முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு இன்று (பிப்ரவரி 25) பிற்பகல் 1.55 மணியளவில் உடல் நலக்குறைவால் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் பதிவில்,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான ஐயா நல்லகண்ணு, உடல்நலக்குறைவு காரணமாக தமது 101-வது வயதில் இயற்கை எய்தினார் என்ற தகவல் மிகுந்த மன வேதனையளிக்கிறது. அன்னாரின் குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களைக் கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
மிக இளம் வயதிலேயே அரசியலில் அடியெடுத்து வைத்து, நாட்டின் சுதந்திரத்திற்காகவும், அனைத்துத் தரப்பு மக்களின் உரிமைகளுக்காகவும் நூற்றுக்கணக்கான போராட்டங்களை முன்னெடுத்ததோடு, வாழும் வரை எளிமையின் அடையாளமாகவே அறியப்பட்டவர் ஐயா நல்லகண்ணு. அன்னாரின் பொதுச்சேவையும் அர்ப்பணிப்பும் மக்கள் மனதிலும் அரசியல் வரலாற்றிலும் என்றும் நீங்கா இடம்பிடித்திருக்கும்!” என தெரிவித்துள்ளார்.
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு (101) வயது மூப்பின் காரணமாக காலமானார் என்கிற செய்தி வேதனையை அளிக்கிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தூணாக விளங்கிய அவர், தமது வாழ்நாளில் எளிமையை கடைபிடித்து, லஞ்சம் மற்றும் ஊழலுக்கு அப்பாற்பட்ட நேர்மையான அரசியல்வாதியாக தன்னை நிலைநிறுத்தியவர்.
பொதுமக்களின் நலனுக்காக போராடிய அவரது சேவை என்றும் நினைவுகூரப்படும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், அவர் சார்ந்த இயக்கதிற்கும் எனது இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். ” என தெரிவித்துள்ளார்.
இன்று மாலை 5 மணியளவில் நல்லகண்ணுவின் உடல் சென்னையில் உள்ள பாலன் இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது.
