வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 12-ஆம் வகுப்பு மாணவி உடலில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி, குறுக்குச்சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயின்று வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு இயற்கை உபாதை கழிப்பதற்காக வீட்டை விட்டு வெளியே சென்ற மாணவி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் தாயும் சகோதரியும் இரவு முழுவதும் தேடியும் அவர் கிடைக்காததால், குளத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனிடையே, நேற்று மாலை அப்பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் முகம் மற்றும் உடலில் காயங்களுடன் மாணவி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். மாணவியின் கழுத்து துண்டால் நெரிக்கப்பட்டதற்கான தடயங்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
பொதுமக்கள் சாலை மறியல்
தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், மாணவியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் போலீசார் 4 பேரை சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி மாணவியின் உறவினர்களும் கிராம மக்களும் ராமேஸ்வரம் சாலையில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
காவல்துறை அலட்சியம்
“மாணவி காணாமல் போன அன்றே குளத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தோம். ஆனால், காவல்துறையினர் எங்களை விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்குச் செல்லுமாறு கூறினர். அங்கு சென்றபோது மீண்டும் குளத்தூரிலேயே புகார் அளிக்குமாறு கூறி அலைக்கழித்தனர். காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்திருந்தால் மாணவியை உயிருடன் மீட்டிருக்கலாம்” என்று உறவினர்கள் ஆவேசத்துடன் தெரிவித்தனர். குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.
6 தனிப்படைகள் அமைப்பு
இக்கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளைப் பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாரா என்பது பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே உறுதி செய்யப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“குளத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கச் சென்றபோது, பெண் மைனர் என்பதால் விளாத்திகுளம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறு காவல்துறையினர் வலியுறுத்தினர். உடனே பெண்ணின் பெற்றோர் 40 கி.மீ. தொலைவு செல்ல வேண்டும். ‘நீங்கள் தேடி மட்டும் பாருங்கள்’ என்று காவல்துறையினரிடம் கேட்டும் அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
பின்னர் மகளிர் காவல் நிலையம் சென்று புகார் அளித்தபோது, அங்கிருந்த காவல் ஆய்வாளர் பிரவீனா, ‘மாணவி யாரையாவது காதலித்து அவரோடு சென்றிருக்கும்’ என்று அலட்சியமாகக் கூறினார். மேலும், பெண்ணைத் தேடும் பணியில் ஈடுபடவில்லை.
இந்த நிலையில் உயிரிழந்த நிலையில் மாணவியின் பெரியப்பா உடலைப் பார்த்துள்ளார். காவல்துறையினர் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுத்திருந்தால் மாணவியை மீட்டிருக்கலாம்” என ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில், புகார் அளிக்க வந்தவர்களிடம் அலட்சியமாக நடந்து கொண்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில், குளத்தூர் காவல் ஆய்வாளர் பிரவீனாவை பணியிடை நீக்கம் செய்து நெல்லை சரக டிஐஜி சரவணன் உத்தரவிட்டுள்ளார்.
