ADVERTISEMENT

டிரம்பின் அதிரடி தந்த பாடம்!

Published On:

| By Minnambalam Desk

New GST A lesson from Trumps action

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நமக்குத் தெளிவாக சிந்திக்கக் கற்றுத் தந்துள்ளார். புதிய ஜிஎஸ்டி அடுக்குகளே மாற்றத்தின் முதல் அடையாளம்.

ஆர். ஜெகன்னாதன்

ADVERTISEMENT

அரசாங்கத்திற்கும், மக்களுக்கும் இடையே உள்ள நம்பிக்கையில் நாம் ஒரு புதிய எல்லையைத் தாண்டிவிட்டோமா? இதற்கு அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவை டொனால்ட் டிரம்ப் சிதைத்தது ஒரு காரணம் எனச் சொல்லலாமா?

சரக்கு மற்றும் சேவை வரியின் (GST) விகிதங்கள் இப்போது 5%, 18% என இரண்டு அடுக்குகளாகக் குறைக்கப்பட்டிருப்பதற்கு டிரம்ப் மட்டுமே காரணம் என்று சொல்வது நியாயமில்லை.

ADVERTISEMENT

காரணம், ஜிஎஸ்டியை மறுசீரமைக்கும் பணி ஏற்கனவே தொடங்கப்பட்டுவிட்டது. மேலும், 2025 பிப்ரவரி மாத பட்ஜெட்டில் மோடி அரசு வருமான வரிக் குறைப்பையும் பெரிய அளவில் அறிவித்தது. இது டிரம்ப் தனது வர்த்தகக் கொள்கைகளுடன் களத்தில் இறங்குவதற்கு முன்பே நடந்த ஒரு விஷயம்.

New GST A lesson from Trumps action

இருப்பினும், மிகவும் குறிப்பிடத்தக்கது, வரிக் குறைப்பு அல்ல, அதைப் பற்றி நிதியமைச்சர் கூறியதுதான். அவர் ஒரு நேர்காணலில், “வருவாய் இழப்பு ஒரு முக்கியமான காரணி அல்ல; ஏனெனில் மாநிலங்கள் மட்டுமல்ல, மத்திய அரசும் குறுகிய காலத்தில் பணத்தை இழக்கக்கூடும்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT

மேலும் அவர், “வருமான வரிக் குறைப்பின்போதும் வருவாய் இழப்பு குறித்த அச்சம் இருந்தது. ஆனால், மக்களின் கைகளில் பணம் புழங்கும்போது, நான் என் வருவாயைப் பற்றி மட்டும் கவலைப்பட வேண்டுமா? அது சாத்தியமில்லை,” என்று கூறியதாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் சிந்தனையில் மாற்றம்

இந்த அணுகுமுறை, அரசாங்கத்தின் சிந்தனையில் குறிப்பிடத்தக்க மாற்றம். இது நிலைத்து, அரசாங்கத்தின் அனைத்து சிந்தனைகளிலும் பரவினால், பெரிய மாற்றமாக இருக்கும். சாதாரண குடிமக்களின் கைகளில் ஒரு ரூபாய் இருப்பது, அதைத் திறனற்ற முறையில் செலவிடும் அரசாங்கத்திடம் ஒப்படைப்பதைவிடவும் சிறந்தது. இதன் பொருள் அரசாங்கத்திற்கு வருவாய் தேவையில்லை என்பதல்ல. ஆனால், நாட்டின் பாதுகாப்பிற்கு அடுத்தபடியாக அரசாங்கத்தின் முதல் வேலை பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்துவது என்பதை இது குறிக்கிறது.

இந்த நடவடிக்கை பின்னர் அதிக வருவாயைக் கொண்டு வரக்கூடும். சீர்திருத்தம் என்பது இந்த வரியைக் குறைப்பது அல்லது அந்த ஒழுங்கு முறையைக் குறைப்பது அல்ல, மாறாக உங்கள் குடிமக்கள் தங்கள் கைகளில் உள்ள பணத்தைச் சரியான வழியில் பயன்படுத்துவார்கள் என நம்புவதுதான்.

