முரசொலி செல்வம் உடலுக்கு அஞ்சலி செலுத்திய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கண்கலங்கி அழுதார்.
மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் மருமகனும், மூத்த பத்திரிகையாளருமான முரசொலி செல்வம் இன்று (அக்டோபர் 10) பெங்களூருவில் காலமானார்.
முரசொலி செல்வத்தின் உடல் சென்னை எடுத்துவரப்பட்டு கோபாலபுரம் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
அவரது உடலை பார்த்து கண்கலங்கி அழுதார் உதயநிதி.
தொடர்ந்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திராவிட இயக்கத்தின் மூத்த முன்னோடி, நம் ‘முரசொலி’ செல்வம் மாமா மறைந்தார் என்ற செய்தி காலையிலேயே இடியாக இறங்கியது.
இன்னமும் அந்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் தவிக்கின்றேன். வழக்கம் போல, முரசொலியில் கட்டுரை எழுதுவதற்காக குறிப்புகளைச் சேகரித்து வைத்துவிட்டு, உறங்கச் சென்றவரை இயற்கை எடுத்துக் கொண்டிருக்கிறது.
கலைஞரின் கொள்கை வார்ப்பு, முதலமைச்சருடைய வழிகாட்டி, செல்வி அத்தையின் பாசத்துக்குரிய கணவர். எங்களுக்கெல்லாம் கொள்கை உணர்வூட்டிய பண்பாளர்,
‘முரசொலி’ செல்வம் மாமாவின் மரணம், கலைஞர் குடும்பத்துக்கு மட்டுமல்ல, திராவிட முன்னேற்றக் கழகத்துக்கே பேரிழப்பு.
இந்த ஆற்ற முடியாத துயரில், தவிக்கும் கோடிக்கணக்கானத் தொண்டர்களில் ஒருவனாக உறைந்து நிற்கிறேன்.
மற்றொரு கலைஞர்
இயக்கப் பணி பத்திரிகைப் பணி திரைத்துறை எனப் பல்வேறு தளங்களில் முத்திரை பதித்த செல்வம் மாமாவின் உழைப்பை சிறு வயதிலிருந்தே நேரில் பார்த்தவன்.
அவருடன் நெருங்கிப் பழகியவன் கலைஞரை போலவே நேர் வகிடு எடுத்துக்கொண்டு, கலைஞரைப் போலவே கையில் முரசொலியோடு வீட்டிற்கு வருகிற செல்வம் மாமாவைப் பார்க்கும் போது, கலைஞரையே பார்ப்பது போன்றதோர் உணர்வு எங்களுக்கு ஏற்படும்.
அப்படிப்பட்ட செல்வம் மாமா, ‘இனி, வர மாட்டார்’ என்று நினைக்கும்போதே நெஞ்சம் கலங்குகிறது. கலைஞரின் மூத்தப் பிள்ளையான முரசொலியுடனே வளர்ந்தவர், முரசொலியை வளர்த்தவர்.
கலைஞருக்கு முரசொலி மாறன் மாமா மனசாட்சி என்றால், நம் தலைவர் தோளோடு தோள் நின்ற கொள்கை வீரர் செல்வம் மாமா.
சிறியவர் பெரியவர் வித்தியாசம் இல்லை
பொதுச்செயலாளர் துரைமுருகனின் நெருங்கிய நண்பரான முரசொலி செல்வம், பொதுச் செயலாளரிடம் எப்படி உரிமையோடு பழகுவாரோ, அதே உரிமையோடுதான் கடைக்கோடித் தொண்டனிடமும் பழகும் பண்பை பெற்றிருந்தார்.
சிறியவர் பெரியவர் வித்தியாசமின்றி எல்லோரிடமும் மரியாதையுடன் பேசுகிற வழக்கத்தைக் கொண்டவர். 75 ஆண்டுகளைக் கடந்து விட்ட முரசொலியின் நீண்ட நெடியப் பயணத்தில், செல்வம் மாமா பதித்தத் தடங்கள் ஏராளம்.
