பீகார் தேர்தலில் பிரளயத்தை ஏற்படுத்திய முஸ்லிம் வாக்குகள்- என்ன நடந்தது?

Published On:

| By Mathi

Bihar Nitishkumar

பீகார் சட்டமன்ற தேர்தலில் (Muslim Votes and Bihar) வரலாறு காணாத வெற்றியை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பெற்றுள்ளது. பீகாரில் இன்னொரு சரித்திரமும் நிகழ்ந்துள்ளது. மதச்சார்பற்ற சக்திகளான காங்கிரஸ்- ஆர்ஜேடி கட்சிகளின் பாரம்பரிய வாக்கு வங்கியான முஸ்லிம்கள், இந்த முறை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை ஆதரித்து வாக்களித்திருக்கின்றனர்.

பீகாரில் மட்டுமல்ல.. இந்திய அரசியலிலேயே மிகப் பெரும் விவாதத்துக்குரியதாக பீகார் முஸ்லிம்களின் இந்த நிலைப்பாடு மாறி இருக்கிறது.

ADVERTISEMENT

பாஜகவைப் பொறுத்தவரை இந்துக்களை ஒருங்கிணைக்கக் கூடிய ஒரு மதவாத சக்தியாக விமர்சிக்கப்படுகிறது. ஆனால் பாஜகவோ சிறுபான்மை சமூகங்களில் ஒன்றான கிறிஸ்தவர்களை தன்வயப்படுத்துவதில் வெற்றி கண்டிருக்கிறது. கிறிஸ்துவர்கள் பெரும்பான்மையினராக இருக்கக் கூடிய வடகிழக்கு மாநிலங்களிலும் கோவாவிலும் பாஜகவின் கொடி பறக்க இது ஒரு காரணம். கேரளாவிலும் பாஜக ஆழ ஊடுருவ கிறிஸ்தவர்களின் ஆதரவும் மிக முக்கிய காரணம்.

தற்போது பீகார் முஸ்லிம்களின், பாஜக கூட்டணிக்கான ஆதரவு நிறைய விவாதங்களை உருவாக்கி இருக்கிறது. கிறிஸ்தவர்களைத் தொடர்ந்து முஸ்லிம்களும் பாஜக பக்கம் சாய்கின்றனரா? அப்படியானால் இந்தியாவின் அரசியல் எதிர்காலம் பாஜக என்ற ஒற்றைக் கட்சியின் பிடிக்குள் செல்கிறதா? இந்துத்துவா சர்வாதிகார அரசை நோக்கி இந்தியா செல்லப் போகிறதா? என ஏராளமான கேள்விகள் எழுகின்றன.

ADVERTISEMENT

சரி பீகாரில் என்ன நடந்தது?

பீகாரின் மொத்த மக்கள் தொகையில் முஸ்லிம்கள் சுமார் 17.7%. அதாவது 2.3 கோடி பேர் முஸ்லிம்கள்.

ADVERTISEMENT

பீகார் மாநிலத்தின் 243 சட்டமன்றத் தொகுதிகளில் சுமார் 70 தொகுதிகளில், வங்கதேச எல்லையை ஒட்டிய சீமாஞ்சல் பிராந்தியத்தில் பெரும்பான்மையினராக முஸ்லிம்கள் உள்ளனர்.

சீமாஞ்சல் பிராந்தியத்தில் உள்ள பகுதிகளில் உள்ள முஸ்லிம் மக்கள் தொகை:

  • கிஷன்கஞ்ச் 68%
  • கட்டிஹார் 43%
  • அராடியா 42%
  • பூர்னியா 38%

பீகார் SIR- திருத்தத்தில் வாக்காளர் பட்டியல் இருந்து முஸ்லிம்கள் நீக்கப்பட்டதாக காங்கிரஸ் பிரசாரம் செய்தது; இந்த முஸ்லிம்களில் கணிசமானவர்கள், 2002-ம் ஆண்டுக்குப் பிறகு வங்கதேசத்தில் இருந்து இடம் பெயர்ந்தவர் அல்லது ஊடுருவியவர்கள் என்பதாகவும் சொல்லப்படுகிறது. இது உண்மை எனில் யதார்த்தத்தில் பூர்வீக முஸ்லிம்களின் வாக்குரிமை பறி போகவில்லை; இடம்பெயர்ந்து வந்த வங்கதேச முஸ்லிம்களின் வாக்குரிமை பறிபோய் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

பீகார் தேர்தல்களும் முஸ்லிம் வாக்குகளும்

2015 சட்டமன்றத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் (JD(U)), ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD) மற்றும் காங்கிரஸ் அடங்கிய “மகாகத்பந்தன்” (பெரும் கூட்டணி) 178 தொகுதிகளில் வென்று ஆட்சியைப் பிடித்தது. நிதிஷ் குமார் முதல்வரானார். முஸ்லிம் வாக்காளர்கள் பெரும்பாலும் இந்த மதச்சார்பற்ற கூட்டணிக்கு ஆதரவளித்தனர்.