கட்டுப்பாட்டுத் தடைகள் 

டிரம்ப், மற்ற நாடுகளை விட்டுவிட்டு திடீரென இந்தியாவின் மீது பெருமளவிலான வரிகளை விதித்ததால், முன்னரே செய்யப்பட்டிருக்க வேண்டிய பல விஷயங்கள் இப்போது சரியான பாதையில் வந்துகொண்டிருக்கின்றன. சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகளில் சற்றே இணக்கம் தெரிகிறது. இது வர்த்தகத்தை ஒரு சமநிலைக்குக் கொண்டுவரும். கப்பல் கட்டுதல் முதல் போர் விமானம் தயாரிப்புவரை, தனது சொந்தப் பாதுகாப்பை வலுப்படுத்துவதிலும் உற்பத்தித் திறன்களை உருவாக்குவதிலும் உள்ள முக்கியத்துவத்தை இந்தியா உணரத் தொடங்கியுள்ளது. வரிக் குறைப்புகளைத் தவிர, சீர்திருத்தத்திற்கும் புதுப்பித்தலுக்குமான பகுதிகளை அடையாளம் காண ஒரு பணிக்குழுவை அமைப்பதன் மூலம் ‘கட்டுப்பாட்டுத் தடைகளை’ குறைப்பது பற்றியும் பேச்சுவார்த்தை நடந்துவருகிறது.

New GST A lesson from Trumps action

நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த 11 ஆண்டுகளுக்குப் பிறகு அத்தகைய ஒரு பணிக்குழு ஏன் அமைக்கப்பட வேண்டும் என்று ஒருவர் ஆச்சரியப்படலாம். இந்த பணிக்குழு நிரந்தரமானதாக இருக்க வேண்டும். ஏனென்றால், ஒழுங்குமுறை, வரிவிதிப்புக்கான இலக்குகள் உள்முகமான மாற்றங்களால் மட்டுமின்றி, வெளிப்புறச் சூழல்களாலும் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கின்றன. சீர்திருத்தம், கட்டுப்பாடுகளை நீக்குதல் (அல்லது எப்போதாவது தேவைப்படும்போது மீண்டும் ஒழுங்குபடுத்துதல்) ஆகியவை தொடர்ச்சியான செயல்முறையாக இருக்க வேண்டும். தொழிலாளர் சட்டங்கள் போன்ற சில “சீர்திருத்தங்கள்” இன்னும் காகிதத்தில் மட்டுமே உள்ளன. நிலம், விவசாயச் சீர்திருத்தங்கள் அரசியல் காரணங்களுக்காக மீண்டும் பின்தங்கியுள்ளன. 

மெதுவான அல்லது திருப்தியற்ற சீர்திருத்தங்களின் பிரச்சினை, நமது தேர்தல் முறையில் உருவாக்கப்பட்ட பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட மனநிலைகளிலிருந்து வருகிறது. ஒன்று, அனைத்து தீர்வுகளும் அரசாங்கத்திடம்தான் உள்ளன என்று நமது மக்களை நம்ப வைத்திருக்கிறோம். ஆகவே, நிலையற்ற இலவசங்கள் வழங்கப்படுகின்றன — அரசியல்வாதிகள் வாக்காளர்களைக் கவர, வரி செலுத்துவோரின் பணத்தைச் செலவிடுகிறார்கள். இரண்டு, அரசாங்கமே — சமீப காலம்வரை — குடிமக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவது என்பது வேலைகளை உருவாக்குபவர்களிடமிருந்தும் அதிகப் பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களிடமிருந்தும் அதிக வருவாயை ஈட்டுவது என்று நம்பியது. மூன்று, சீர்திருத்தங்கள் நல்லது, அவை மிக மெதுவாக நடந்தாலும்கூட. நான்கு, சீர்திருத்தம் என்பது பொருளாதாரச் சீர்திருத்தத்தை மட்டுமே குறிக்கிறது. ஐந்து, ‘ஆத்மநிர்பாரதா’ (சுயசார்பு) என்பது 1991க்கு முன் மிக மோசமாகத் தோல்வியடைந்த பழைய இறக்குமதி-மாற்று கொள்கை போன்றது. இந்த மனநிலைகள் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.