‘முரசொலியில் வந்த செய்திக்காக சட்டமன்றக் கூண்டிலேறி நெஞ்சுரத்துடன் பதில் சொன்ன அவருடைய உறுதிதான் இன்றைக்கு எங்களை எல்லாம் வழி நடத்துகிறது.
முரசொலி நினைவலைகள்’ என்று அவர் எழுதிய அனுபவங்கள் அத்தனையும் திராவிட இயக்க இளைஞர்களுக்கு வழிகாட்டும் பாடங்கள்.
‘சிலந்தி’ என்ற புனைப்பெயரில் முரசொலியில் அவர் எழுதிய கட்டுரைகள் சிரிக்கவும் சிந்திக்கவும் சிலிர்க்கவும் வைக்கும். என் மீது தனிப்பட்ட முறையில் அக்கறை கொண்டிருந்த செல்வம் மாமா, என் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் உடன் நின்று ஆலோசனைகளை வழங்கியவர்.
இன்றைய முரசொலியில் கூட, என்னைப்பற்றி ஒரு பத்தியை எழுதியிருக்கிறார் என்று எண்ணும் போது அவரது இழப்பைக் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை.
முரசொலி செல்வத்தின் வாழ்த்து
முரசொலியின் நிர்வாக இயக்குநர் பொறுப்பை கலைஞர், என்னிடம் தந்த போது, என்னை அழைத்த செல்வம் மாமா, “முரசொலியின் பயணமும் வீச்சும் உனக்குத் தெரியும் உதய். அதை மனசுல வச்சு. பணிகளைச் செய்,”என்று வாழ்த்தினார்கள்.
இளைஞர் அணியின் செயலாளராக நான் பொறுப்பேற்ற போது, “40 வருஷம் தலைவர் ஸ்டாலின், இளைஞர் அணியை வளர்த்தெடுத்து இருக்காங்க அப்படிப்பட்ட பெருமைகளைக் கொண்ட இளைஞர் அணியை நீ வழிநடத்துறது வரலாற்றுச் சிறப்புமிக்க வாய்ப்பு உதய். இதை நீ சரியாகப் பயன்படுத்திக் கொள்.
சென்னையிலேயே இருந்திடாம தமிழ்நாடு முழுக்க பயணம் பண்ணு. இளைஞர்களைச் சந்திச்சு, அவங்கள எல்லாம் நம் இயக்கத்திற்குள் கொண்டு வா,” என்று உரிமையோடு எடுத்துரைத்தார்.
அதுமட்டுமல்ல, 2019 முதல் ஒவ்வொரு தேர்தலிலும் நான் பிரச்சாரத்தில் ஈடுபடுகின்ற போதெல்லாம். ஒவ்வொரு நாளும் என்னுடைய பேச்சுக்களைத் தொலைக்காட்சியில் பார்த்துவிட்டு, அவைப்பற்றி தொலைபேசியில் அழைத்து அவருடைய கருத்துகளைக் கூறுவார்.
“உன் பிரச்சாரத்தை டி.வி.யில பார்த்தேன் உதய். உன் பேச்சு ரொம்ப எளிமையா, மக்களுக்குப் புரியுற மாதிரி இருக்கு, எல்லாரும் ரசிக்கிறாங்க. ஆகவே, யாரையும் காயப்படுத்தாம இயக்கக் கொள்கைகளை இளைஞர்களிடம் உன் பாணியில் கொண்டு சேர்த்திடு உதய். நீ சொல்ற விஷயத்தை எதிர்க்கட்சிக்காரங்களும் கவனிக்கிற மாதிரி, அவங்களும் எடுத்துக்கிற மாதிரிப் பேசு.” என்று வழிகாட்டிய முரசொலி செல்வம் மாமாவின் தொலைபேசி அழைப்புகள், இனி, அறவே வராது என்பதை ஏற்க மனது மறுக்கிறது.
சேப்பாக்கம் -திருவல்லிக்கேணித் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக வெற்றிபெற்று, அவரின் வாழ்த்துகளைப் பெறச் சென்றேன். என் கைகளை இறுகப் பற்றிக்கொண்ட முரசொலி செல்வம் மாமா, “சேப்பாக்கம் திருவல்லிக்கேணித் தொகுதி. யார், யார் நின்னு ஜெயிச்ச தொகுதின்னு உனக்குத் தெரியும். அவங்களோட பணிகள் நிச்சயம் உன்னை வழிநடத்தும். அதையெல்லாம் மனசுல வச்சு, மக்கள் பணியில் உன்னை ஈடுபடுத்திக்க,” என்று அன்போடு வாழ்த்தினார்.
