‘நெல்லை பாய்ஸ்’ என்ற படத்தில் அறிவழகன் என்பவர் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார்.
படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வந்தது ஆச்சர்யம் இல்லை. ஆனால் அவர் பேசியது அடடே விஷயம்.
“இயக்குநரும் தயாரிப்பாளரும் அறிவழகனோடு வந்து இந்த நிகழ்வுக்கு வரவேண்டும் என்று எனக்கு அழைப்பு விடுத்தார்கள். பல்வேறு பணிச் சுமைகளுக்கு இடையில் எனக்குச் சற்றுத் தயக்கம் இருந்தது. ஆனாலும் மறுதலிக்க இயலவில்லை. அதற்கு முக்கியமான காரணம், இந்தப் படத்தின் நாயகன் தம்பி அறிவழகன். என்னால் அன்போடு கென்னி என்று அழைக்கப்படக்கூடிய தம்பி, குழந்தையிலிருந்து என் மடியில் வளர்ந்த ஒரு பிள்ளை. நான் இதை எண்ணி பெருமைப்படுகிறேன்.
திரைப்படக் கதாநாயர்களைத் தொட்டுப் பார்த்தால் போதும் என்று நிலையிலிருந்த நான் இந்த நாயகனை, நானே மடியில் வளர்த்தேன் என்பது மகிழ்வைத் தருகிறது. கே.கே நகர் ஒட்டகப் பாளையத்தில் நான் ஒரு வாடகை வீட்டில் சிலகாலம் தங்கியிருந்தேன். அந்த வீடு அறிவழகனது பெற்றோர் ஒளிப்பதிவாளர் வில்லாளன் என்கிற சிகாமணியின் வீடு. அவர் யார் என்றால் டிரம்ஸ் சிவமணியின் மைத்துனர்.
அந்த வீட்டில் நான் இருந்தபோது அறிவழகன் மூன்று வயதுக் குழந்தை.
குழந்தைகள் என்றால் எனக்கு அப்படி ஒரு பிரியம் உண்டு. அதிலும் இவன் பார்ப்பதற்கு அவ்வளவு அழகிய ஒரு குழந்தை, கொழுகொழு என்று இருப்பான்.
நான் சுற்றுப்பயணம் முடித்து நள்ளிரவில் வந்தாலும் அவனைப் பார்க்காமல் விடமாட்டேன். காலையில் நிகழ்ச்சிகளுக்குப் புறப்படுவதற்கு முன்பு அவனைப் பார்த்து விட்டு தான் செல்வேன். அப்படி அவன் மீது ஒரு பிரியம். அவனை நிறைய கிள்ளி வைத்திருக்கிறேன், கடித்து வைத்திருக்கிறேன். அப்படி இருந்த ஒரு பிள்ளை, இன்றைக்கு வளர்ந்து திரைப்படத்துறையில் ஒரு கதாநாயகனாக ஒரு படத்தில் நடிக்கிறான் என்பதை அறிந்து உள்ள படியே நான் பெரிதும் மகிழ்ந்தேன். அவனைப் பார்க்கும் போதெல்லாம் படம் எப்போது வருகிறது என்று கேட்பேன். சில படங்கள் எடுக்கப்பட்டாலும் திரைக்கே வராமல் போய்விடுகின்றன.
சிறு முதலீட்டுப் படங்கள் இப்படி பல நெருக்கடிகளைச் சந்திக்கின்றன. அவர்களால் பெரிய அளவிலே பிரமாண்டமான விளம்பரங்களைச் செய்ய முடிவதில்லை. வெளியீட்டாளர்களும் – விநியோகஸ்தர்களும் அந்த அளவுக்குப் போட்டி போட்டுக்கொண்டு வாங்க வருவதில்லை.
அந்த வரிசையில் இந்தப் படமும் ஒன்றோ, அறிவழகன் நடித்த படம் திரைக்கு வராமல் போய்விடுமோ என்று கவலை எனக்கு இருந்தது.
அறிவழகன் தன்னுடைய பெற்றோரோடு வந்து, என்னை அழைத்தபோது என்னால் மறுதலிக்க இயலவில்லை, மகிழ்ச்சி தாளவில்லை. கட்டாயம் நான் வருகிறேன், எவ்வளவு வேலையில் இருந்தாலும் வருகிறேன் என்று உறுதி அளித்தேன்.
கட்சி அலுவலகத்தில் 200 பேருக்கு மேல் இன்று திரண்டு இருந்தார்கள். ஆறு மணிக்கு நிகழ்ச்சி ஆயிற்றே என்று ஐந்து மணிக்கே எனக்கு பதற்றம் வந்து விட்டது.
ஆனாலும் என்னால் நேரத்திற்கு வர இயலாத அளவுக்கு பல்வேறு மாவட்டங்களிலிருந்து நிறைய தோழர்களும் என்னைச் சூழ்ந்து கொண்டார்கள்.
அவர்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு நான் இங்கே வந்து உங்கள் முன்னால் நிற்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.
தம்பி அறிவழகனை நான் நெஞ்சார வாழ்த்துகிறேன். அவருக்கு இப்படி ஒரு வாய்ப்பைத் தந்த தயாரிப்பாளர் ராஜா, இயக்குநர் கமல் ஜி இருவரையும் நெஞ்சார வாழ்த்துகிறேன். அறிவழகன் பிரபலமான குடும்பப் பின்னணியோ, ஏற்கெனவே பல படங்களில் நடித்துப் புகழடைந்தவரோ கிடையாது அப்படிப்பட்டவருக்கு வாய்ப்பு கொடுத்த அவர்களை நான் பாராட்டுகிறேன்; வாழ்த்துகிறேன்.”என்றார் .
இப்போது எல்லாம் திருமாவளவனை அடிக்கடி திரைப்பட விழா மேடைகளில் பார்க்க முடிகிறது .
ரூட்டை மாத்துறாரோ?
- ராஜ திருமகன்