மனநிலை 1: தீர்வுகளுக்கு அரசாங்கம் பொறுப்பு, மக்கள் அல்ல

New GST A lesson from Trumps action

தெருக்களில் குப்பை அல்லது தெரு நாய்களால் ஏற்படும் அச்சுறுத்தல் போன்ற பிரச்சினைகள், உச்ச நீதிமன்றம்வரை சென்று, பின்னர் நோயைவிட மோசமான ஒரு தீர்வை வழங்குகிறது. இது உள்ளூர் அரசாங்கங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் சமூகங்கள் இணைந்து நியாயமான தீர்வுகளைக் காண வேண்டிய ஒரு பிரச்சினை.

அரசாங்கம்தான் வேலைகளை உருவாக்க வேண்டும் என்று இப்போது சொல்லப்படுகிறது. ஆனால், அரசாங்கங்கள் வேலைகளை உருவாக்குவதற்கான சூழலை மட்டுமே உருவாக்க முடியும், வேலைகளை உருவாக்க முடியாது. இருப்பினும், வேலையற்றவர்களின் கூட்டத்திற்கு அற்பமான அரசு வேலை வாய்ப்புகளை வழங்குவது அரசியல் ரீதியாக அர்த்தமுள்ளதாகத் தோன்றுகிறது. இவையெல்லாம் வெறும் போலியானவை.

மனநிலை 2: ‘வளர்ச்சிக்கு’ வரி வருவாய் தொடர்ந்து உயர வேண்டும்

ஒவ்வொரு பொருளாதார, சமூக அல்லது அரசியல் நெருக்கடிக்குப் பிறகும், தனக்கு மேலும் மேலும் அதிகாரங்களை வழங்கிக்கொண்ட நவீன அரசு, தான் சம்பாதிக்கும் பணத்தை மிகவும் திறனற்ற முறையில் செலவிடுகிறது.

சரியான சிந்தனை முறை: “குறைந்த வரி வருவாயுடன் அதே பொது இலக்குகளை நாம் அடைய முடியுமா?” ஒரு தீவிரமான யோசனை: மிக அதிக வருமானம் ஈட்டுபவர்களைத் தவிர, அதாவது ஒரு வருடத்திற்கு ₹50 லட்சத்திற்கும் மேல் சம்பாதிப்பவர்களைத் தவிர, மற்ற அனைவருக்கும் வருமான வரிகளை நீக்கி, அவர்கள் தங்கள் வருமானத்தை விருப்பப்படி செலவிட அனுமதிக்கலாம். இந்தப் பணம் மறைமுக வரிகள், தனியார் செலவினங்கள் மூலம் ஓரளவு திரும்ப வரும். இது வருமான வரியைச் செலவு வரியாக மாற்றுவது போன்றது. இது மக்களின் வேதனையைக் குறைக்கும்.

New GST A lesson from Trumps action

மற்றொரு தீவிர யோசனை: தற்போதைய ₹12 லட்சம் வரி விலக்கு அளவைத் தக்கவைத்து, அதற்கு மேல் உள்ள வருமானத்திற்கு 15% நிலையான வரியை மட்டுமே விதிக்கலாம். வரி நிர்வாகங்கள் மேம்படுவதுடன், தொந்தரவுகளும் குறையும். மக்கள் ஒற்றை விகித ஜிஎஸ்டியைப் பற்றி பேசுகிறார்கள், ஆனால் விலக்குகளுடன் ஒற்றை விகித வருமான வரியை ஏன் சிந்திக்கக் கூடாது? எளிமைக்கு ஆதரவான அதே வாதங்கள் வருமான வரிகளுக்கும் பொருந்தாதா?

