அ. குமரேசன்
அந்தக் கால அரசமைப்பு சாசனம்தான் “அர்த்த சாஸ்திரம்”. அதனை எழுதியவரான சாணக்கியர், அரசருக்கும் அரசின் பாதுகாப்புக்கும் ஊறு விளைவிக்கிற வகையில் சட்ட ஒழுங்கை மீறி அவதூறு பேசுவது, புரட்சியைத் தூண்டுவது, தவறான தகவல்களைப் பரப்புவது ஆகிய செயல்களுக்குக் கடுமையான தண்டனை விதிக்கப்படும் என்று கூறியிருக்கிறார்.
2,300 ஆண்டுகளுக்கு முன் மௌரியப் பேரரசுக்காக அவர் இவ்வாறு கூறியதை இன்றும் பல நாடுகளின் அரசுகள் விசுவாசமாகப் பின்பற்றுகின்றன.
குறைகளைச் சுட்டிக்காட்டினால் கூட அவதூறு பொழிந்ததாக, போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்தால் புரட்சியைத் தூண்டியதாக, அரசாங்கம் தெரிவிக்கும் விவரங்களைத் தாண்டி உண்மைகளை வெளிப்படுத்தினால் தவறான தகவல்களைப் பரப்பியதாகக் குற்றச்சாட்டுகள் பதியப்படுகின்றன. வழக்குகள், தண்டனைகள், தடைகள் என்ற தாக்குதல்கள் தொடுக்கப்படுகின்றன. இவற்றை விடவும் கவலைக்கு உரியதாக, இதையெல்லாம் மௌனமாக ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு குடிமக்கள் உணர்வு மரத்துப் போய்விட்டதோ என்ற ஐயமும் ஏற்படுவதுண்டு.
அப்படியெல்லாம் மரத்துவிடவில்லை என்று உலகத்திற்குத் துடிப்போடு எடுத்துக்காட்டியிருக்கிறது நேபாளம். அந்நாட்டின் பிரதமர் பதவி விலகியிருக்கிறார். அதன் பின்னணியில், குறிப்பாகப் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட அந்நாட்டு இளைய தலைமுறையினர் நடத்திய போராட்டம் இருக்கிறது. கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்கும் சாணக்கிய வழி தடையாணையை, அது பிறப்பிக்கப்பட்ட ஐந்தே நாட்களில், திரும்பப் பெற வைத்திருக்கிறார்கள். அதற்கு 19 பேர் உயிர்ப் பலி நேர்ந்திருக்கிறது. 300க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்திருக்கிறார்கள்.
சமூக ஊடகங்களுக்குத் தடை

பனிசூழ் இமயமலைத் தொடரையும் ஏற்றத் தாழ்வான மலைப் பகுதிகளையும் வெப்பமண்டல சமவெளியையும் தன்னகத்தே கொண்ட, 1.48 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பில், நாற்புரமும் நிலமே சூழ்ந்த, 3.04 கோடி மக்கள் வாழ்கிற நாடு நேபாளம். பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி (நேபாள கம்யூனிஸ்ட கட்சி –ஐக்கிய மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) தலைமையிலான கூட்டணி அரசு, பதிவு செய்யாத சமூக ஊடகங்களுக்குத் தடை விதிப்பது என்ற முடிவை கடந்த ஆகஸ்ட் 25 அன்று எடுத்தது. பதிவு செய்வது கட்டாயம் என்று ஏற்கெனவே நீதிமன்றம் பிறப்பித்த ஆணையின்படி இந்த முடிவு எடுக்கப்பட்டது.
அனைத்து சமூக ஊடக நிறுவனங்களும் ஒரு வாரத்திற்குள் பதிவு செய்ய வேண்டும் என்று ஆகஸ்ட் 28இல் ஆணை வெளியிடப்பட்டது. அந்தக் காலக்கெடுவுக்குள் பதிவு செய்யாத சமூக ஊடகங்கள் அனைத்தும் இந்த மாதம் 4ஆம் தேதியன்று தடை செய்யப்பட்டன.