2020 சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) பெரும்பான்மையைப் பெற்று ஆட்சியைப் பிடித்தது. RJD அதிகபட்சமாக 23.03% வாக்கு சதவீதத்தைப் பெற்றது. இத்தேர்தலில் அசாதுதீன் ஓவைசியின் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) கட்சி ஐந்து முஸ்லிம் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்து, முஸ்லிம் வாக்குகளின் பிளவுக்கு ஒரு முன்னோட்டமாக அமைந்தது.

2025 சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) 200-க்கும் அதிகமான தொகுதிகளைக் கைப்பற்றி உள்ளது. முஸ்லிம் மக்கள் தொகை அதிகம் உள்ள தொகுதிகளிலும் பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி அதிக தொகுதிகளைக் கைப்பற்றி இருக்கிறது.

முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதிகளில்- பாஜக கூட்டணியில் உள்ள
JD(U) 2020 தேர்தலை விட 8 தொகுதிகளிலும், சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி (LJP) 6 தொகுதிகளிலும் வென்றுள்ளன.

முஸ்லிம்கள் அதிகமாக உள்ள பகுதிகளில் ஆர்ஜேடி 7 தொகுதிகளையும் காங்கிரஸ் 4 தொகுதிகளையும் பறிகொடுத்துள்ளது.

முஸ்லிம் வாக்குகள் பிரிப்பு

அசாதுதீன் ஓவைசியின் AIMIM, பிரசாந்த் கிஷோரின் ஜன சுராஜ் கட்சி போன்ற சிறிய கட்சிகள் முஸ்லிம்கள் அதிகம் வாழும் தொகுதிகளில் போட்டியிட்டது வாக்குகளைப் பிரித்தது.

ஆர்ஜேடி- காங்கிரஸ் மீதான முஸ்லிம்களின் நம்பகத்தன்மை தகர்ந்து போகத் தொடங்கியுள்ளதாகவும் பார்க்கப்படுகிறது. SIR-ல் வங்கதேச முஸ்லிம்களின் வாக்குரிமை பறிப்புக்கு காங்கிரஸ் அதீத முக்கியத்துவம் கொடுத்தது உள்ளூர் முஸ்லிம்களிடையே ஒருவித வெறுப்பை இயல்பாகவே உருவாக்கிவிட்டிருக்கலாமோ என்ற கேள்வி எழுகிறது.

நிதிஷ்குமாரும் இஸ்லாமியர்களும்

பீகார் மக்கள் தொகையில் 17% இஸ்லாமியர்கள் இருந்தாலும், துணை முதல்வர் போன்ற முக்கிய பதவிகளில் அவர்களுக்குப் பிரதிநிதித்துவம் இல்லாதது குறித்த கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் (JD(U)) கட்சி நீண்ட காலமாக ஒரு மதச்சார்பற்ற பிம்பத்தைப் பேணி வந்துள்ளது. பாஜகவுடன் கூட்டணி அமைத்திருந்தாலும், நிதிஷ் குமார் முஸ்லிம்களுக்கு எதிராக எந்த ஒரு கடுமையான நிலைப்பாட்டையும் எடுத்ததில்லை என்ற கருத்து நிலவுகிறது. முஸ்லிம்களை ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்காமல், அவர்களின் நலன்களுக்காகச் சில திட்டங்களைச் செயல்படுத்தியது அல்லது சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதில் அவரது நிர்வாகம் பாராட்டைப் பெற்றிருக்கலாம்.

மேலும், மகாகத்பந்தன் கூட்டணி மீதான அதிருப்தி, நிதிஷ் குமாரின் தனிப்பட்ட ஆளுமை, மாநில அரசின் வளர்ச்சித் திட்டங்கள் ஆகியவை முஸ்லிம் வாக்காளர்களை தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாக்களிக்கத் தூண்டியிருக்கலாம்.

