மத்திய வடக்கு மற்றும் அதனை ஒட்டிய வங்கக்கடலில் உள்ள மேல் வளிமண்டல சுழற்சியின் தாக்கத்தால், வங்கக் கடல் பகுதியில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசை நோக்கி நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது.
இந்நிலையில் நாளை (செப்டம்பர் 27) காலையில் தெற்கு ஒடிசா வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இன்று (செப்டம்பர் 26) கோவை, நீலகிரி, தேனி, தென்காசி ஆகிய நான்கு மாவட்டங்களிலும், நாளை (செப். 27) கோவை, நீலகிரி ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மியான்மார் கடலோரப் பகுதிகளை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று காலை முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. திற்பரப்பில் 18 செ.மீ அளவிற்கு மழை கொட்டி தீர்த்துள்ளது. இதுதவிர சுருளோடு 16 செ.மீ, சிற்றார் 1 அணை பகுதி 15 செ.மீ, பெருஞ்சாணி அணை 13 செ.மீ, பேச்சிப்பாறை 12 செ.மீ, சிற்றார் 2 அணை பகுதி 8.2 செ.மீ மழை பெய்துள்ளது.
இந்நிலையில் இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அழகு மீனா உத்தரவு பிறப்பித்துள்ளார்.