ஓபிஎஸுக்காக நான் பேசாமல் வேறு யார் பேசுவது என டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதித்தது, தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோர் வெளியேறியது என தமிழக அரசியல் களம் பரபரப்பாக உள்ளது.
இந்த சூழலில் , கூட்டணியை நயினார் நாகேந்திரனுக்கு கையாள தெரியவில்லை… ஆணவமாக பேசுகிறார்… அண்ணாமலை கூட்டணியை நன்றாக கையாண்டார் என்று நேற்று டிடிவி தினகரன் கூறினார்.
இந்த நிலையில் இன்று (செப்டம்பர் 7)சிவகங்கை அருகே மானாமதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், “பழனிசாமி தான் எங்கள் கூட்டணியின் தலைவர். அவர் எடுக்கும் முடிவு தான் எங்கள் முடிவு என்று நயினர் நாகேந்திரன் பேசிய பிறகு, அந்த கூட்டணியில் நாங்கள் இருக்க முடியுமா?.
நயினார் நாகேந்திரன் நாங்கள் வெளியேற வேண்டும் என்று திட்டமிட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.
அதனால்தான் நேற்று அவர் அளித்த பேட்டியில், நாங்கள் டிடிவி தினகரனிடமும் ஓபிஎஸிடமும் பேச தயார் என்று கூறியிருக்கிறார்.
ஓபிஎஸ், நயினார் நாகேந்திரனுக்கு அனுப்பிய மெசேஜ் மற்றும் தொலைபேசி அழைப்பு விவரங்களை மறைத்துவிட்டு, என்னிடம் கேட்டிருந்தால் பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்திருப்பேன் என்று சொன்னது அகம்பாவம்… ஆணவம் தானே.
நான் பேச தயார் என்று அரசியலுக்காக அவர் கதை கட்டிக் கொண்டிருக்கிறார். நாங்கள் வெளியேறுவதற்கு முக்கிய காரணமே நயினார் நாகேந்திரனின் செயல்பாடுகளும் மனநிலையும் தான்.
ஓபிஎஸுக்காக இவர் (டிடிவி தினகரன்) ஏன் பேச வேண்டும் என்று கேட்கிறார். அப்போதே தெரியவில்லையா நயினார் நாகேந்திரனின் மனநிலை என்னவென்று.
ஓ.பன்னீர் செல்வத்துக்காக நான் பேசாமல் வேறு யார் பேச முடியும். நாங்கள் இருவரும் ஒன்றாக செயல்படுவோம் என்று சொல்லி இருக்கிறோம்
ஒன்றாக தான் இந்த கூட்டணிக்கு போனோம். எனக்காக, தேனி தொகுதியையே விட்டுக் கொடுத்துவிட்டு ராமநாதபுரத்தில் போட்டியிட்டவர் ஓபிஎஸ்.
நாங்கள் இருவரும் ஒன்றாக முடிவெடுப்போம், ஒன்றாக பயணிப்போம் என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே சொல்லிவிட்டோம்.
அவருக்கு நான் குரல் கொடுக்காமல் வேறு யார் பேச முடியும்.
எனக்கு பின்னால் அண்ணாமலை இருக்கிறார் என்று பேசுகிறார்கள். கூட்டணியில் இருந்து விலக வேண்டாம் உங்களுக்கான மரியாதை கிடைக்கும் என்று அண்ணாமலை எங்களை சமாதானப்படுத்தினார்.
ஆனால், பழனிசாமியை முதல்வராக ஏற்றுக்கொண்டு எங்களால் வர முடியுமா என்று அவரிடம் கேட்டேன்.
அண்ணாமலை தலைவராக இருந்த போது நடுநிலையாக செயல்பட்டார். எங்கள் தேவை அறிந்து செயல்பட்டார். கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு உரிய மரியாதை கொடுத்தார்.
எங்களுக்கு பின்னால் அண்ணாமலை இருக்கிறார் என்று பேசினால் அவர்களுக்கு அரசியல் தெரியவில்லை என்று அர்த்தம்.
செங்கோட்டையனுக்கு பின்னால் பாஜக இருக்கிறது என்று சொல்கிறார்கள். அப்படியானால் நான் வெளியேறியதற்கு பின்னால் யார் இருக்கிறார். யூகங்களுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது.
அதேபோல நாங்கள் விஜய்யுடன் செல்வதாக சொல்வது ஊடக வியூகம். அமமுக இணையும் கூட்டணி வெற்றி கூட்டணியாக அமையும்” என்று கூறினார்.