முகநூல், எக்ஸ், வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம், யூடியூப், கிளப்ஹெளஸ், த்ரெட்ஸ் உள்ளிட்ட 26 முன்னணித் தளங்கள் முடக்கப்பட்டன. இந்தத் தளங்கள் மக்களிடையே, குறிப்பாக இளைஞர்களிடையே எவ்வளவு விரிவாகப் பரவியிருக்கின்றன என்று விளக்கத் தேவையில்லை. 26 நிறுவனங்களும் பதிவு செய்யாததற்குக் காரணம் அரசாங்கம் அறிவித்த பதிவு விதிகளிலும் நடைமுறைகளிலும் இருக்கும் குழப்பம், அந்த நிறுவனங்களின் இணையத் தொடர்பு கணினி மையங்கள் (சர்வர்) நேபாளத்திலேயே இருக்க வேண்டும் என்ற நிபந்தனை, அவற்றின் அதிகாரப்பூர்வ அலுவலகங்கள் அங்கே அமையாததால் நேரடிப் பிரதிநிதிகள் இல்லாதது ஆகியவை சுட்டிக்காட்டப்படுகின்றன.
உலக கார்ப்பரேட் ஆணவம்

பதிவு செய்யும் நிறுவனங்கள் நேபாளத்தின் வரி விதிப்பு, வர்த்தக விதிகள் ஆகியவற்றுக்கும் உட்பட வேண்டியிருக்கும். ஒரு நாட்டில் பரவலாகத் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டு செயல்படும் ஒரு நிறுவனம் அந்த நாட்டின் வரி உள்ளிட்ட நிதி நடைமுறைகளுக்கு உட்படுவது என்ன தவறு? ஆனாலும், உலக அளவில் பெரிய சந்தையை வைத்திருக்கிற இந்த நிறுவனங்கள் அதற்கு உடன்படவில்லை.
ஆக, சிறிய நாட்டின் நடைமுறைகளுக்கெல்லாம் இணங்க வேண்டுமா என்ற அந்த உலகப் பெரும் சமூக ஊடகக் கார்ப்பரேட் நிறுவனங்களின் அலட்சியம், பிடிவாதம் ஆகியவவையும் இந்த நிலைமைக்கு இட்டுவந்தன எனலாம். இது தொடர்பாக அந்த நிறுவனங்கள் அரசுடன் பேச்சு நடத்த முயன்றதாகவும் தகவல்கள் இல்லை.
இவற்றில் முகநூல், எக்ஸ், வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம், யூடியூப், கிளப்ஹெளஸ், த்ரெட்ஸ், ஸ்நாப்சாட், சிக்னல், லிங்கெடின் உள்ளிட்ட பெரும்பாலான செயலிகள் அமெரிக்க நிறுவனங்களால் நடத்தப்படுபவை. வீசேட், லைன், விகோன்டேக்டே உள்ளிட்ட சில செயலிகள் ரஷ்ய, சீன நிறுவனங்களுக்குச் சொந்தமானவை. டிக்டாக் உள்ளிட்ட சில நிறுவனங்கள் நேபாள விதிகளின்படி இயங்குவதற்கு ஒப்புக்கொண்டுள்ளன.
தடைக்கு எதிர்ப்பு
திரைப்படம், விளையாட்டு, பந்தயம் போன்ற பொழுதுபோக்குகளுக்கு மட்டுமல்லாமல், குடும்பத்தினர், ‘உறவினர்கள், நண்பர்கள் தொழில்முறையில் சக பணியாளர்கள், இலக்கியப் பகிர்வு உள்ளிட்ட கூடுகைகள் என சமூகச் செயல்பாடுகளுக்கும் இந்தச் செயலிகள் முக்கியத் தேவையாகியிருக்கின்றன. தொடக்கத்திலேயே பதிவு நடைமுறைகளைச் செயல்படுத்தாமல் விட்டுவிட்டு, அன்றாட வாழ்க்கையில் தவிர்க்க இயலாதவையாக இடம் பிடித்துவிட்ட தொடர்பிகளை முடக்கியது மக்களிடையே கடுமையான ஏற்பின்மையை ஏற்படுத்தியது.
