கருத்துச் சொல்லிக்கொண்டு கம்பு சுத்திக்கொண்டிருந்தால் மட்டுமே எல்லாம் நடந்துவிடுமா? நசநசவென்று பேசிப் பேசி, அதைக் கேட்டு மக்கள் வெறுத்துப் போய்விட்டார்கள். ‘உருப்படியாக ஏதாவது யோசியுங்கள் ஐயா’ என்று மக்கள் நினைப்பது யாருக்குத் தெரிகிறதோ இல்லையோ, எனக்கு நன்றாகத் தெரிகிறது. உரிய இடத்திற்குச் சென்று, சம்பந்தப்பட்டவர்களுடன் பேசி, அதற்கான தீர்வைத் தெரிந்துகொண்டு, அதைச் சரியாகச் செயல்படுத்த வேண்டும்.” என்றார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share