ஜிஎஸ்டிக்கும் இதே தர்க்கம் வேலை செய்ய வேண்டும், அத்தியாவசியமற்ற பொருட்களுக்கு (பெட்ரோலியம், சிகரெட், மது உட்பட) மட்டுமே மிக அதிக விகிதங்கள் இருக்க வேண்டும். குறுகிய கால வருவாய் இழப்பைப் பின்னர் பொருளாதாரம் மீளும்போது ஈடுகட்டலாம். குறுகிய காலத்தில் பணத்தை இழக்கும் மாநிலங்களுக்கு, இழப்பீடு செஸ் மூலம் மேலும் நீட்டிக்கப்படாமல், மத்திய அரசால் ஓரளவு ஈடுகட்டப்படலாம். மேலும், உள்ளாட்சி அமைப்புகளுக்கு புதிய வருவாய் வடிவங்களை உருவாக்க அதிகாரம் அளிப்பது உதவலாம். 

கார்கள் மலிவானால், உள்ளூர் வருவாயை உருவாக்க நெரிசல் கட்டணங்கள் அல்லது வருடாந்தரச் சாலை வரிகளை ஏன் விதிக்கக் கூடாது? இந்த வருவாய் நகர்ப்புற உள்கட்டமைப்பை மேம்படுத்தப் பயன்படுத்தப்பட்டால் யாரும் புகார் சொல்ல மாட்டார்கள். எளிய விஷயம் என்னவென்றால், வெளிப்படையான கட்டணங்களும் உள்ளூர் வரிகளும் மக்களுக்குப் பயன்படுகின்றன என்பதற்கான வெளிப்படையான ஆதாரமாக இருக்க வேண்டும்.

மக்களை அதிகம் வரிவிதிப்பதற்கான மிக மோசமான காரணம், இது ‘வளர்ச்சிக்கு’ தேவை என்று சொல்வதுதான். பாதுகாப்பு சார்ந்த பணிகள் தவிர, வேறு எந்தப் பணியையும் தனியார் துறை அல்லது பொது-தனியார் கூட்டாண்மைகள் மூலம் செய்யலாம். அல்லது பணக்காரர்களின் நன்கொடைகளுடன் உள்ளூர் அமைப்புகள், தனியார் அரசு சாரா நிறுவனங்கள் மூலமும் செய்யலாம்.

மனநிலை 3: மெதுவாகச் செய்யும் சீர்திருத்தங்கள்கூட நல்லது

சீர்திருத்தங்கள் சிறிய அளவில் வந்தாலும் நல்லது என்பது உண்மைதான் என்றாலும், அவை மிகக் குறைவாகவும், மிகத் தாமதமாகவும் செய்யப்பட்டால், பலன் குறையக்கூடும். சீனா நம்மைவிடப் பல தசாப்தங்களுக்கு முன்னரே, மிக வேகமாகச் சீர்திருத்தம் செய்ததால், நம்மைவிட வெகு தொலைவில் உள்ளது. 

நமது சீர்திருத்தங்களை எடுத்துக்கொள்வோம். வேலைகளை வளர்ப்பதற்கு, தொழிலாளர் நெகிழ்வுத்தன்மை முக்கியமானது. ஏனெனில் புதிய தொழிலாளர்களை வேலையிலிருந்து நீக்கவே முடியாது என்றால், முதலாளிகள் அவர்களை தாராளமாக வேலைக்கு அமர்த்த மாட்டார்கள். ஆனால் சீர்திருத்தத்தை மிக நீண்ட காலம் ஒத்திவைத்தால், முதலாளிகள் குறைந்த தொழிலாளர்களுடன் சமாளிக்க வேறு வழிகளைக் கண்டுபிடிப்பார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு ஒவ்வொரு FICCI அல்லது CII மாநாட்டிலும் தொழிலாளர் சீர்திருத்தங்கள் முக்கியத் தலைப்பாக இருந்தன. ஆனால் இப்போது ஏன் தொழில் தலைவர்களின் கூட்டம் அதைக் கேட்பதில்லை? விடை: இன்று, டிஜிட்டல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, ரோபோமயமாக்கல் காரணமாக, முன்பு தேவைப்பட்ட அளவில் தொழிலாளர்கள் தேவைப்படவில்லை. அதிக திறமையான பணிகளைத் தவிர, உற்பத்திச் செயல்முறைக்கு தொழிலாளர்கள் அத்தியாவசியமானவர்கள் அல்ல.