இதற்கு முன்பே, அரசாங்கம் நடவடிக்கை எடுக்கத் தவறிய பிரச்சினைகள், பல்வேறு மட்டங்களில் ஊறிப் போயிருக்கும் ஊழல், கடுமையான பொருளாதார நெருக்கடி, சுருங்கிவிட்ட வேலைவாய்ப்புகள் ஆகியவை பற்றி சமூக ஊடகங்களில் குற்றச்சாட்டுகளும், படங்களுடன் கூடிய சித்தரிப்புகளும் பரவிய வண்ணம் இருந்தன. சமூக ஊடகங்களைக் கையாளத் தெரிந்த இளைஞர்கள் தங்களுக்கே உரிய கற்பனைத் திறனோடும், நையாண்டியோடும் அரசாங்கத்தை விமர்சிக்கும் கருத்துகளைப் பகிர்ந்தும் பரப்பியும் வந்தனர். அரசியல் மட்டுமல்லாமல் சமூகநீதி, பருவநிலை போன்றவற்றையும் பேசுகின்றனர்.
குறிப்பிட்ட எந்தக் கட்சியையும் சாராதவர்களாக, எல்லாக் கட்சிகளையும் சாடுகிறவர்களாக இந்த “ஜென் – இஸட்” தலைமுறையினர் செயல்படுகின்றனர் (உலகம் முழுதுமே 1990களின் பிற்பகுதியிலிருந்து, பிறந்தது முதல் நவீன சமூக ஊடகக் கருவிகளுடன் புழங்கி வரும் தலைமுறைகளைச் சேர்ந்தவர்கள் இவ்வாறு “ஜென்–இஸட்” என்று குறிப்பிடப்படுகிறார்கள். அதற்கு முந்தைய குறிப்பிட்ட காலகட்டத்தைச் சேர்ந்தவர்கள் “‘ஜென்–ஒய்”, அதற்கும் முந்தைய ஒரு பகுதியினர் “ஜென்–எக்ஸ்”…இப்படியாக).
ஹாமி நேபாள்

இந்த நிகழ்வுப் போக்குகளின் விளைவாகத்தான், சமூக ஊடகத் தடை நடவடிக்கை ‘இஸட்’ தலைமுறையினரிடையே பெருங் கோபத்தை ஏற்படுத்தியது. சமூக ஊடகங்கள் வாயிலாகவே எதிர்ப்பியக்கத்திற்கு அறைகூவல் விடுக்கப்பட்டது. பல்லாயிரக்கணக்கானோர் அதைப் பகிர்ந்தனர். “ஹாமி நேபாள்“ (நாம் நேபாளியர்) என்ற முழக்கமே அடையாளச் சொல்லாக (ஹேஷ்டேக்) இணைக்கப்பட்டு போராட்டத் தகவல்கள் கொண்டுசெல்லப்பட்டன.
பல நகரங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. 8ஆம் தேதியன்று காத்மண்டு நகரில் நாடாளுமன்றக் கட்டடம் நோக்கி பல ஆயிரம் மாணவர்களும் இளைஞர்களும் அணிவகுத்தார்கள். அவர்களின் கணிசமானவர்கள் பள்ளிச் சீருடையுடன் இருந்தது குறிப்பிடத்தக்கது.
“ஹாமி நேபாள்” என்ற பதாகையின் கீழ் அவர்கள் பேரணியாகச் சென்றார்கள். பேரணி தடுக்கப்பட்டபோது ஆங்காங்கே வன்முறை மூண்டது. தடையை மீறியதாகக் காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள்.19 பேர் பலியானார்கள், 300க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தார்கள். சரியான அரசியல் வழிகாட்டலை நாட மறுத்துக் களமிறங்கியதன் சோகமான பிரதிபலிப்பாகவும் இது தெரிகிறது.

இது நாடெங்கும் கொந்தளிப்புகளை ஏற்படுத்தியது. கண்டனங்கள் எழுந்தன. அதைத் தொடர்ந்து 8ஆம் தேதி இரவே, சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடை விலக்கப்பட்டது. தகவல்தொடர்புத் துறை அமைச்சர் இதை அறிவித்தார். முன்னதாக உள்துறை அமைச்சர் பதவி விலகினார்.
