விஜய்யை மீண்டும் சீண்டிய நயினார் – நாஞ்சில் சம்பத் கண்டனம்

Published On:

| By Pandeeswari Gurusamy

கரூர், சேலத்தில் விஜய் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் உயிரிழந்தது நல்ல சகுனம்தானே என நயினார் நாகேந்திரன் பேசிய நிலையில், இது மனிதாபிமானம் அற்றது. மரணத்தில் கூட அரசியல் லாபம் தேடும் இந்த “கள்ளக்கூட்டணி” மனநிலை அருவருக்கத்தக்கது என தவெக பரப்புரைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வந்தன. இந்நிலையில், பிரச்சினையில் தொடர்புடைய நடிகை திரிஷா, “ஒரு உயர் அரசியல் பதவியில் உள்ள ஒருவரால் இத்தகைய அருவருப்பான மற்றும் பொருத்தமற்ற கருத்து வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கவில்லை” என வழக்கறிஞர் வாயிலாக கண்டனம் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இந்நிலையில், இன்று காலை மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், “என்னைப் பொறுத்தவரை தனிப்பட்ட முறையில் யாருடைய மனதும் புண்படக் கூடாது என்று நினைப்பவன்” என்றார். மேலும், “கரூரில் 41 பேர் இறந்தார்கள். அதற்கு தமிழக அரசும், மதிப்பிற்குரிய விஜயும் காரணம். 12 மணிக்கு வருகிறேன் என்று சொல்லிவிட்டு 7 மணிக்கு வருகிறார். குடிப்பதற்கு தண்ணீர் கூட ஏற்பாடு செய்யவில்லை. இப்போது கூட சேலத்தில் ஒருவர் இறந்துவிட்டார். நல்ல சகுனம்தானே இது அவர்களுக்கு” எனத் தெரிவித்திருந்தார்.

நயினாரின் இந்தப் பேச்சுக்கு தவெக பரப்புரைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பரப்புரைச் செயலாளர் அரசியலில் புதிய பாய்ச்சலை நிகழ்த்தி வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் எழுச்சியைக் கண்டு அஞ்சும் சக்திகள், இன்று தங்களின் மனிதாபிமானமற்ற முகத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.அறிவாலய கொத்தடிமை ஊதுகுழலாகவே மாறிவிட்ட கமலாலய கள்ளக்கூட்டணி தலைவருக்கு கண்டனம்.

ADVERTISEMENT

ஒருவர் உயிரிழந்த நிகழ்வை ‘நல்ல சகுனம்’ என்று கேலி செய்துள்ள பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனின் பேச்சு அடிப்படை மனிதாபிமானம் அற்றது.

அரசியல் நாகரிகம் என்பது எதிரிகளுக்கும் பொதுவானது. ஆனால், அதிகார மமதையில் இருப்பவர்களுக்கும், தங்களை அறிவாலயத்தின் ‘கொத்தடிமை ஊதுகுழலாக’ மாற்றிக்கொண்டு செயல்படும் கமலாலயத்தின் ‘கள்ளக்கூட்டணி’ தலைவர்களுக்கும் மனிதாபிமானம் என்றால் என்னவென்றே தெரியவில்லை.

ADVERTISEMENT

திராவிட மாடல் என்று தம்பட்டம் அடிக்கும் திமுகவும், அவர்களுக்கு மறைமுகமாகத் துணை போகும் பாஜகவும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என்பது இந்த இழிவான கருத்தின் மூலம் மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது.

மரணத்தில் கூட அரசியல் லாபம் தேடும் இந்த ‘கள்ளக்கூட்டணி’ மனநிலை அருவருக்கத்தக்கது.ஒரு இழப்பை ஏளனம் செய்வது, தமிழக வெற்றிக் கழகத்தின் கோடிக்கணக்கான தம்பிகளின் இதயங்களில் நெருப்பை மூட்டுவதற்குச் சமம். மக்களின் உணர்வுகளோடு விளையாடும் இதுபோன்ற தலைவர்கள், வரும் தேர்தலில் மக்களால் தக்க பாடம் புகட்டப்படுவார்கள்.

அறிவாலயத்தின் ஆணைக்கிணங்க செயல்படும் இத்தகைய ஊதுகுழல்கள், நமது கழகத்தின் வளர்ச்சியைத் தடுக்கப் போடும் சதித் திட்டங்கள் அனைத்தும் தவிடுபொடியாகும். மக்களின் துயரத்தில் இன்பம் காணும் இத்தகைய நச்சுக்கருத்துக்களைத் தமிழக வெற்றிக் கழகம் ஒருபோதும் சகித்துக் கொள்ளாது.

தொடர்ந்து கொச்சையான அநாகரீக மனிதாபிமானமற்ற கருத்தை வெளியிட்டு வரும் நயினார் நாகேந்திரன் உடனடியாகத் தனது பேச்சிற்குப் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.”என தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share