New GST A lesson from Trumps action

மற்றொரு சிந்தனை: வேலை ஒதுக்கீடுகள் AI மூலம் தேவையற்றதாகப் போகின்றன. ஏனென்றால் மனிதர்கள் இப்போது செய்யக்கூடிய 80% வேலைகளை ஐந்து முதல் பத்து ஆண்டுகளுக்குள் அல்காரிதம்கள், ஆட்டோமேஷன் மூலம் செய்ய முடியும். அரசு வேலைகளில் உள்ள வேலை ஒதுக்கீடுகள், ஓபிசிக்கள் அல்லது எஸ்சி, எஸ்டிக்களுக்கான வேலைவாய்ப்புத் தேர்வுகளை மேம்படுத்தப்போவதில்லை. ஏனென்றால் அரசு வேலைகளும் தனியார் துறை வேலைகளைப் போலவே தொழில்நுட்ப மாற்றங்களுக்கு உள்ளாகின்றன. இந்நிலையில் அதிக ஒதுக்கீடுகளைக் கோருவதில் பொருளில்லை. 

வேலைகளை உருவாக்குவதற்கான ஒரே வழி, ஸ்டார்ட்அப்கள் எழவும், விழவும் அனுமதிப்பதுதான். மேலும் விரைவாகக் கற்றுக்கொள்ள விரும்புபவர்கள் தங்கள் திறன்களை மேம்படுத்தி, தங்கள் வருமானத்தை உயர்த்திக்கொள்ள அனுமதிப்பதுதான். 

AIஐப் பயன்படுத்தும் திறன்களைக் கற்றுக்கொடுப்பதில் கவனம் செலுத்துவதை விட, ஒப்பீட்டளவில் குறைந்த அல்லது மிதமான திறமைப் பகுதிகளில் அதிக ஓபிசிக்கள் அல்லது எஸ்சி, எஸ்டி மக்களை அரசாங்கத்தில் பணியமர்த்துவது சிறந்ததா? இந்த வகுப்பினருக்கு AIஐப் பயன்படுத்த ஒரு மானிய வழித்தடத்தை ஏன் உறுதியளிக்கக் கூடாது? AI கருவிகளுக்கு அதிக தொழில்நுட்பத் திறன்கள் தேவையில்லை. பயன்படுத்தக் கற்றுக்கொள்ளும் விருப்பம் மட்டுமே தேவை. பழைய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அதிக அப்பாவி மக்களை அரசு வேலைகளில் வைத்தால், உங்களுக்குக் கிடைப்பது அதிகக் கட்டுப்பாட்டுத் தடைகள்தான். ஒரு அரசு அலுவலகத்தில் சந்தை விலைக்கு மேலான சம்பளத்தில் அமர்ந்திருக்கும் ஒரு உதவியாளர், வணிகங்களுக்கும் குடிமக்களுக்கும் அதிக சிக்கலை உருவாக்குவார்.

மனநிலை 4: சீர்திருத்தம் என்பது பொருளாதாரச் சீர்திருத்தம் மட்டுமே

சீர்திருத்தம் என்ற சொல் வேலை இழப்பு உள்ளிட்ட சிரமங்களுடன் தொடர்புடையது என்பதால், அதற்கு ஒரு கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது. ஆனால் செய்யப்பட வேண்டிய உண்மையான சீர்திருத்தங்கள் அரசியல், சமூக அளவிலானவை. இவை பொருளாதாரத்துக்கு அப்பாற்பட்டவை. அவை ஆளும் வகுப்பினருக்கு மட்டுமே அசௌகரியத்தை ஏற்படுத்தும்; பொதுமக்களுக்கு அல்ல. காவல் துறை சீர்திருத்தம் எந்தப் பொதுமக்களுக்கும் சிரமத்தை ஏற்படுத்தாது, நீதித்துறை சீர்திருத்தமும் ஏற்படுத்தாது. கட்டுப்பாடுகளைக் குறைப்பது, அரசியல்வாதிகள், அதிகாரிகளின் அதிகாரத்தைக் குறைப்பது, நிலத்தை மலிவாகவும், வீடுகளை மிகவும் மலிவானதாகவும் மாற்றும். வீடுகளுக்கும் உள்கட்டமைப்புக்குமான செலவுகளை அதிகமாக்குவது, கட்டிட அனுமதிகளின் தற்போதுள்ல நிலைதான். இதில் சீர்திருத்தம் செய்தால் அது மக்களுக்குப் பலனளிக்கும். 

