முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு தனது 101 ஆவது வயதில் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் இன்று பிற்பகல் 1.55 மணியளவில் காலமானார். அவரது உடல் சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர்களின் ஆய்வுகளுக்காக நாளை தானமாக வழங்கப்படும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தகைசால் தமிழரை – இனிய தோழரை முழு அரசு மரியாதையுடன் செவ்வணக்கம் செலுத்தி வழியனுப்பி வைப்போம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் நல்லகண்ணு மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பதிவில், “இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், ஐயா நல்லகண்ணு காலமான செய்தி, மிகுந்த வருத்தமளிக்கிறது.
சிறந்த சமூக சீர்திருத்தவாதியாகவும், மிகவும் எளிமையான தலைவராகவும் விளங்கியவர். கட்சிகளுக்கு அப்பாற்பட்டு, அனைத்துத் தரப்பு மக்களிடமும் நன்மதிப்பைப் பெற்றவர்.
ஐயா நல்லகண்ணூ அவர்கள் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய, இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.
தவெகவின் கொள்கைப் பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ் தனது எக்ஸ் பதிவில், “எளிமையின் சிகரம்! கொள்கைக் குன்றின் மறைவு!
விடுதலைப் போராட்ட வீரரும், அரசியலில் தூய்மைக்கும், பொதுவாழ்வில் நேர்மைக்கும் இலக்கணமாகத் திகழ்ந்த இடதுசாரி இயக்கத்தின் மூத்த பெருந்தகை, முதுபெரும் தலைவர் ஐயா நல்லகண்ணு இயற்கை எய்திய செய்தி கேட்டு மிகுந்த மனவேதனையும் துயரமும் அடைகிறோம்.
தமிழகத்தின் நில உரிமைப் போராட்டங்கள் தொடங்கி, இயற்கை வளங்களைக் காக்கும் களங்கள் வரை தன் வாழ்நாள் முழுவதையும் மக்களுக்காகவே அர்ப்பணித்தவர். அதிகாரத்தின் உச்சத்தில் இருப்பவர்களுக்கும், எளிய மக்களுக்கும் ஒரே மாதிரியான மரியாதையையும் அன்பையும் தந்தவர்.
ஐயா நல்லகண்ணு அவர்களின் மறைவு என்பது ஒரு இயக்கத்தின் இழப்பு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழகத்தின் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு. அவர் விட்டுச் சென்ற நேர்மை மற்றும் எளிமை எனும் விழுமியங்களைப் போற்றிப் பாதுகாப்பதே அவருக்கு நாம் செய்யும் உண்மையான அஞ்சலியாகும்.
அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், இடதுசாரித் தோழர்களுக்கும், தமிழக மக்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.” என தெரிவித்துள்ளார்.
பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனது எக்ஸ் பதிவில், “சுதந்திரப் போராட்ட வீரர்
இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவர் நல்லகண்ணு மறைவுச் செய்தி மிகுந்த துயரத்தை அளிக்கிறது. வாழ்நாள் முழுவதும் மக்களுக்காக போராடிய அவரது சேவை என்றும் நினைவுகூரப்படும். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். குடும்பத்தினர் மற்றும் தோழமைகளுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். ” என தெரிவித்துள்ளார்.
