தமிழகத்தில் NDA கூட்டணி ஆட்சி.. பாஜகவிலிருந்து சுமார் 20 அமைச்சர்கள் – எடப்பாடிக்கு நெருக்கடி தரும் நயினார்

Published On:

| By Pandeeswari Gurusamy

Nainar

தமிழகத்தில் விரைவில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) ஆட்சி அமையும் என்றும், அதில் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த 20 முதல் 30 பேர் எம்எல்ஏக்களாக, அமைச்சர்களாக இடம்பெற வாய்ப்புள்ளது என்றும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னை அமைந்தகரையில் நடைபெற்ற பாஜக தேர்தல் பணிமனை திறப்பு விழாவில் கலந்துகொண்டு பேசிய நயினார் நாகேந்திரன், “இங்கிருந்தே சுமார் 20 முதல் 30 சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்வாகிப் போவார்கள் என்று நினைக்கிறேன். அது நிச்சயம் நடக்கும்,” என்றார்.

ADVERTISEMENT

அப்போது மேடையிலிருந்த பாஜக மூத்த நிர்வாகி வி.பி. துரைசாமி, “அவர்கள் அமைச்சர்களாகக் கூட வரலாம்,” என்று தெரிவித்ததை சுட்டிக்காட்டிய நயினார் நாகேந்திரன், “நிச்சயமாக வி.பி. துரைசாமி சொல்வதைப் போல நடக்க வாய்ப்புள்ளது,” எனத் தெரிவித்தார்.

தொகுதிப் பங்கீடு குறித்து விளக்கம்

ADVERTISEMENT

நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பிரதமர் மோடி தமிழகம் வந்து சென்ற பிறகு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனைகள் நடத்தப்படும். அகில இந்திய தலைமையின் வழிகாட்டுதலின்படி தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் சுமூகமாக நடைபெறும். தமிழகத்தில் மிக விரைவில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சி மலரும்.”என்றார்.

சசிகலா புதிய கட்சி தொடங்கப்போவதாக அறிவித்துள்ளது குறித்த கேள்விக்கு, “பலர் புதிய கட்சிகளை ஆரம்பித்து வருகின்றனர். ஆனால் எங்களைப் பொறுத்தவரை மக்கள் தற்போது பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் பக்கம் இருக்கிறார்கள். இதனால் எங்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது,” என்று அவர் பதிலளித்தார்.

ADVERTISEMENT

அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு

சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற ‘இந்தியா டுடே’ கருத்தரங்கில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ‘ஆட்சியில் பங்கு’ என்ற பேச்சுக்கே இடமில்லை; கூட்டணிக் கட்சிகளும் அவ்வாறு கேட்கவில்லை,” என்று திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார்.

அதிமுக தலைமையில் தனித்து ஆட்சி அமைப்போம் என இபிஎஸ் கூறி வரும் நிலையில், நயினார் நாகேந்திரனின் இந்த “கூட்டணி ஆட்சி மற்றும் பாஜக அமைச்சர்கள்” குறித்த கருத்து தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share