நிதிஷ்குமார் ஆட்சியில் முஸ்லிம்களின் நலன்கள்

  • நிதிஷ்குமார் ஆட்சிக்கு வந்த பிறகு, சிறுபான்மையினர் நலத்துறைக்கான நிதி ஒதுக்கீடு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 2025-26 நிதியாண்டில், இத்துறைக்கான நிதி ஒதுக்கீடு 306 மடங்கு உயர்ந்து, ஆண்டுக்கு ₹1,080.47 கோடியாக ஒதுக்கப்பட்டுள்ளது.
  • 2006 ஆம் ஆண்டுக்குப் பிறகு, பீகாரில் இயங்கி வந்த மதரஸாக்கள் முறைப்படுத்தப்பட்டு, அரசு அங்கீகாரம் பெற்றன. இதன் விளைவாக, மதரஸாக்களில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு இணையான சம்பளம் வழங்கப்படுகிறது. இது மதரஸா ஆசிரியர்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றியதுடன், தரமான கல்வியை உறுதி செய்யவும் வழிவகுத்துள்ளது.
  • சமூகத்தில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய பிரிவினராக உள்ள, கணவனால் கைவிடப்பட்ட அல்லது விவாகரத்து செய்யப்பட்ட முஸ்லிம் பெண்களுக்கு உதவும் வகையில் 2007 ஆம் ஆண்டில் ₹10,000 நிதி உதவித் வழங்கப்பட்டது. இந்த உதவித்தொகை, தற்போது மாதத்திற்கு ₹25,000 ஆக உயர்த்தி வழங்கப்படுகிறது. இது அவர்களின் வாழ்வாதாரத்திற்குப் பெரும் ஊன்றுகோலாக அமைகிறது.
  • முஸ்லிம் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்காலத்தை மேம்படுத்த பல்வேறு கல்வி மற்றும் பயிற்சித் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. கல்வி உதவித்தொகைகள், இலவசப் பயிற்சி வகுப்புகள், விடுதிகள் மற்றும் மானியங்கள் உள்ளிட்ட பல திட்டங்கள் மூலம் பல்லாயிரக்கணக்கானோர் பயனடைந்துள்ளனர். ‘தாலிமி மார்கஸ்’ மற்றும் ‘ஹுனார்’ போன்ற திட்டங்கள் மூலம் இளைஞர்களுக்குத் தொழில் பயிற்சி அளித்து சுயதொழில் தொடங்குவதற்கும் ஊக்கம் அளிக்கப்படுகிறது. போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு, இதுவரை 15,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைந்துள்ளனர். அவர்களில் 5,000க்கும் மேற்பட்டோர் அரசுப் பணிகளில் சேர்ந்துள்ளனர்.
  • மதக் கலவரங்களைத் தடுப்பதிலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் வழங்குவதிலும் நிதிஷ்குமார் அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. 1989 ஆம் ஆண்டு பாகல்பூர் மதக் கலவரங்கள் குறித்து முறையான விசாரணை நடத்தி, குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடும் வழங்கப்பட்டது. மேலும், 2006 ஆம் ஆண்டு முதல் 8,000க்கும் மேற்பட்ட முஸ்லிம் கல்லறைகளுக்குச் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு, சமூக நல்லிணக்கத்தைப் பேணுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
  • ‘பீகார் மாநில சிறுபான்மையினர் குடியிருப்புப் பள்ளித் திட்டம்’, ‘பீகார் மாநில மதரஸா வலுவூட்டும் திட்டம்’, ‘பீகார் மாநில வக்ப் மேம்பாட்டுத் திட்டம்’ போன்ற புதிய திட்டங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மாநிலத்தின் 38 மாவட்டங்களிலும் முஸ்லிம் மாணவர்களுக்கான குடியிருப்புப் பள்ளிகளைத் திறக்க அரசு திட்டமிட்டுள்ளது. வக்ப் நிலங்களில் திருமண மண்டபங்கள் மற்றும் பிற சமூக நோக்கங்களுக்கான கட்டிடங்கள் கட்டவும், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் 21 புதிய மதரஸாக்களை நிறுவவும் அரசு முனைப்புக் காட்டி வருகிறது.

இவை எல்லாம் நிதிஷ்குமார் அரசு மீது முஸ்லிம்கள் பெரும் நம்பிக்கை கொள்ள வைத்திருக்கிறது.

ஆகையால் பீகார் முஸ்லிம்களின் வாக்குகள் நிதிஷ்குமார் அரசுக்கான ஆதரவாக மட்டும் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்கிற ஒரு கருத்து முன்வைக்கப்படுகிறது; நிதிஷ்குமார் அரசுக்கான முஸ்லிம்களின் ஆதரவை ஒட்டுமொத்தமாக பாஜகவையே முஸ்லிம்கள் ஆதரிக்க தொடங்கிவிட்டனர் என பிரசாரம் செய்வது அல்லது விவாதிப்பது ஏற்புடையது சரியானதா? என்கிற கேள்வியும் எழாமல் இல்லை.

இருப்பினும், மதச்சார்பற்ற சக்திகள், தாங்கள் முன்வைக்கும் சிறுபான்மையினருக்கு ஆதரவான செயல்திட்டங்கள் குறித்து சுய பரிசோதனைக்குட்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற பாடத்தை பீகார் தேர்தல் முடிவுகள் வழங்கி இருக்கிறது என்பது மிகையல்ல.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share