மைசூர் சாண்டல் சோப்பின் பிராண்ட் தூதராக நடிகை தமன்னாவை ரூ.6.20 கோடிக்கு கர்நாடகா அரசு ஒப்பந்தம் செய்தது சர்ச்சையாக வெடித்துள்ளது. karnataka govt give 6.2 cr Tamannaah for mysore sandal
மைசூர் சாண்டல் சோப்பு என்பது நூற்றாண்டுக்கும் மேலான பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. 1916 ஆம் ஆண்டு மன்னர் நான்காம் கிருஷ்ண ராஜா உடையாரால் ‘மைசூர் சாண்டல்’ நிறுவனம் தொடங்கப்பட்டது. இது கர்நாடகாவின் மரபு மற்றும் பெருமையுடன் நீண்ட காலமாக தொடர்புடையது.
கர்நாடகா அரசின் சார்பில் பெங்களூருவில் உள்ள கர்நாடக சோப்ஸ் மற்றும் டிடர்ஜென்ட்ஸ் லிமிடெட் (KSDL) தொழிற்சாலையில் மைசூர் சாண்டல் சோப்பு தயாரிக்கப்படுகிறது. உலகிலேயே 100% தூய சந்தன எண்ணெயிலிருந்து தயாரிக்கப்படும் ஒரே சோப்பு என்ற பெருமையை மைசூர் சாண்டல் கொண்டுள்ளது.

இந்த நிலையில் பாலிவுட் நடிகையான தமன்னாவை மைசூர் சாண்டல் சோப்பின் பிராண்ட் தூதராக கர்நாடக அரசு இரண்டு ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. அதற்கு சம்பளமாக ரூ.6.2 கோடி வழங்க உள்ளது. பான்-இந்திய நட்சத்திரத்தை இணைக்க கர்நாடக அரசு எடுத்த இந்த முடிவு கொண்டாட்டத்தை ஏற்படுத்திய அதேவேளையில் சர்ச்சையையும் தூண்டியுள்ளது.
இது தொடர்பான அரசாணை நேற்று வெளியான நிலையில், ’கன்னட திரையுலகைச் சேர்ந்த நடிகைகளை பிராண்ட் தூதராக நியமிக்காமல், தமன்னாவை நியமித்தது ஏன்?’ என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
எக்ஸ் தளத்தில் ஒரு பயனர், “நம்மிடம் தேசிய அளவில் பிரபலமான கன்னட நடிகைகள் பலர் உள்ளனர். ஆனால் எங்கள் பிராண்டின் முகமாக பாலிவுட் திரையுலக நடிகைக்கு ஏன் பணம் கொடுக்க வேண்டும்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

மற்றொரு பயனர், “மைசூர் சாண்டல் சோப்பை பிரபலபடுத்த ரஷ்மிகா மந்தனா, ஸ்ரீநிதி ஷெட்டி, ருக்மிணி வசந்த் அல்லது பிரணிதா சுபாஷ் ஆகியோர் ஏன் அரசின் கண்களுக்கு தெரியவில்லை?” எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
தொடர்ந்து இதுபோன்ற விமர்சனங்கள் அதிகரித்து வரும் நிலையில், கர்நாடகாவின் வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் எம்பி பாட்டீல், பிராண்ட் தூதராக தமன்னா நியமிக்கப்பட்டதற்கு விளக்கம் அளித்துள்ளார்.
அமைச்சரின் விளக்கம்!
அதில், “கேஎஸ்டிஎல் கன்னட திரைப்படத் துறையின் மீது ஆழ்ந்த மரியாதை கொண்டுள்ளது. இருப்பினும், மைசூர் சாண்டல் கர்நாடகாவிற்கு அப்பால் தீவிரமாக விரிவடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது தேசிய அளவில் மைசூர் சாண்டலை இன்னும் அதிகமாக பிராண்ட் செய்வதற்கான ஒரு கணக்கிடப்பட்ட சந்தைப்படுத்தல் உத்தி. இந்த முடிவானது சந்தைப்படுத்தல் நிபுணர்களுடன் கலந்தாலோசித்து கேஎஸ்டிஎல் வாரியத்தால் உறுதியுடன் எடுக்கப்பட்டது.

2028 ஆம் ஆண்டுக்குள் KSDL ஆண்டு வருவாயில் ரூ. 5,000 கோடியை எட்டுவதே எங்கள் தொலைநோக்கு. அதன்படி தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் பிராண்டை கொண்டு சேர்ப்பதற்காக இந்த முடிவு மிகச் சரியாக எடுக்கப்பட்டுள்ளது.
மைசூர் சாண்டல் தயாரிப்புகளில் 18% மட்டுமே கர்நாடகாவுக்குள் விற்பனையாகிறது. மீதமுள்ள 82% தென் மாநிலங்களில் விற்கப்படுகின்றன.
எனவே தமன்னாவை நியமிக்கும் முடிவு பிராந்திய உணர்வை அடிப்படையாகக் கொண்டது அல்ல, சந்தை நுண்ணறிவு மற்றும் மூலோபாய வணிக நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டது” என அவர் தெரிவித்துள்ளார்.