கடைசி வாழ்த்து
நான் துணை முதலமைச்சர் பொறுப்பினை ஏற்றபோது, கடந்த செப்டம்பர் 28-ஆம் தேதி இரவு என்னை வாழ்த்திய செல்வம் மாமா, “இந்த வாழ்த்து, நீ துணை முதலமைச்சரானதுக்கு இல்ல. இவ்வளவு நாளா செஞ்சப் பணிகளுக்கானதும் இல்ல. இனிமேல நீ என்ன செய்யப்போறன்னு பார்க்கலாம். அதை மனசுல வச்சு பணியாற்று.” என்று உரிமையோடு அவர் சொன்னதுதான், எனக்கான அவருடைய இறுதி அறிவுரை என்பது இப்போதுதான் புரிகிறது.
கலைஞர், முரசொலி மாறன் ஆகியோர் வழியில் திரைத்துறையின் வழியாகவும் கொள்கை வளர்த்தவர். முரசொலியின் முகங்களில் முக்கியமானவர், எனினும், இளையோரின் கருத்துக்களை உள்வாங்கிடவும் அவர் தவறியதில்லை.
இளைஞர் அணி முன்னெடுத்த ‘திராவிட மாடல் பயிற்சிப் பாசறைக் கூட்டங்களைக் கவனித்து ஆலோசனைகளை வழங்கியவர். முரசொலியில் இளைஞர் அணி சார்பில் பாசறைப் பக்கத்தைத் தொடங்க வேண்டும் என்று தலைவரிடம் அனுமதி கேட்ட போது, ‘முதல்ல முரசொலி செல்வம் அண்ணனைப் பார்த்து, அவரிடம் அனுமதி வாங்கிட்டு வா’ என்றுதான் சொன்னார்கள்.
அந்த அளவுக்குத் தலைவரின் மதிப்பிற்குரியவராக இருந்தவர் முரசொலி செல்வம் மாமா. பாசறைப் பக்கத்தின் தீவிர வாசகர், அதுகுறித்து, தொடர்ந்து பல ஆலோசனைகளை வழங்கி வந்தார். இளைஞர்களை வளர்த்துவிட்டு அழகு பார்ப்பதில், அவருக்கு நிகர் அவர்தான்.
கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு, இன்றைக்கு இளைஞர் அணி சார்பில், பேச்சுப் போட்டிகளை நடத்துகிறோம். சிறந்த பேச்சாளர்களைத் தேர்ந்தெடுக்கும் பணிகளில் ஏராளமான நடுவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
தனியாக நிற்கிறோம்
இன்றைக்கு நடுவர்களாக இருக்கும் பலரை அன்றைக்கே அடையாளம் கண்டவர். செல்வம் மாமா. “நல்லது, கெட்டது எல்லாத்துலயும், இன்னைக்குத் தலைவர் கலைஞர் இல்லையே என்ற குறையை எனக்குப் போக்கிக் கொண்டிருப்பவர் நம்முடைய முரசொலி செல்வம் தான்.” என்று நம்முடைய தலைவர் , ‘முரசொலி நினைவலைகள்’ நூல் வெளியீட்டு விழாவில் உருக்கத்துடன் கூறினார்.
கட்டுரை எழுதுவதற்காக நீங்கள் சேகரித்து வைத்திருந்த குறிப்புகளைப் போலவே, நாங்களும் நீங்கள் இல்லாமல் தனியாக நிற்கிறோம். மாமா. எங்களை எல்லாம் தவிக்க விட்டுட்டு எங்கே போனீங்க மாமா!” என்று உருக்கமாக அறிக்கையில் எழுதியுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
என்.எல்.சியில் இளைஞர் உடல்… சிஐஎஸ்எப் வீரர்களை கைது செய்த தமிழக போலீஸ்!