மிரட்டல் டீசர் : பாலய்யாவை மிஞ்ச எவரும் உண்டா?!

Published On:

| By christopher

NBK set high volatage action in akhanda 2 teaser

தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு ஆந்திரா, தெலங்கானாவில் எத்தனை லட்சம் அல்லது கோடி ரசிகர்கள் இருக்கின்றனரோ, நமக்கு தெரியாது. ஆனால், அவரது படங்கள் வெளியாகிறபோது தியேட்டர்களில் அவர்களது ஆரவாரம் நம்மை மலைக்க வைப்பதாக இருக்கும். கடல் கடந்த நாடுகளிலும் அந்த ஆவேசத்தில் துளியும் வேறுபாடு இருக்காது. கிட்டத்தட்ட அதனைப் பன்மடங்காகத் திரையில் பிரதிபலிக்கிற வகையில் தோன்றுவது பாலய்யாவின் வழக்கம். NBK set high volatage action in akhanda 2 teaser

நம்மூரில் என்னதான் ‘பாலய்யா ஹேட்டர்ஸ்’ என்ற பெயரில் அவரது படங்களைக் கிண்டலடித்து வீடியோக்கள் வெளியிட்டாலும், அந்த படங்களை ரசித்து, சிலிர்த்து பார்ப்பவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். மொழி பேதம் இன்றி ரசிகர்கள் அவரைக் கொண்டாடுவதற்கு ‘சண்முக பாண்டியன்’ உட்படத் தமிழில் ‘டப்பிங்’ செய்யப்பட்ட அவரது படங்களே சாட்சி.

அதனாலோ என்னவோ, சில மாதங்களுக்கு முன்னர் நடந்த என்.டி.ராமாராவை நினைவுகூரும் விழாவொன்றில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், ‘பாலய்யாவை ரசிகர்கள் இன்னொரு என்.டி.ஆரா பார்க்கிறாங்க. அவர் ஸ்கீரின்ல காட்டுற ஹீரோயிசத்தை நான் காட்டுனா ஏத்துக்க மாட்டேங்கிறாங்க’ என்று பேசியிருந்தார்.

அப்படிப்பட்ட பாலய்யாவுக்கு ‘மெகாஹிட்’டாக அமைந்த படம் ‘அகண்டா’. அதில் வழக்கமான ஹீரோ பாத்திரத்துடன் ஒரு அகோரியாகவும் இரட்டை வேடத்தில் தோன்றியிருந்தார். பொயப்பட்டி சீனு அதனை இயக்கியிருந்தார்.

மீண்டும் இந்த கூட்டணி அப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கி வருகிறது. ‘அகண்டா 2’ தாண்டவம் எனப் பெயரிடப்பட்ட இப்படத்தின் டீசர் இப்போது வெளியாகியிருக்கிறது.

பனி நிறைந்த இமயமலை, நந்தியை நினைவூட்டும் பசு, அவற்றின் தொடர்ச்சியாகத் துப்பாக்கி ஏந்திய பத்துக்கும் மேற்பட்டவர்களைத் தன் கையில் இருக்கும் சூலாயுதத்தால் தாங்கி நிற்கிற நாயகன் பாலகிருஷ்ணா என்று அமைந்திருக்கிறது இந்த டீசர்.

பின்னணியில் ‘தாண்டவம் தான்’ என்கிற குரல் ஒலிக்கிறது. இசை வேறு யாருமல்ல, எஸ்.எஸ்.தமன் தான்.

‘என் சிவன் அனுமதியில்லாம அந்த எமனே கண்ணெடுத்து பார்க்க மாட்டான். நீ பார்க்குறியா’ என்று வில்லன் பாத்திரத்தை எதிர்த்துக் கர்ஜிக்கும் பாலய்யாவின் குரலுக்கு நடுவே, விஎஃப்எக்ஸில் எதிர்த்து நிற்கும் அமானுஷ்ய சக்திகள் காட்டப்படுகின்றன.

அப்புறமென்ன, கல்லூரி இளசுகள் கையில் நோட்புக்கை சுற்றிச் சுழற்றுவது போன்று கழுத்தில் சூலாயுதத்தைச் சுழலவிட்டவாறே அடியாட்களின் நடுவே நடந்து வருகிறார் பாலய்யா. ரத்தம் துளித்துளியாகச் சிதறுகிறது.

மொத்தத்தில், ‘பாலய்யாவின் ரசிகர்களுக்கு பெரிய விருந்தே காத்திருக்கிறது’ என்பது பிடிபடுகிறது.

‘அகண்டா’ திரைப்படம் ஓடிடியில் பெற்ற அகன்ற வெற்றியின் காரணமாக, இப்படத்தின் டீசர் தமிழிலும் வந்திருக்கிறது. ஆக, ‘அகண்டாவை மிஞ்ச இங்க எவரும் உண்டா’ என நம்மூர் ரசிகர்கள் கொண்டாடுகிற தருணங்கள் காத்திருக்கின்றன.

ரொம்ப நாளில்லை, விஜயதசமியை ஒட்டி இப்படம் செப்டம்பர் 25 அன்று வெளியாகிறது. அந்நாளில் தமிழில் முன்னணி நாயகர்களின் படங்கள் வருவதைப் பொறுத்து ‘அகண்டா 2’வின் அதகளம் அமையும்..!

#Akhanda2 - Thaandavam  🔱 Teaser ( TAMIL ) | NBK | Boyapati Srinu | Thaman S
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share