மைசூர் சாண்டல் சோப் பிராண்ட் அம்பாசிடரான நடிகை தமன்னாவிற்கு 2 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் 6.27 கோடி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கர்நாடக மாநில அரசு நிறுவனமான கர்நாடகா சோப் அண்டு டிடெர்ஜெண்ட் லிமிடெட் நிறுவனம் 1916ம் ஆண்டு முதல் 100 சதவிகிதம் சந்தன எண்ணெய்யில் இருந்து உற்பத்தி செய்யப்படுவதாக கூறி மைசூர் சாண்டல் சோப்பை அறிமுகப்படுத்தியது.
தற்போது ஒவ்வொரு நாளும் சுமார் 12 லட்சம் சோப்புகள் உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த 2006ம் ஆண்டு முதல் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி மைசூர் சாண்டல் சோப்பின் முதல் அம்பாசிடராக இருந்தார். இதைத்தொடர்ந்து நடிகை தமன்னா விளம்பர தூதராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் நடிகை தமன்னா நியக்கப்பட்டது தற்போது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
கர்நாடகா பாஜக உறுப்பினர் சுனில், மைசூர் சாண்டல் சோப் விளம்பரத்தின் செலவு குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு அம்மாநில அரசு தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. அதில் கடந்த 2 ஆண்டுகளில் விளம்பரத்திற்கு ரூ.48 கோடியே 21 ஆயிரத்து 350 செலவு செய்யப்பட்டுள்ளது. இதில் நடிகை தமன்னாவுக்கு ரூ.6.27 கோடியும், இஷானி ஷெட்டிக்கு ரூ.15 லட்சமும், கன்னட பிரபலங்களுக்கு ரூ.62 லட்சத்து 87 ஆயிரமும் என மெத்தம் 56 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக எழுத்துப்பூர்வமான அரசு தெரிவித்துள்ளது.
தமன்னா விளம்பர தூதராக இரண்டு ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டபோதே கன்னட நடிகர் நடிகைகளை பயன்படுத்தாமல் விளம்பரத்திற்கு பாலிவுட் நடிகைகளை நியமிப்பதற்கு எதிர்ப்பு எழுந்தது. இதற்கு கர்நாடக அரசு, பாலிவுட்டுக்கு போட்டி கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் மைசூர் சாண்டல் பிராண்டை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் தமன்னா விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்த 3 வருடங்களில் ரூ.5,000 கோடி வர்த்தகத்தில் ஈட்டுவதற்காகவே மார்க்கெட்டிங் நிபுணர்களிடம் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கப்பட்டதாக கூறியது குறிப்பிடத்தக்கது.