திமுக கூட்டணியில் தேமுதிக இன்று (பிப்ரவரி 19) இணைந்துள்ள நிலையில், இவர்கள் ஏற்பாடு செய்து வருவது கூட்டணி அல்ல… தங்களுக்குள் உள்குத்து விளையாடும் குஸ்தி அணி! அவர்களின் கூட்டணிக்கான குழு தன் வேலையைத் தொடங்கும் தினத்திற்கு முன்பே, தினந்தோறும் எதையாவது செய்து தன் கால் நடுக்கத்தைக் காட்டிக்கொடுக்கிறது பவளவிழாக் கட்சி என தவெக பரப்புரைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் விமர்சித்துள்ளார்.
சென்னை அறிவாலயத்தில் இன்று திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் திமுக கூட்டணியில் இணைந்தார். இதைத் தொடர்ந்து அவர் தனது எக்ஸ் பதிவில்”கூட்டணி அறிவித்த இந்த நன்னாளில், வெற்றிப் பயணத்தின் தொடக்கமாக நான் கேப்டன் ஆலயத்தில் சிறப்பு பூஜை செய்து, அன்னதானம் வழங்கினேன். இது வெறும் அரசியல் முடிவு அல்ல… மக்களின் நம்பிக்கையை காக்கும் என் உறுதி. கேப்டன் அவர்களின் ஆசீர்வாதத்துடன், மக்களின் ஆதரவுடன், நிச்சயம் நாம் வெல்வோம்” எனத் தெரிவித்திருந்தார். மேலும் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், “கலைஞர் சொன்னது போல பழம் நழுவி தேன் கலந்த பாலில் விழுந்தது” எனத் தெரிவித்தார்.
இது குறித்து தவெக பரப்புரைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் தனது எக்ஸ் பதிவில், “இவர்கள் ஏற்பாடு செய்து வருவது கூட்டணி அல்ல.. தங்களுக்குள் உள்குத்து விளையாடும் குஸ்தி அணி! அவர்களின் கூட்டணிக்கான குழு தன் வேலையைத் தொடங்கும் தினத்திற்கு முன்பே, தினந்தோறும் எதையாவது செய்து தன் கால் நடுக்கத்தைக் காட்டிக்கொடுக்கிறது பவளவிழாக் கட்சி.
ஏற்கனவே அந்த பாழுங்கிணற்றுக்குள் இருப்பவர்கள் எல்லோருமே தங்கள் எண்ணிக்கை நிலையை எண்ணிக் கதறிக்கொண்டிருக்கிறார்கள். ‘யார் இருப்பார், யார் தாவுவார்’ எனத் தெரியாமல், ‘யாராவது இருக்கீங்களா? பயமா இருக்குது!’ என அலறி வருகிறார்கள்.
என்ன செய்வதெனத் தெரியாமல் அந்த ஓனர், மேற்கொண்டு இருப்பவர்கள் எல்லோரையும் வண்டியில் ஏற்றலாம் என முடிவு செய்துவிட்டார். இட ஒதுக்கீட்டைத் தாங்கள்தான் கண்டுபிடித்தோம் எனப் போலி வியாக்கியானம் பேசும் கூட்டம், கூட்டணி ஒதுக்கீட்டைக்கூடக் கையாள முடியாமல் தவிப்பதை நாடறியும்.
‘அவர் இருக்கிறார்; எனவே நீங்கள் குறைத்துக்கொள்ளுங்கள். இவர் இருக்கிறார்; எனவே நீங்கள் தள்ளி நில்லுங்கள்’ எனச் சக கூட்டணிக் கட்சிகள் ஒருவரையொருவர் ஒடுக்கத்தான் இந்த ஓவர்லோட் அணி ஏற்பாடு! இதற்குப் பெயர்தான் சமூக நீதியா?
அதிலும், மலரோடும் இலையோடும் கனியக் காத்திருந்த பழத்தைச் சூரியனிடம் சூடுபட அனுப்பியதே மலரின் தாய் அமைப்புதான் என்ற கசக்கும் உண்மையைச் சொல்லத்தான் வேண்டுமா? மொத்தத்தில் பழம் நழுவவில்லை; பாலில் விழவில்லை. பாதாளத்தில் தள்ளிவிடப் பட்டிருக்கிறது! அந்தோ பரிதாபம்!” எனத் தெரிவித்துள்ளார்.
