ADVERTISEMENT

அடுத்த அதிரடி! நெல்லை கிழக்கு திமுக இரண்டாக பிரிப்பு.. தளராத ஆவுடையப்பன் ‘பிடி’!

Published On:

| By Mathi

DMK Nellai

கோவை மாநகர திமுக மாவட்ட செயலாளர் நா. கார்த்திக் நீக்கப்பட்ட நிலையில் அடுத்த அதிரடியாக, திமுகவின் நெல்லை கிழக்கு மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது.

நெல்லை கிழக்கு மாவட்டம், நெல்லை மத்திய மாவட்டம் என திமுகவில் நிர்வாக வசதிக்காக நெல்லை மாவட்டம் பிரிக்கப்பட்டிருந்தது. நெல்லை மத்திய மாவட்ட பொறுப்பாளராக அப்துல் வஹாப் எம்.எல்.ஏ, நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளராக முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் இருந்து வருகின்றனர்.

ADVERTISEMENT

தற்போது ஆவுடையப்பனின் நெல்லை கிழக்கு மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. நெல்லை கிழக்கு மற்றும் நெல்லை மேற்கு என புதியதாக பிரிக்கப்பட்டு நெல்லை மேற்கு மாவட்ட பொறுப்பாளராக ஆவுடையப்பன்; நெல்லை கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக கிரகாம்பெல் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நெல்லை மேற்கு மாவட்டத்தில் ஆலங்குளம், அம்பாசமுத்திரம் தொகுதிகளும் நெல்லை கிழக்கு மாவட்டத்தில் நாங்குநேரி, ராதாபுரம் தொகுதிகளும் இடம் பெற்றுள்ளன.

ADVERTISEMENT

திமுக தலைமைக் கழகத்தின் இந்த அறிவிப்பு தொடர்பாக நெல்லை மாவட்ட நிர்வாகிகளிடம் பேசிய போது, “கடந்த சில நாட்களுக்கு நெல்லை, தென்காசி மாவட்ட நிர்வாகிகளை முதல்வர் ஸ்டாலின் அழைத்து பேசினார். இந்த சந்திப்பு முடிந்த போதே, நெல்லை திமுகவில் மாற்றம் வரும் என புரிந்து கொண்டோம்.. ஒட்டுமொத்த நெல்லை மாவட்ட திமுகவையே மறுசீரமைப்பார் தலைவர் என எதிர்பார்ப்போம்.. இப்போதைய கிழக்கு மாவட்ட பிரிப்பு என்பது ஓரளவு ‘டேமேஜ் கண்ட்ரோல்’ நிலைமைதான்” என்கின்றனர்.

மேலும், “நெல்லை மத்திய மாவட்ட பொறுப்பாளர் வஹாப் எம்.எல்.ஏ.வுக்கும் மேயர் சரவணனுக்குமான மோதல் விவகாரத்துக்கு ஏற்கனவே அறிவாலயத்தில் பஞ்சாயத்து நடந்தது. முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் ரொம்பவும் ஆக்டிவ்வா இல்லைதான்.. அவருக்கு மாற்றாகவும் யாரும் இல்லைதான்..

ADVERTISEMENT

கட்சியில் ரொம்பவும் சீனியரும் கூட.. அவரை எல்லாம் உடனே மாற்றவும் மாட்டாங்க.. இருந்தாலும் இப்போதைக்கு ஆக்டிவ்வாக இருக்கக் கூடிய கிரகாம்பெல்லுக்கும் ஒரு மாவட்ட பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.. ஓரளவுக்கு நிலைமையை திமுக சமாளிக்கக் கூடியதாக இருக்கும்.. என்னதான் இருந்தாலும் ஒட்டுமொத்த நெல்லை திமுகவையும் புல் ஃபோர்சில் முடுக்கிவிடக் கூடிய அளவுக்கு திமுக தலைமை சாட்டையை கையில் எடுக்கனும்.. இல்லாவிட்டால் பருத்தி மூட்டை குடோனில்தானே இருக்கு.. மாற்றி என்ன பிரயோஜனம் என்கிற குமுறல் வந்துவிடும் எனவும் ஆதங்கப்படுகின்றனர் திமுக நிர்வாகிகள்.

திருநெல்வேலியில் மத்திய மாவட்ட பொறுப்பாளராக இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த அப்துல் வஹாப் எம்.எல்,ஏ, கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த கிரகாம்பெல், மேற்கு மாவட்ட பொறுப்பாளராக இந்துவான ஆவுடையப்பன் ஆகியோரை நியமித்து ‘சமன்’ செய்திருக்கிறது திமுக தலைமை என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share