நிதியமைச்சர் தெருவில் தாக்கப்பட்டார். கடைசியாக வந்த தகவலின் படி பிரதமர் ஷர்மா ஒலி பதவி விலகிவிட்டார். இளைஞர்கள் போராட்டத்தைக் கட்டுப்படுத்த ராணுவத்தைப் பயன்படுத்துமாறு அவசர அமைச்சரவைக் கூட்டம் பரிந்துரைத்ததாகவும், ஆனால் ராணுவத் தலைவர் அதை ஏற்க மறுத்து, பிரதமரைப் பதவி விலக அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

அடித்தளமாகப் பொருளாதாரம்
இதன் அடித்தளமாக நேபாளத்தின் பொருளாதார நிலவரமும் இருக்கிறது. ஓரளவு விவசாயம் என்பதோடு, பெருமளவுக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்புகளைச் சார்ந்ததாகவே அந்நாட்டின் பொருளாதாரம் இருந்து வருகிறது. குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளிலும் மலேசியா உள்ளிட்ட நாடுகளிலும் வேலைக்குச் சென்றவர்கள் அனுப்புகிற பணத்தை நேபாளம் பெரிதும் சார்ந்திருக்கிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இது கிட்டத்தட்ட 25 சதவீதம் என்றும், உலகில் இது மிக அதிகமான விகிதம் என்றும் கூறப்படுகிறது.
மற்ற நாடுகளில் பொருளாதார வீழ்ச்சி, மந்தநிலை என்று எற்பட்டாலோ, வேலைகள் குறைக்கப்பட்டாலோ நேபாளம் பெரிய அளவுக்கு பாதிப்பை எதிர்கொள்ளும். உள்நாட்டில் நவீன தொழில்கள் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடையவில்லை. அதற்கான மின்சார உற்பத்தி உள்ளிட்ட உள்கட்டமைப்புகளும் வலுவாக இல்லை. சுற்றுலா ஒரு முக்கிய வருவாய் ஈட்டும் துறையாக இருந்து வந்தது, கொரோனா தாக்குதலால் அதில் ஏற்பட்ட வீழ்ச்சியிலிருந்து நேபாளம் முற்றாக விடுபட இயலவில்லை.
தொழில்கள் வளராத நிலையில், வேலையின்மை ஒரு கடுமையான பிரச்சினையாக வளர்ந்திருக்கிறது. நேபாளத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஏறத்தாழ 5,00,000 இளைஞர்கள் வேலை வாய்ப்புச் சந்தைக்கு வருகிறார்கள். ஆனால் வேலைகளோ 50,000 முதல் 1,00,000 வரையில்தான் உருவாகின்றன எனறு ஒரு பொருளாதாரக் கள நிலவரத் தகவல் தெரிவிக்கிறது.

அரசியல் நெருக்கடி
இந்த நிலைமையைத் திறனோடு கையாள்வதற்கு அரசாங்கத்தால் இயலவில்லை. அதற்கு முக்கியமானதொரு காரணம், அரசியலில் உறுதியற்ற, அடிக்கடி ஆட்சிகள் மாறிய நிலைமைதான். ஆகவே, தொழில் வளர்ச்சிக்காகவும், வேலைகளைப் பெருக்குவதற்காகவும் என்று கொண்டுவரப்பட்ட திட்டங்கள் பெரும்பாலும் கோப்புகளுக்குள் செருகப்பட்டுள்ள காகிதங்களில்தான் இருக்கின்றன. இந்தப் போக்குகளும் சேர்ந்துதான், கணிசமான இளைஞர்களிடையே அரசியல் கட்சிகள் மீதே அவநம்பிக்கையை வளர்த்திருக்கிறது.
வெளிநாடுகளுக்குச் செல்லும் இளைஞர்களின் பணத்தைச் சார்ந்திருக்கும் அளவைக் குறைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், உள்நாட்டுத் தொழில்களையும் வேலைகளையும் பெருக்குவதறகு மாறாக, அடிப்படைப் பிரச்சனைக்கு தீர்வு காணாமல், அதன் விளைவுளை கட்டுப்படுத்த முயல்வதாக முடிந்துவிட்டன. நோய் முதல் நாடி , அதைச் சீராக்கிவிட்டு நோயின் வாய்நாடி வாய்ப்பச் செய்வதற்கு மாறாக மேலோட்டமாகப் புண்ணுக்கு எண்ணெய் தடவுகிற வேலையாகிப் போனது.
