நகராட்சி இன்ஜினியர் பணியிடங்கள்- அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டும் தமிழக அரசு தரப்பு விளக்கமும்!

Published On:

| By Mathi

ED Tamilnadu govt

தமிழக அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ள நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடு குறித்த அமலாக்கத்துறையின் (Municipal Engineer Posts – Enforcement Wing’s Allegations and Tamil Nadu Government’s Response) குற்றச்சாட்டுகள், மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. சுமார் 2538 பணி நியமனங்களில், ₹888 கோடி அளவுக்கு லஞ்சம் கைமாறியுள்ளதாகவும், இதற்கு ஒரு தனித்துவமான ’10 ரூபாய் நோட்டு’ பாணி பயன்படுத்தப்பட்டதாகவும் அமலாக்கத்துறை அடுக்கடுக்கான ஆதாரங்களுடன் குற்றம் சாட்டியுள்ளது. இந்த விவகாரம் குறித்து முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழக காவல்துறை தலைவருக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதியுள்ளது, பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரத்தில் அரசு தரப்பும் இதில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை; தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டதாலே 501 பேர் பணிகளை ராஜினாமா செய்தும் இதர துறைகளுக்கு மாறியும் உள்ளதாக விளக்கம் தரப்பட்டுள்ளது.

அமலாக்கத்துறை முன்வைத்துள்ள முக்கியக் குற்றச்சாட்டுகளின் விவரம்:

ADVERTISEMENT

232 பக்க அறிக்கை மற்றும் காவல்துறைக்கு கடிதம்: இந்த ஊழல் எப்படி நடந்தது, யார் யார் இதில் மூளையாக செயல்பட்டார்கள் போன்ற விவரங்கள் அடங்கிய 232 பக்க ஆவணங்களை தமிழக காவல்துறைக்கு அமலாக்கத்துறை அனுப்பியுள்ளது. அத்துடன், கண்டறியப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று அக்டோபர் 27, 2025 அன்று தமிழக காவல்துறை தலைமை இயக்குநருக்கு (DGP) கடிதம் எழுதியுள்ளது. இதன் மூலம் சட்டவிரோத பணப் பரிமாற்றத் தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் வழக்குத் தொடர வழிவகுக்க அமலாக்கத்துறை முயற்சிக்கிறது.

2538 பணியிடங்களில் முறைகேடு: நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் இளநிலை பொறியாளர்கள், உதவிப் பொறியாளர்கள், நகரமைப்புத் திட்டமிடல் அதிகாரிகள் உள்ளிட்ட 2538 பணியிடங்களுக்கான நியமனங்களில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்ததாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது.

ADVERTISEMENT

லஞ்சப் பணம் ₹25 லட்சம் முதல் ₹35 லட்சம்: ஒவ்வொரு பணி நியமனத்திற்கும் ₹25 லட்சம் முதல் ₹35 லட்சம் வரை லஞ்சமாக வசூலிக்கப்பட்டுள்ளதாகவும், மொத்த ஊழல் தொகை சுமார் ₹888 கோடி இருக்கலாம் என்றும் அமலாக்கத்துறை மதிப்பிட்டுள்ளது.

TNPSC-யை தவிர்த்து அண்ணா பல்கலைக்கழகம்: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் இல்லாமல், அண்ணா பல்கலைக்கழகம் மூலமாக இந்தப் பணி நியமனத் தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன. பல்கலைக்கழக அதிகாரிகளும், இடைத்தரகர்களும் சேர்ந்து தேர்வு முறைகேடுகளுக்கு உதவியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ADVERTISEMENT

“10 ரூபாய் நோட்டு” பாணி அம்பலம்: லஞ்சம் கொடுத்த விண்ணப்பதாரர்களை அடையாளம் காண ஒரு நூதன முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. 10 ரூபாய் நோட்டில் உள்ள எண்களை அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர்களோ அல்லது அவர்களது உதவியாளர்களோ விண்ணப்பதாரர்களிடம் தெரிவித்துள்ளனர். இந்த எண்கள் கொண்ட 10 ரூபாய் நோட்டின் படத்தை வாட்ஸ்அப் மூலம் அனுப்பினால், லஞ்சப் பணத்தை வங்கிக்கணக்கிற்கு அனுப்ப வேண்டும் என்பதே ஏற்பாடாக இருந்துள்ளது.

ஹவாலா பரிமாற்றம்: லஞ்சமாகப் பெறப்பட்ட பணம் ஹவாலா முறையில் பல இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், இதில் பல முக்கிய அரசியல்வாதிகளும், உயரதிகாரிகளும் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறை குறிப்பிட்டுள்ளது.

அமைச்சர் சகோதரர்கள் மீது குற்றச்சாட்டு: நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர்களான ரவிச்சந்திரன், மணிவண்ணன் மற்றும் அவர்களது உதவியாளர்களான ரமேஷ், செல்வமணி, கவி பிரசாத் ஆகியோர் லஞ்சப் பணத்தை பெற்றுக்கொண்டு பணி நியமன ஆணைகளை வழங்கியதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

முன்கூட்டியே அனுப்பப்பட்ட பணி ஆணைகள்: லஞ்சம் கொடுத்தவர்களுக்கு அதிகாரபூர்வ பணி நியமன ஆணை வெளியாவதற்கு முன்பே, வாட்ஸ்அப் மூலம் ஆணைகள் அனுப்பப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஆதாரங்களை கைப்பற்றிய அமலாக்கத்துறை: கடந்த ஏப்ரல் 2025ல், வங்கி மோசடி வழக்கு தொடர்பாக நடந்த சோதனைகளின் போது, இந்த நகராட்சி நிர்வாகத்துறை ஊழல் குறித்த ஆவணங்கள், டிஜிட்டல் ஆதாரங்கள், புகைப்படங்கள், வாட்ஸ்அப் உரையாடல்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

இந்த குற்றச்சாட்டுகளை மறுக்கும் அரசு தரப்பு தரும் விளக்கம் என்ன?

  • பணியிடங்கள்: நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையால் கடந்த 02.02.2024 அன்று பேரூராட்சி, நகராட்சி, பெருநகர சென்னை மாநகராட்சி உட்பட அனைத்து மாநகராட்சி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் (TWAD) மற்றும் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் (CMWSSB) போன்ற துறைகளில் காலியாக உள்ள 1.993 காலி பணியிடங்களுக்கும் மற்றும் பல்வேறு பிற்சேர்க்கை அறிவிப்பில் காலி பணியிடங்களின் எண்ணிக்கை சேர்க்கப்பட்டு இறுதியாக 2,569 பணியிடங்கள் நிர்ணயம் செய்து, அண்ணா பல்கலைக் கழகத்தால் எழுத்து தேர்வு நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
  • தேர்வு முறை: எழுத்து தேர்வுக்கு 450 மதிப்பெண்களும், நேர்முக தேர்விற்கு 60 மதிப்பெண்களும் நிர்ணயம் செய்யப்பட்டு அறிவிப்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
  • தேர்வுகள்: இதன் தொடர்ச்சியாக அண்ணா பல்கலைக் கழகத்தால் தமிழ்நாடு முழுவதும் கடந்த 29.06.2024, 30.06.2024 மற்றும் 06.07.2024-ல் பல்வேறு தேர்வு மையங்களில் எழுத்து தேர்வு நடத்தப்பட்டது.
  • தேர்வு முடிவுகள்: தேர்வு முடிவுகள் 20.09.2024 அன்று வெளியிடப்பட்டது. கடந்த 07.10.2024 முதல் 17.02.2025 வரை நேர்முக தேர்வு அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் வெளிப்படையாக நடத்தப்பட்டது.
  • வழக்குகள் விவரம்: இந்த அறிவிக்கையினை தொடர்ந்து பல்வேறு நபர்கள் உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் 40-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடுக்கப்பட்டு. அனைத்து வழக்குகளும் முடிக்கப்பட்டு இறுதியாக 17.02.2025 அன்று தேர்வு முடிவுகள் தரவரிசை வாரியாக அறிவிக்கப்பட்டது.
  • பதவிகள் தேர்வு: அதனை தொடர்ந்து 24.02.2025 முதல் 02.04.2025 வரை பல்வேறு பதவிகளுக்கு நேரடி கலந்தாய்வு மூலம் தேர்வு செய்யப்பட்ட நபர்கள் தங்களது தரவரிசையின் அடிப்படையில் அழைக்கப்பட்டு, தங்களுக்கு விருப்பப்பட்ட உகந்த பதவியினை தேர்ந்தெடுத்தனர். இறுதி பட்டியல் ஒளிவு மறைவற்ற முறையில் இணையத்தில் கடந்த 04.07.2025 அன்று வெளியிடப்பட்டது.
  • பணிநியமன ஆணை: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால், தேர்வு செய்யப்பட்ட 2,538 அலுவலர்களுக்கு பணி ஆணைகள் 06.08.2025 அன்று வழங்கப்பட்டது.
  • 501 பேர் பணியில் சேரவில்லை: தேர்வு செய்யப்பட்ட நபர்களில் இது வரை பணியில் சேர்ந்து இராஜினாமா செய்தும், பணியில் சேராமலும் 501 நபர்கள் உள்ளனர். இத்தேர்வு நடைமுறை முற்றிலும் தகுதியின் அடிப்படையில் மட்டுமே பணி நியமனம் வழங்கப்பட்டதற்கு 501 நபர்கள் பணியில் சேராமல் உள்ளதே மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகும்.
  • பதவி தேர்வு: எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற நபர்கள், கலந்தாய்வில் (Counselling) தேர்வு செய்யப்பட்ட பதவிகளின் விவரங்கள் அன்றைக்கு அன்றே/ தினந்தோறும் ஒளிவு மறைவற்ற முறையில் இணைய வழியில் நேரடியாக பதிவிடப்பட்டது. எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு மதிப்பெண்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நிர்ணயம் செய்துள்ள விழுக்காடு அடிப்படையில் அவ்வாறே எவ்வித மாற்றமும் இன்றி பின்பற்றப்பட்டது.
  • அண்ணா பல்கலைக் கழகம்: எழுத்து தேர்வுகள் முழுக்க முழுக்க அண்ணா பல்கலைக் கழகத்தால் நடத்தப்பட்டு, அதில் தேர்வானவர்கள் நேர்முகத் தேர்விற்கு 1:2 விகிதத்தில் அழைக்கப்பட்டனர். மேலும் தற்பொழுது பணியில் சேர்ந்துள்ள நபர்களில் 100-க்கும் மேற்பட்டோர் வேறு துறை தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்று அத்துறையில் சேரும் பொருட்டு பணியிலிருந்து விடுவிக்க கோரியுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share