மனநிலை 5: சுயசார்பு என்பது 1991க்கு முன் தோல்வியடைந்த பழைய இறக்குமதி-மாற்று கொள்கை

New GST A lesson from Trumps action

உண்மை என்னவென்றால், சுதந்திர வர்த்தகம் ஒருபோதும் முழுமையாகச் சுதந்திரமானது அல்ல. நாடுகள் மற்றவர்களின் செலவில் தங்கள் சொந்த நலன்களை மேம்படுத்தும் விதிகளை உருவாக்குகின்றன. அப்படி இல்லை என்றால், சுதந்திர வர்த்தகத்தின் மிகப்பெரிய ஆதரவாளர் இப்போது ஏன் வரிகளைப் பழிவாங்கும் விதமாக இரட்டிப்பாக்குகிறார்?

இதற்குத் தனிமனிதரான டிரம்பின் மீது பழிபோடலாம். ஆனால், உலகின் மிகப்பெரிய பொருளாதாரம் அனைவருக்கும் ஒரு சந்தையை வழங்கி, பின்னர் அதே மக்களிடமிருந்து பெருமளவில் கடன் வாங்கி சமநிலைப்படுத்த முடியாது என்பது உண்மை. ஏதாவது ஒரு கட்டத்தில் நிலைமை மாற வேண்டும். அது இப்போது மாறியுள்ளது. டிரம்ப் ஒரு வர்த்தகப் பங்காளியாக அமெரிக்காவின் நம்பகத்தன்மை மீதான அனைவரின் நம்பிக்கையையும் அழிக்காமல், அதை சிறப்பாகச் செய்திருக்க முடியுமா என்பதுதான் ஒரே கேள்வி.

சுயசார்பு முழக்கத்தைப் பற்றிய விஷயம் என்னவென்றால், வர்த்தகம் மற்றும் சேவைப் பற்றாக்குறையைக் காலவரையின்றித் தாங்க முடியாது. அவை ஒரு குறிப்பிட்ட அளவை மீறும்போது இரு வர்த்தகப் பங்காளிகளும் மாற்றங்களைச் செய்ய வேண்டும். மேலும், நாடுகள் தங்கள் சொந்த பொருளாதார சொத்துக்கள் மற்றும் உற்பத்தி சக்திகள் மீது குறிப்பிட்ட அளவு கட்டுப்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும். அரிய மண் பொருட்கள் அல்லது தயாரிக்கப்பட்ட பொருட்களுக்கு சீனாவையும், நமது உழைப்பு-செறிவுள்ள மென்பொருள் சேவைகளுக்கு அமெரிக்காவையும் நம்பியிருப்பது முட்டாள்தனம்.

ஒரு சமநிலை தேவை. டிரம்ப் அதைத் தூண்டிவிடவில்லை என்றால், வேறு யாராவது அதைச் செய்திருப்பார்கள். அரசாங்கங்கள் குறைந்த வளங்களுடன் தங்கள் சொந்த மக்களுக்கு எப்படிச் சேவை செய்வது, நம்பிக்கையை எப்படி உருவாக்குவது என்பதைப் பற்றித் தெளிவாகச் சிந்திக்க வேண்டும் என டிரம்ப் கட்டாயப்படுத்தியுள்ளார். அது நல்ல அறிகுறி.

**

ஆர். ஜெகன்னாதன் ஸ்வராஜ்யா, இதழின் முன்னாள் ஆசிரியர் குழுவைச் சேர்ந்தவர். இங்குள்ளவை அவரது தனிப்பட்ட கருத்துக்கள்.

நன்றி: தி பிரிண்ட் இணைய இதழ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share