திருநெல்வேலியில் 6, 7 மற்றும் 8 வயதுடைய மூன்று சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், கைதான கூலித் தொழிலாளிக்கு மரண தண்டனை விதித்து நெல்லை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் இன்று (மார்ச் 12) அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
நெல்லை மேலப்பாளையத்தை அடுத்த குறிச்சி அருகே உள்ள அழகிரிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த் சேகர் (41). கூலித் தொழிலாளியான இவருக்குத் திருமணமாகி, மூன்று வயதில் ஒரு குழந்தை உள்ளது. கடந்த 2023-ஆம் ஆண்டு, தனது வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த 6, 7 மற்றும் 8 வயதுடைய மூன்று சிறுமிகளை ஒரே நேரத்தில் வீட்டிற்குள் அழைத்துச் சென்று ஆனந்த் சேகர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
மேலும் இந்தக் கொடூரச் செயலை வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவேன் எனச் சிறுமிகளை அவர் மிரட்டியுள்ளார். இதனால் அச்சமடைந்த சிறுமிகள் யாரிடமும் கூறாமல் இருந்துள்ளனர். ஆனால், அவர்களின் நடவடிக்கைகளில் ஏற்பட்ட மாற்றத்தைக் கவனித்த பெற்றோர்கள் விசாரித்தபோது, தங்களுக்கு நேர்ந்த கொடுமையைச் சிறுமிகள் கண்ணீருடன் விவரித்தனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள், பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணையை தொடங்கினர். ஆனந்த் சேகரை உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பு
இது தொடர்பான வழக்கு நெல்லை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார் இன்று (வியாழக்கிழமை) தீர்ப்பளித்தார். அவர் தனது தீர்ப்பில் குறிப்பிட்டதாவது:
“இந்தக் குற்றம் சமூகத்தில் நடக்கும் அரிதிலும் அரிதான (Rarest of rare) ஒன்றாகும். பிஞ்சு குழந்தைகளுக்கு இழைக்கப்பட்ட இந்தக் கொடுமையை மன்னிக்க முடியாது.”
இதனடிப்படையில், குற்றவாளி ஆனந்த் சேகருக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும், பாதிக்கப்பட்ட மூன்று சிறுமிகளுக்கும் தமிழக அரசு சார்பில் தலா 7 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் ஆணையிட்டார்.
