மருத்துவ ஆராய்ச்சிக்காக நல்லகண்ணு உடல் ஒப்படைப்பு!

Published On:

| By Kavi

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவரும், ‘தமிழகத்தின் எளிமை’ என்று போற்றப்படுபவருமான நல்லகண்ணு நேற்று (பிப்ரவரி 25) காலமானார். 

அவரது உடல் எம்பார்மிங் செய்யப்பட்டு, தி.நகரில் உள்ள கட்சி அலுவலகமான பாலன் இல்லத்தில் பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.  

ADVERTISEMENT

அவரது உடலுக்கு  தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், கம்யூனிஸ்ட் கட்சியினர், குடும்பத்தினர், நண்பர்கள், இளைஞர்கள், பொது மக்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். 

முதல்வர் ஸ்டாலின் நல்லகண்ணு உடலுக்கு மலர்வளையம் வைத்து, செவ்வணக்கம் , வீரவணக்கம் செலுத்தினார். 

ADVERTISEMENT

தொடர்ந்து 72 குண்டுகள் முழங்க நல்லகண்ணு உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. 

இதையடுத்து தி.நகர் கட்சி அலுவலகத்தில் இருந்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு நல்லகண்ணு அய்யாவின் இறுதி ஊர்வலம் புறப்பட்டது. 

ADVERTISEMENT

இதற்கிடையே மருத்துவமனை வளாகத்தில் மருத்துவர்களும், மருத்துவ ஊழியர்களும் நல்லகண்ணு உடல் வருகைக்காக வெளியே திரண்டு நின்று காத்திருந்தனர். 

வைகோ, திருமாவளவன், அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் காத்திருந்தனர். 

இந்நிலையில் மாலையில் மருத்துவமனைக்கு வந்தடைந்த நல்லகண்ணுவின் உடல் அருகே சென்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, வீர வணக்கம், வீரவணக்கம் என முழங்கினார்.  அவரைத் தொடர்ந்து கட்சித் தொண்டர்களும் நல்லகண்ணுவுக்கு  வீரவணக்கம் செலுத்தினர்.

கடைசியாக நல்லகண்ணுவின் மகள்களான காசிபாரதி மற்றும் ஆண்டாள் தங்களின் இறுதி அஞ்சலியை செலுத்தி, உடலை மருத்துவ ஆராய்சிக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்களிடம் ஒப்படைத்தனர். 

அவரது உடலை உறவினர்களிடமிருந்து சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர் சாந்தாராமன், உடற் கூறுயியல் துறை தலைவர் தீபா பென்ட்லி மற்றும் மருத்துவ மாணவர்கள் பெற்றுக் கொண்டனர்.

தனது உடலை மருத்துவ ஆராய்ச்சிக்காக சென்னை மருத்துவக் கல்லூரியிடம் கொடுக்க வேண்டும் என கடந்த 2016 ஆம் ஆண்டு நல்லகண்ணு விருப்பம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share