தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் மாநில மாநாடு மதுரை பாரபத்தியில் இன்று (ஆகஸ்ட் 21) நடைபெறுகிறது. இதனையொட்டி கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் இலட்சக்கணக்கான தொண்டர்கள் இன்று காலை முதலே அங்கு குவிந்து வருகின்றனர்.
மாநாட்டு திடல் பகுதியில் நூறு டிகிரி வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், மயங்கி விழுந்த தொண்டர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மாநாட்டு திடலில் ஒவ்வொரு பகுதியிலும் குழாய் மூலம் தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. மேலும் தண்ணீர் கேன், குளிர் பானங்களும் தன்னார்வலர்கள் மூலம் தொண்டர்களுக்கு வழங்கப்படுகிறது.

இந்த நிலையில் குழாய்களில் தண்ணீர் வரவில்லை என்று பொய்யாக விமர்சித்ததாக கூறி பிரபல யூடியூபர் முக்தாரை அங்கிருந்த தொண்டர்கள் வாசல் வரை சென்று மாநாட்டு திடலில் இருந்து வெளியேற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ காட்சிகளும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இதுதொடர்பாக அங்கிருந்த கட்சி நிர்வாகி ஒருவர் பேசுகையில், ”யூடியூபர் முக்தர் மாஸ்க், கண்ணாடி அணிந்தபடி, மாறுவேடத்தில் மாநாட்டு திடலுக்கு வந்திருந்தார். இங்குள்ள அனைத்து குழாய்களிலும் தண்ணீர் வருகிறது. ஆனால் தண்ணீர் வரவில்லை என்று கூறி அதை சுட்டிக்காட்டி விமர்சித்தார். ஆனால் அதே குழாயில் நான் தண்ணீர் வரவைத்து காட்டினேன். ஆனால் அதை கேட்காமல் மீண்டும் அங்கிருந்த ஒரு சிறுவனை அழைத்து, டேப்பை லைட்டாக அழுத்துமாறு கூறி, தண்ணீர் வரவில்லை என விமர்சித்தார்.
அப்போது தான் நாங்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து, “ஏன் பொய் செய்தி வெளியிடுகிறீர்கள்” என்று கேட்டு, அவரை போலீசார் உதவியுடன் நுழைவு வாயில் வரை சென்று வெளியேற்றிவிட்டோம்.
ஊடகங்களை நாங்கள் பெரிதும் மதிக்கின்றோம். ஆனால் பொய் செய்தியை பரப்புவதற்கு இங்கு யாரும் வராதீர்கள். உண்மைச் செய்தியை வெளியிடுங்கள்” என்று கோரிக்கை வைத்தார்.