என்.எல்.சியில் இளைஞர் உடல்… சிஐஎஸ்எப் வீரர்களை கைது செய்த தமிழக போலீஸ்!

தமிழகம்

நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தில் நான்கு மாதங்களுக்கு முன்பு ஒருவர் மர்மமாக இறந்த வழக்கில், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சிஐஎஸ்எஃப் வீரர்களை தமிழக போலீசார் கைது செய்தனர்.

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி. நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

கடந்த ஜூன் மாதம் 9 ஆம் தேதி நெய்வேலி என்எல்சி இரண்டாவது தெர்மல் காம்பவுண்ட் ஓரத்தில் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இதுகுறித்து கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற தெர்மல் போலீசார், உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

இதில், உயிரிழந்தவர் சிதம்பரம் கண்டியமேடு பகுதியில் வசித்து வந்த 32 வயதான சிவசங்கர் என்பது தெரியவந்தது.

இந்நிலையில் சிவசங்கரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ‘இது மர்ம மரணம் கிடையாது. யாரோ அவரை அடித்து கொன்றிருக்கிறார்கள். உடல் முழுவதும் காயங்களாகவும், வீக்கமாகவும் இருக்கிறது” என்று கூறி போராட்டம் நடத்தினர்.

அப்போது போலீசார், “பிரேதப் பரிசோதனை செய்த பிறகு ரிப்போர்ட் வரட்டும்… பிறகு கொலை வழக்காக மாற்றி குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்கிறோம்” என்று சமரசம் செய்து வைத்து உறவினர்களிடம் உடலை ஒப்படைத்தனர்.

சிவசங்கரின் உடலை பிரேதப் பரிசோதனை செய்ததில், அவர் ஷூ கால்களாலும் கட்டையாலும் கடுமையாக தாக்கப்பட்டு இறந்துள்ளார் என்று ரிப்போர்ட் வந்தது.
இதன் பிறகும் கொலை வழக்காக மாற்றாமல் தெர்மல் காவல் நிலைய போலீசார் மௌனம் காத்து வந்தனர்.

இரண்டாவது தெர்மல் பகுதியில் இரவு பணியில் இருந்த CISF (மத்திய தொழில் பாதுகாப்பு படை) வீரர்கள் கொடூரமான முறையில் சிவசங்கரை தாக்கியதால்தான் அவர் இறந்துவிட்டார் என்ற தகவல்களை அப்போதே எஸ்பிக்கு தகவல் கொடுத்துள்ளனர் எஸ்பி தனிப்பிரிவு போலீஸார். இருந்தாலும் நான்கு மாதங்களாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாமல், நேற்று முன் தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக கடலூர் போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தபோது,

“சிஐஎஸ்எப் வீரர்கள் தாக்கி சிவசங்கர் மரணமடைந்தது தொடர்பாக எஸ்பி ராஜாராம் நெய்வேலி போலீஸ் அதிகாரிகளிடம் தொடர்ந்து கேட்டு வந்தார். ஆனால் என்.எல்.சி நிறுவனம் கொடுக்கும் சலுகையால் என்.எல்.சி நிறுவனத்தை எதிர்த்து நடவடிக்கை எடுக்க தயங்கினார்கள்.

இந்த நிலையில் வடக்கு மண்டல ஐஜி அஸ்ராகார்க் ஐபிஎஸ், சில வாரங்களுக்கு முன்பு விழுப்புரம் சரகத்தில் ரிவியூ மீட்டிங் நடத்தினார். அப்போது, தெர்மல் காவல் நிலையத்தில் 174 கேசு (சந்தேக மரணம்) ஒன்று பென்டிங்கில் இருந்து வருகிறது,

போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில் கடுமையாக தாக்கப்பட்டதால் இறந்திருக்கிறார் என்று உள்ளது, அப்படி இருந்தும் நெய்வேலி போலீஸ் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேள்விகளை எழுப்பினார்.

