புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினர் சென்னை எழிலகத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். new pension scheme
தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் திமுகவின் சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதி எண் 309ன் படி புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.
ஓய்வூதியத்திட்டம் தொடர்பாக அமைக்கப்பட்ட அலுவலர் குழுவை திரும்ப பெற வேண்டும்.
பணிக் கொடை வழங்க வேண்டும். குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினர் சென்னை எழிலகத்தில் இன்று (ஜூலை23) உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சிபிஎஸ் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் ஜெயராஜ ராஜேஸ்வரன், கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார், கோவை மாவட்ட நிதிக் காப்பாளர் சிவலிங்கம், மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெகநாதன், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் புனிதன், திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முருகதாஸ், த.நா. அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் பொறியியல் கல்லூரி அலுவலர் சங்க பொது செயலாளர் மனோகரன் என 16 பேர் உண்ணாவிரதம் இருக்கின்றனர்.

அவர்களுக்கு சென்னையைச் சேர்ந்த சிபிஎஸ் ஒழிப்பு சங்க நிர்வாகிகள் 100 மேற்பட்டோர் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.
இதேபோன்று தமிழக முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினர் கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தேனி வீரபாண்டி நீர்வளத்துறை அலுவலகத்தில் சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பாக அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். new pension scheme