இதற்கு அரசியல் களம் முக்கியமான அடித்தளமாக அமைந்திருக்கிறது. இங்கே முந்தைய வரலாற்றுப் பக்கங்களைப் பார்த்துவிடலாம். 2008 வரையில் நேபாளம் மன்னராட்சியின் கீழ், இந்து மதத்தை அதிகாரப்பூர்வமானதாகக் கொண்ட நாடாக இருந்து வந்தது. எண்ணற்ற சீர்குலைவுகளையும் அடக்குமுறைகளையும் மக்கள் எதிர்கொண்டார்கள்.
2006இல் வெடித்த கிளர்ச்சிகளைத் தொடர்ந்து, மன்னரின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டன. அதன் ஒரு பகுதியாக, 2007இல் நிறைவேற்றப்பட்ட அரசமைப்பு சாசனத்தின் வாயிலாக, நேபாளம் தன்னை மதச்சார்பற்ற நாடு என்று அறிவித்துத் தலை நிமிர்ந்தது. 2008ல் நேபாள காங்கிரஸ் தலைமையில் குடியரசு ஆட்சி அமைந்தது. அப்போதிருந்தே பிற்போக்கு சக்திகள், மன்னராட்சி ஆதரவாளர்கள், மதவாதிகள் உள்ளிட்டோர் பழைய முடியரசு ஆட்சிக்குத் திரும்புவது பற்றிப் பேசி வருகிறார்கள். அதற்கான பல்வேறு சதிகளிலும் இறங்கி வருகிறார்கள். இந்தியாவின் ஆர்எஸ்எஸ் ஆதரவோடும், உள்நாட்டு இந்துத்துவா சித்தாந்திகளின் தூண்டுதலோடும் தற்போதைய அரசமைப்பு சாசனத்தைப் புதைக்க முயல்கிறார்கள் என்ற குற்றச்சாட்டும் உண்டு.

இத்தகைய நிலைமைகளில்தான், தேர்தல்களில் கம்யூனிஸ்ட் கட்சிகள் வெற்றி பெற்று, கூட்டணி ஆட்சிகளை அமைக்க முடிந்தது என்ற போதிலும் தீவிரமான மாற்றங்களைச் செயல்படுத்த முடியாத நிலைமை தொடர்கிறது. கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்தோரின் சுயநலன்கள், சமரசங்கள் ஆகியவையும் பல்வேறு நிர்வாகப் பின்னடைவுகளுக்கு இட்டுச் சென்றுள்ளன.
முந்தைய நேபாள கம்யூனிஸ்ட் கட்சி மூன்று பிரிவுகளாகப் பிளவுபட்டதும் முன்னேற்றத்தில் ஒரு பெரும் தடையை ஏற்படுத்தியது. இந்தப் பிளவும், இதர நிலைமைகளுமாகச் சேர்ந்து இளைய தலைமுறையினர் பலரையும் அரசியல் பங்கேற்பிலிருந்து ஒதுங்கிய ஜென் இஸட் மனப்போக்கிற்குத் தள்ளிவிட்டுள்ளது.
தற்போது தடையாணை விலகல், பிரதமர் விலகல் என்ற அரசியல் மாற்றம் காட்சிக்கு வந்திருக்கிறது. அடுத்த கட்ட மாற்றங்கள் எப்படி அமையும்? இளையோர் உள்ளிட்ட மக்களின் நம்பிக்கையைப் பெறவும், மதச்சார்பின்மையைப் பாதுகாத்துக் குடியரசாட்சியை நிலைப்படுத்தவும் நேபாள ஜனநாயக இயக்கங்கள் என்ன செய்யப் போகின்றன? மீட்கப்பட்டுள்ள கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் எவ்வாறு கையாளப்படப்போகிறது? இந்த வினாக்களுக்கான விடைகளுக்குக் காத்திருக்கிறது உலகம்.