தமிழ்நாட்டில் நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்புகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் நில வழிகாட்டி மதிப்புகள் விவசாய நிலங்களுக்கு ஏக்கரிலும், மனை நிலங்களுக்கு சதுரடியிலும் நிர்ணயம் செய்யப்படுகின்றன.
2003ஆம் ஆண்டுக்கு பின் 2007, 2012 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் வழிகாட்டி மதிப்புகளில் மாற்றம் செய்யப்பட்டன. 09-06-2017 அன்று முதல் ஒரே சீராக 33 சதவீதம் குறைக்கப்பட்டது. 2017க்குப் பிறகு வழிகாட்டி மதிப்பில் எந்தவித மாற்றமும் செய்யப்படாமல் இருந்தது.
அதேசமயம் , விற்பனை, நன்கொடை, பரிமாற்றம் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே அல்லாத ஏற்பாடு ஆவணங்களுக்கான பதிவுக் கட்டணம் ஒரு சதவீதத்திலிருந்து நான்கு சதவீதமாக உயர்த்தப்பட்டது.
இந்நிலையில் சந்தை மதிப்பிற்கு ஏற்ப வழிகாட்டி மதிப்பை உயர்த்தவும், பதிவுக் கட்டணத்தைக் குறைக்கவும் பல்வேறு தரப்பினரிடமிருந்து தொடர்ந்து கோரிக்கைகள் வந்ததாக பதிவுத் துறை தெரிவித்தது.
அதுபோன்று மனையிடங்களின் வழிகாட்டி மதிப்பு குறைவாக இருப்பதால் வங்கிகளில் சொத்தின் மதிப்பிற்கு ஏற்றாற்போல் கடன் பெற முடியவில்லையென 27.07.2023 அன்று நடைபெற்ற பதிவுத்துறை கருத்து கேட்பு கூட்டத்தில் கட்டடம் கட்டி விற்போர் சங்க பிரதிநிதிகளும், மனைப்பிரிவு ஏற்படுத்தி விற்போர் சங்க பிரதிநிதிகளும் தெரிவித்திருந்தனர்.
இந்தசூழலில் இந்திய முத்திரைச்சட்டம் பிரிவு 47(AA)-ன் படி பதிவுத்துறை தலைவர் தலைமையில் வழிகாட்டி மதிப்பை சீரமைக்க அமைக்கப்பட்ட மைய மதிப்பீட்டுக்குழு கடந்த ஆகஸ்ட் 16ஆம் தேதி கூடி ஆலோசித்தது.
இந்நிலையில் நேற்று (ஆகஸ்ட் 25) சந்தை வழிகாட்டி மதிப்பை உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது.
பதிவுத் துறை தலைவர் ஓம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், “தமிழ்நாட்டில் வழிகாட்டி மதிப்புகள், விவசாய நிலங்களுக்கு ஏக்கரிலும், மனை நிலங்களுக்கு சதுரடியிலும் நிர்ணயம் செய்யப்படுகிறது.
இவ்வாறு நிர்ணயம் செய்யப்பட்ட வழிகாட்டி மதிப்புகள் பெரும்பாலான இடங்களில் வெளிச்சந்தை மதிப்பை விட மிக மிக குறைவாக உள்ளன.
வங்கிகள் வழிகாட்டி மதிப்பையொட்டியே கடன் வழங்கும். இதனால், மனை நிலம் வாங்குபவர்கள் வங்கிகளில் தேவையான அளவிற்கு கடன் பெற முடியாத நிலை உள்ளது.
இதனை தவிர்ப்பதற்காகவும் வழிகாட்டியில் குறைந்தபட்ச மதிப்பை நிர்ணயம் செய்வதற்காகவும் 16.08.2023 அன்று மைய மதிப்பீட்டுக்குழு கூட்டம் கூட்டப்பட்டது.
இக்கூட்டத்தில் எடுத்த முடிவின் படி, சென்னை மாநகராட்சி மற்றும் கோவை மாநகராட்சியில் குறைந்தபட்ச குடியிருப்பு மதிப்பு சதுர அடிக்கு ரூ.1,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆவடி, தாம்பரம், ஓசூர், காஞ்சிபுரம் மாநகராட்சிகளில் சதுர அடிக்கு ரூ.800.
ஈரோடு, திருப்பூர், மதுரை, திருச்சி, சேலம், நாகர்கோவில் மாநகராட்சி – ரூ.700.
திருநெல்வேலி, திண்டுக்கல், வேலூர். கரூர் மாநகராட்சி – ரூ.600;
தூத்துக்குடி, தஞ்சாவூர். சிவகாசி, கும்பகோணம் மாநகராட்சி – ரூ.500;
கடலூர் மாநகராட்சி – ரூ.400.
அனைத்து நகராட்சி பகுதிகளில் அமைந்துள்ள மனையிடங்களுக்கு குறைந்தபட்ச மதிப்பு – ரூ.300,
அனைத்து பேரூராட்சி பகுதியில் உள்ள தெருக்களுக்கு குறைந்தபட்ச மதிப்பு – ரூ.200.
காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கோவை, ஈரோடு, சேலம், மதுரை, கிருஷ்ணகிரி, கரூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள கிராமங்களுக்கும், இம்மாவட்டங்களில் உள்ள பேரூராட்சி பகுதிகளில் உள்ள புல எண்களுக்கான குறைந்தபட்ச மதிப்பு – ரூ.100, குறைந்தபட்ச விவசாய மதிப்பு – ஏக்கருக்கு ரூ.5 லட்சம்.
இதர மாவட்டங்களில் உள்ள கிராமங்களுக்கும், அந்த மாவட்டங்களில் உள்ள பேரூராட்சி பகுதிகளில் உள்ள புல எண்களுக்கான குறைந்தபட்ச மதிப்பு சதுர அடி ரூ.50, குறைந்தபட்ச விவசாய மதிப்பு ஏக்கருக்கு ரூ.2 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த குறைந்தபட்ச நிர்ணயிக்கப்பட்ட மதிப்புகள், இணையதளத்தில் நேரடியாக மாற்றியமைக்கப்பட்டு உள்ளன.
மாற்றியமைக்கப்பட்ட குறைந்தபட்ச மதிப்பிற்கு கீழ் வேறு மதிப்புகள் ஏதும் உள்ளனவா? என்பதை சரிபார்த்துக்கொள்ள சம்பந்தப்பட்ட துணைப்பதிவுத்துறை தலைவர்கள், நிர்வாக மற்றும் தணிக்கை மாவட்டப் பதிவாளர்கள் மற்றும் சார் பதிவாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரியா
Comments are closed.