தொடர்ந்து, விழுப்புரம் சரக டிஐஜி திஷா மித்தல் மற்றும் கடலூர் எஸ்பி ராஜாராமிடம் கொலைக்கு காரணமாக யாராக இருந்தாலும் கைது செய்யுங்கள் என்று உத்தரவிட்டார்.

சிஐஎஸ்எப் படையினரை கைது செய்யும்போது என்எல்சி நிறுவனத்தினர் டெல்லியில் இருந்து வழக்கறிஞர்களை வரவழைப்பார்கள். அதனால் போலீஸ் ஸ்ட்ராங்காக காரணங்களை சொல்லவேண்டும். அரசு வழக்கறிஞரிடம் ஆதாரங்களை சமர்ப்பித்து மாஜிஸ்திரேட்டிடம் ரிமாண்ட் வாங்குங்கள் என்று பல ஆலோசனைகளை வழங்கினார் ஐஜி அஸ்ராகார்க்.

அதன்படி எஸ்பி ராஜாராம் ஸ்பெஷல் டீம் மற்றும் தெர்மல் போலீசார் சேர்ந்து சிவசங்கரை அடித்து உதைத்து தூக்கி போட்ட மத்திய தொழில் படை வீரர்களான பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஹங்கித் சிங், உத்தரப் பிரதேசத்தைச் சார்ந்த அனுஜ் இருவரையும் நேற்று முன்தினம் அக்டோபர் 8 ஆம் தேதி இரவு 10.00 மணிக்கு கைது செய்ய சென்றனர்.

அப்போது என்எல்சி நிறுவனம் முழு பலத்தையும் பயன்படுத்தியது ஆனால் போலீஸ் பல தடைகளை மீறி கைது செய்து வந்தனர்.

தெர்மல் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்து வாக்குமூலம் பெற்றுக்கொண்டு நேற்று அக்டோபர் 9 ஆம் தேதி காலையில் நெய்வேலி நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் பிரவீனிடம் ரிமாண்ட் பேப்பர்களை கொடுத்தனர்.

மாஜிஸ்திரேட்டுக்கு வேலைப்பளு அதிகமாக இருந்ததால் மாலை 7.00 மணிக்கு மேல் விசாரிக்கத் துவங்கினார்.

அப்போது சிஐஎஸ்எப் வீரர்களுக்கு ஆதரவாக ஆஜரான வழக்கறிஞர் ராஜேஸ்வரி, “மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள், பாரா மிலிட்டரி. இவர்களை ரிமான்ட் செய்யக்கூடாது, ரிமான்ட் செய்ய அனுமதி பெற்றாக வேண்டும்” என்று வாதாடினார்.

அரசு வழக்கறிஞர் ஜம்புலிங்கம், “மதுரை உயர்நீதிமன்ற உத்தரவை வைத்து குற்ற சம்பவத்தில் ஈடுபட்டவர்களை (மிலிட்டரி) இன்ஸ்பெக்டர் ரேங்க் வரையில் உள்ளவர்களை கைது செய்ய யார் அனுமதியும் தேவை இல்லை” என்று வாதம் செய்து போலீஸ் கொடுத்த பல ஆதாரங்களையும் காட்டினார்.

இரு தரப்பினர் வாதங்களை கேட்ட மாஜிஸ்திரேட் பிரவீன், 15 நாள் ரிமாண்ட் கொடுத்து உத்தரவிட்டார். அதன்பிறகு, சிவசங்கர் இறப்புக்கு காரணமான மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் இருவரை நேற்று இரவு 10 மணிக்கு சிறையில் அடைத்தனர் போலீசார்” என்கிறார்கள்.

சட்டம் அனைவருக்கும் சமம் என்பதை உறுதி செய்துள்ளது தமிழக காவல்துறை.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

-வணங்காமுடி

விமர்சனம் ; ’வேட்டையன் ‘!

கேலி பேசியவருக்கு உதவிய ரத்தன் டாடா : ‘ஜாகுவார்’ ,’லேண்ட் ரோவர்’ வாங்கிய கதை!

15 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

 

+1
0
+1
0
+1
0
+1
8
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *