புதிரைத் தேடும் பயணம்..!
சில திரைப்படங்களின் ‘ட்ரெய்லர்’ ரசிகர்களுக்கு ஒரு கதை சொல்லும். ஆனால், படத்தின் உள்ளடக்கமோ வேறுவிதமாக இருக்கும். இரண்டுக்கும் எந்த தொடர்பும் இல்லாவிடினும், அந்த திரையனுபவம் திருப்தி தந்தால் படம் வெற்றி தான். கிட்டத்தட்ட அப்படியொரு வெற்றியைப் பெறுமா என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது முஹாசின் இயக்கிய மலையாளப் படமான ‘வளா – தி ஸ்டோரி ஆஃப் பேங்கிள்’.
கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ள இப்படத்தில் லுக்மென் ஆவரன், ஷீத்தல் ஜோசப், தியான் சீனிவாசன், ரவீணா ரவி, சாந்தி கிருஷ்ணா உட்படப் பலர் நடித்துள்ளனர்.
படம் எப்படி இருக்கிறது?

ஒரு புதிர்..!
காதல் திருமணம் செய்த ஒரு பெண், இன்னொரு பெண்ணின் கையில் இருக்கும் வளையலைக் காண்கிறார். அந்த நகையின் வேலைப்பாடு அவரை ஈர்க்கிறது. ‘இதை எங்க வாங்குனீங்க’ என்று கேட்கிறார். உடனே, எதிரில் இருக்கும் பெண் ‘இதை எங்க வாங்குனா உனக்கென்ன’ என்று தொடங்கி ’வசை மாரி’ பொழிந்து அவரை அவமானப்படுத்திவிடுகிறார்.
காதல் மணம் செய்த கணவர் வீட்டின் உணவுப்பழக்கம், உறவினர்களின் பேச்சு போன்றவை ஒட்டாமல் தவிக்கிற அந்தப் பெண்ணுக்கு இந்த சம்பவம் கூடுதல் அழுத்தத்தைத் தருகிறது.
அதனை நேரடியாகச் சொல்லாமல், ‘எனக்கு ஒரு வளையல் வாங்கித் தா’ என்று கணவனிடம் சொல்கிறார். பல நகைக்கடைகளில் ஏறி இறங்கினாலும், தான் கண்ட வளையலைப் போன்றே புதிதாக வாங்க வேண்டும் என்று அந்த பெண் உறுதியாக நிற்கிறார்.
ஒருகட்டத்தில் தன் மனைவியின் வளையல் வேட்கை இன்னொரு பெண் அணிந்ததைப் பார்த்து உருவானது என்பதை அறிகிறார் அந்த காதல் கணவன். உடனே தனது சகாவை அழைத்துக்கொண்டு அந்தப் பெண்ணின் வீட்டிற்குச் செல்கிறார்.
அப்பெண்ணின் கணவரிடம் விஷயத்தைச் சொல்லி, அந்த வளையலைக் கழற்றித் தரச் சொல்கிறார். அவ்வாறு செய்தால், அதே போன்றதொரு வடிவமைப்பில் இன்னொரு வளையலைத் தயார் செய்யச் சொல்லிவிட்டு திருப்பித் தந்துவிடுவதாக உறுதியளிக்கிறார்.
ஆனால், அந்த வளையலை அப்பெண்ணால் கழற்ற முடிவதில்லை. அது மட்டுமல்லாமல், ஆரம்பம் முதலே ‘இது சாகுற தருவாயில என்னோட பாட்டி தந்தது’ என்பதைத் திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறார்.
சரி, புகைப்படமாவது எடுப்போம் என்று மொபைலை கொண்டு நோக்கும்போது, ‘இது அரபி எழுத்து மாதிரி இருக்கிறதே’ என்கிறார் உடன் வந்த சகா.
அவ்வளவுதான். அரபியைத் தாங்கிய ஒரு வளையல் எப்படி இந்த பெண்ணின் கைக்கு வந்தது என்ற கேள்வி அவரது கணவர் மற்றும் இதர இருவரையும் தொற்றுகிறது.
அந்தப் பெண் ஒரு அரசு ஊழியர். கணவரோ ஒரு அரசியல்வாதி. தேடி வந்த நபர்களோ போலீஸ் கான்ஸ்டபிளாக இருப்பவர்கள்.
இப்போது, அந்த வளையலுக்குப் பின்னிருக்கும் புதிரைத் தெரிந்துகொள்கிற வேட்கை அவர்கள் அனைவரையும் தொற்றுகிறது. கூடவே, அது இந்தியாவுக்கு வந்தது எப்படி என்ற கேள்வியும் எழுகிறது. அதற்குப் பதிலறியும் பயணத்தில் வேறு சில உண்மைகள் தெரிய வருகின்றன.
அவை என்ன என்பதை விலாவாரியாகச் சொல்கிறது இப்படத்தின் இரண்டாம் பாதி..!

திரைக்கதை பயணம்..!
மத்திய தரைக்கடல் பகுதியில் நிகழ்ந்த போர், அரசர்களின் வாழ்க்கை, அதிலொருவரின் நகைப் பித்து, அவர் வடிவமைக்கச் சொன்ன வளையல் என்று முன்கதை ஒன்று சொல்லப்படுகிறது. அப்படி வடிக்கப்பட்ட ஒரு வளையலை ஒரு பெண் தனது கணவரிடம் ‘இது என் பாட்டி கொடுத்தது’ என்று சொல்கிறார். அதுவே கதையின் முதல் முடிச்சு.
அதன்பின் தொடர்ச்சியாக வளையல் குறித்து தெரியவரும் விவரங்கள், அதற்குப் பல கோடி விலை தர முன்வரும் நபர்கள் என்று அடுத்தடுத்து திரையில் விரிகிற விஷயங்கள் பல முடிச்சுகளை இடுகின்றன. பின்பாதியில் ஒவ்வொன்றாக விடுவிக்கப்பட்டு, ‘உண்மையில் இந்த வளையல் யாருடையது’ என்று சொல்லப்படுகிறது. அதன்பிறகும் நகை மீதான சிலரது பேராசையால் அது உரியவர்கள் கைக்கு கிடைக்காமல் அலைக்கழிக்கப்படுவது காண்பிக்கப்படுகிறது.
இந்த திரைக்கதை பயணம் சிலருக்குத் திருப்தியையும் மிகச்சிலருக்கு அதிருப்தியையும் தரலாம்.
அதை மீறி, இக்கதையைச் சொன்ன விதத்தில் சுவாரஸ்யமூட்டுகிறது ‘வளா தி ஸ்டோரி ஆப் பேங்கிள்’. இதில் வடிவமைக்கப்பட்ட பாத்திரங்கள், அவற்றின் குணாதிசயங்கள், அவற்றின் வழியே விரியும் ஒரு உலகம் நமக்குப் புதிதாகத் தெரிகிறது.
எழுத்தாக்கம் செய்திருக்கும் ஹர்ஷத் மற்றும் இயக்குனர் முஹாசின் கூட்டணி அதனைச் சாத்தியப்படுத்தியிருக்கிறது.
இத்திரைக்கதையில் ரொமான்ஸ், ஆக்ஷன், த்ரில்லர், ட்ராமா எனப் பல வகைமையின் சாயல் படிந்திருக்கிறது. அந்த காட்சிகளை அடுத்தடுத்து திரையில் அடுக்கி, ஒரே மனநிலையோடு கிளைமேக்ஸ் வரை பார்வையாளர்களை அழைத்துச் செல்வது கடினமான விஷயம். அதனை இக்கூட்டணி நிகழ்த்தியிருக்கிறது.
அதேநேரத்தில் குறிப்பிட்ட சமூகத்தினரைக் கிண்டலடிக்கிற வசனங்கள் கொஞ்சம் அதிகப்படியாகவே இருப்பதையும் குறிப்பிட்டாக வேண்டும். அதனைத் தவிர்த்திருக்கலாம்.
ஒளிப்பதிவாளர் அப்னாஸ், படத்தொகுப்பாளர் சித்திக் ஹைதர், தயாரிப்பு வடிவமைப்பாளர் அர்ஷத் நக்கோத், ஒலி வடிவமைப்பாளர் தனுஷ் நாயனார் என்று பலரது உழைப்பு இப்படத்தின் காட்சியாக்கத்தில் ‘ப்ரெஷ்னெஸ்’ உணர வைக்கிறது.
சில மாதங்களுக்கு முன் வந்த ‘பொன்மன்’ போன்றே இப்படம் தரும் திரையனுபவமும் உள்ளது.
கோவிந்த் வசந்தாவின் இசையில் பாடல்களும் சரி, பின்னணி இசையும் சரி, இக்கதைக்கு ஏற்றதொரு மனநிலையை வார்த்து, அதில் நம்மைப் பயணிக்கச் செய்கின்றன.
நடிப்பைப் பொறுத்தவரை, ஒரு கமர்ஷியல் படம் என்பதைத் தாண்டி அனைவருமே தமது நடிப்புத்திறனை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.
லுக்மென் ஆவரன், ஷீத்தல் ஜோசப் ஜோடியின் ரொமான்ஸ், செண்டிமெண்ட் சார்ந்த காட்சிகள் ஒருவித ஈர்ப்பைத் தரும். தியான் சீனிவாசன், ரவீணா ரவி ஜோடி சம்பந்தப்பட்ட காட்சிகள் காமச்சுவையில் தொடங்கி த்ரில்லர், மிஸ்டரி என்று பல வகைமையைத் தொடும்.
இதில் நெகிச்சியூட்டும் விதமாக சாந்தி கிருஷ்ணா, விஜயராகவன் சம்பந்தப்பட்ட காட்சிகள் அமைந்துள்ளன.
இவர்கள் தவிர்த்து அபுசலீம், அர்ஜுன் ராதாகிருஷ்ணன், நவாஸ் வள்ளிக்குன்னு, ஷாஃபி கொல்லம் எனப் பலர் இதில் தலைகாட்டியிருக்கின்றனர்.
இப்படத்தின் ட்ரெய்லர் வழியே நம் மனதில் உருவான கதைக்கும் இதில் வரும் காட்சிகளுக்கும் நிச்சயம் இடைவெளி உண்டு. ஆனால், அது எதிர்பார்ப்பைப் பொய்யாக்கிவிடும் வகையில் இல்லை.
‘வளா – தி ஸ்டோரி ஆஃப் பேங்கிள்’ படமானது கதை சொல்லலிலும் காட்சியாக்கத்திலும் மிகப் புதிதாக உள்ளதென்று சொல்ல முடியாது. ஆனால், ஓகே ரகத்திலான திரையனுபவத்தை இது வழங்குகிறது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.