உச்சநீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்ட மத்திய அரசு- ஏன்?

Published On:

| By Mathi

NCERT Case SC

மத்திய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) வெளியிட்ட பாடப்புத்தகத்தில் ‘நீதித்துறையில் ஊழல்’ என்ற சர்ச்சைக்குரிய பாடம் இடம்பெற்றது குறித்து உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்த வழக்கில், மத்திய அரசு நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளது.

நீதித்துறையின் மாண்புக்கு களங்கம் விளைவிக்கும் எந்த செயலையும் ஒருபோதும் அனுமதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், மத்திய அரசு மன்னிப்பு கோரியுள்ளது. மேலும் சர்ச்சைக்குரிய பாடத்திற்கு உச்ச நீதிமன்றம் அதிரடி தடை விதித்துள்ளது.

ADVERTISEMENT

சர்ச்சையும் வழக்கும்

NCERT வெளியிட்ட 8-ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் “நீதித்துறையில் ஊழல்” என்ற தலைப்பில் ஒரு பாடம் இடம் பெற்றது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நாட்டின் நீதித்துறை மீது பொதுமக்கள் வைத்துள்ள நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் இந்தப் பாடம் அமைந்திருப்பதாக பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்தின் கவனத்திற்கு வந்ததை அடுத்து, தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜோய்மால்யா பாக்சி, நீதிபதி விபுல் பஞ்சோலி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் தாமாக முன்வந்து வழக்கை விசாரித்தது.

ADVERTISEMENT

இந்த வழக்கு விசாரணையின் போது, “நீதித்துறையை இழிவுபடுத்தும் எந்த செயலையும் அனுமதிக்க முடியாது” என திட்டவட்டமாகத் தெரிவித்ததுடன், ”இத்தகைய தவறான தகவல்கள் எவ்வாறு பாடப்புத்தகத்தில் இடம்பெற்றன?” என மத்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர் உச்சநீதிமன்ற நீதிபதிகள்.

இதனைத் தொடர்ந்து, மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் இன்று பிப்ரவரி 26-ந் தேதி நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியது. என்சிஇஆர்டி வெளியிட்ட பாடப்புத்தகத்தில் நீதித்துறை குறித்து தவறான தகவல்கள் இடம்பெற்றது எதிர்பாராத ஒரு தவறு என்றும், அதற்காக மன்னிப்பு கேட்பதாகவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

நீதித்துறையை தாங்கள் உயர்வாக மதிப்பிடுவதாகவும், சர்ச்சைக்குரிய அந்தப் பாடம் முழுமையாக நீக்கப்பட்டு, அடுத்த கல்வி ஆண்டுக்குள் (2026-27) புதிய பாடம் வழங்கப்படும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் உறுதி அளிக்கப்பட்டது.

மேலும், நீதித்துறை ஊழல் பாடத்தை புத்தகத்தில் சேர்த்தவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர் தண்டனையை ஏற்றுக் கொள்வார் என மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா உச்ச நீதிமன்றத்தில் விளக்கமளித்தார். பாடத்திட்டம் முழுமையாக மாற்றப்படும் என்றும், இந்த விவகாரத்தில் தொடர்புடையோர் இனி அந்தப் பணியில் தொடர மாட்டார்கள் என்றும் அவர் உறுதியளித்தார்.
,
இதனை ஏற்ற உச்சநீதிமன்றம்,

  • அச்சிடப்பட்ட அனைத்துப் பிரதிகளையும் உடனடியாக பறிமுதல் செய்ய வேண்டும்
  • புத்தகத்தின் அச்சு மற்றும் டிஜிட்டல் பதிப்பிற்கும் முழு தடை விதிக்கப்படுகிறது
  • இதன் மீதான நடவடிக்கைகள் குறித்து 2 வாரத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share