முத்துராமலிங்கத் தேவரின் (Movie Review: Desiya Thalaivar) வாழ்வில் நடந்த சிறு வயது சம்பவங்கள் முதல் இறந்த போது வள்ளலாரின் சன்மார்க்க நெறிப்படி அவர் அடக்கம் செய்யப்பட்டு, குரு பூஜைக்குரிய தெய்வத்தன்மை வாய்ந்தவராக ஆக்கப்பட்டது வரையிலான பல சம்பவங்களைச் சொல்லும் இந்தப் படத்தை, லட்சிய நடிகர் எஸ் எஸ் ஆரின் மகன் எஸ் எஸ் ஆர் சத்யா, மற்றும் ஜெனிஃபர் மார்கரெட் ஆகியோர் தயாரிப்பில் முத்துராமலிங்கத் தேவராக பஷீர் நடிக்க, மற்றும் பாரதிராஜா, ராதாரவி, வாகை சந்திரசேகர் எம். எஸ் பாஸ்கர் நடிப்பில் இசைஞானி இளையராஜாவின் இசையில் அரவிந்தராஜ் திரைக்கதை வசனம் எழுதி இயக்கி இருக்கிறார்.

இம்மானுவேல் கொலை வழக்கில் முத்துராமலிங்கத் தேவர் விடுதலை செய்யப்பட்டதற்கான வழக்கின் விசாரணையின் போது, தேவருக்கு எதிரான தரப்பில் வாதடும் வக்கீல்கள் தரப்பில் பணியாற்றி , பின்னர் தேவரின் பெருமைகளை உணர்ந்த ஒரு வக்கீல், பின்னர் தனது ஜூனியர் வக்கீல்களிடம் தேவரின் வாழ்வை சொல்வதாக படம் விரிகிறது .
அந்த வக்கீலாக இயக்குனர அரவிந்தராஜே நடித்துள்ளார்
சிறு வயதிலேயே தேவர், அம்மாவை இழந்து இஸ்லாமியப் பெண்மணியிடம் பால் குடித்து வளர்ந்தவர் தேவர்.
திருமணம் செய்து கொள்ளாமல் இருந்தார். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டபோது காங்கிரசுக்கு ஆதரவாக சர்தார் வல்லபபாய் பட்டேலைப் பின்பற்றினார்.
மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அரிஜனங்கள் ஆலயப் பிரவேசம் செய்ய முக்கியக் காரணமாக இருந்தது இவர்தான்
சொத்து வரி கட்டாதவர், ஓட்டுப் போடவோ தேர்தலில் நிற்கவோ முடியாது என்ற அன்றைய நிலையில் சொத்து ஏதும் இல்லாத காமாரஜரை எப்படியாவது தேர்தலில் நிற்க வைக்க, முத்துராமலிங்கத் தேவரே காமராஜர் பெயரில் இரண்டு ஆடுகள் வாங்கி , அதை காமராஜரின் சொத்தாகக் காட்டி, காமராஜர் தேர்தலில் நிற்க காரணமாக இருந்தார் .
பின்னர் காமராஜருக்கும் தேவருக்குமே முரண்பாடு வந்து இரண்டு அணிகளாக நின்றதால் அந்த வகையில் நாடார்களுக்கும் முக்குலத்தோருக்கும் மோதல்கள் ஏற்பட்டன.
குற்றப் பரம்பரை சட்டத்தால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானவர்களை அந்த கோரப்பிடியில் இருந்து விடுவித்தது அவர் செய்த சாதனை…
நேதாஜி சுபாஷ் சந்திரபோசுக்கு தென்னகத்தின் தளபதியாக இருந்த முத்துராமலிங்கத் தேவர் , நேதாஜியின் அம்மாவின் அன்புக்கும் பாத்திரமானவர். நேதாஜி இறந்து போனபோது நேதாஜிக்கு எதிராக நேரு செயல்பட்டதாக தேவர் குற்றம் சாட்டினார்.
நேதாஜி உயிரோடு இருக்கிறார் என்று தேவர் தனக்கு வந்த செய்தியை சொல்ல, அவர் ,மீது நேரு தீராக் கோபம் கொண்டார்.
- “தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர் இம்மானுவேல் சேகரன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முத்துராமலிங்கத் தேவர் ஜெயிலில் ஸ்லோ பாய்சன் கொடுக்கப்பட்டதால் உடல் நலிவுற்றாரா” என்ற கேள்வி?
- மருத்துவமனையில் அவர் ஆங்கில மருத்துவத்தையும் பெண் நர்ஸ்கள் தன்னை தொடுவதையும் மறுத்த சம்பவம்
- உட்கார வைக்கப்பட்ட நிலையில் ஜோதியால் எரிக்கப்பட்டு குரு பூஜை செய்யப்படும் தெய்வத்தன்மை கொண்டவராக அவர் ஆனது..
இந்த சம்பவங்கள் எல்லாம் இந்தப் படத்தில் உண்டு.
பீரியட் காட்சிகளை சிறப்பாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் அரவிந்த ராஜ் ,

முத்துராமலிங்கத் தேவர் விடுதலை செய்யப்ப்படும் வழக்கில் நீதிபதியாக பாரதிராஜா, அவர் தரப்பு வக்கீலாக ராதாரவி, தேவரின் விசுவாசிகளாக வாகை சந்திரசேகர் , எம் எஸ் பாஸ்கர் ஆகியோர் சிறப்புத் தோற்றத்தில் பிரமாதப்படுத்துகிறார்கள். .
கலை இயக்கம் அருமை.
இது போன்ற படங்களுக்கு இசை அமைக்க தன்னை விட்டால் ஆளே இல்லை என்று மீண்டும் நிரூபித்திருக்கிறார் இசைஞானி இளையராஜா .ஒரு ஆவணப் படம் போல போகும் இந்தப் படத்தை திரைப்படமாக்குவது அவர்தான்
கலை இயக்கம் பாராட்டும்படி இருக்கிறது.
தேவரின் அபிமானிகள் சிலிர்க்கவும் பொதுவான தரப்பினர் உணர்ந்து நெகிழவும் சில காட்சிகள் உள்ளன.
காமராஜருக்கு எதிராக வந்திருக்கும் முதல் படம் இது . காந்தியாகவும் நேருவாகவும் நடித்து இருப்பவர்களின் தோற்றப் பொருத்தம் அருமை. நேருவை நேரடி வில்லனாகவே படம் காட்டுகிறது .
இம்மானுவேல் சேகரன் வழக்கில் தேவரின் தரப்பு சொல்லப் படுகிறது. இம்மானுவேல் சேகரன் கொலை, தேவருக்கு தெரியாமல் நடந்தது என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவுக்கு தேவர் சந்தோஷப்படுவார் என்று எண்ணி அவரது விசுவாசிகள் செய்தது என்பதும் உண்மை என்பார்கள்.
அன்றைய கலெக்டர் பணிக்கர் தலைமையில் நடந்த அமைதிப் பேச்சுவார்த்தை குழுவில் இம்மானுவேல் சேகரன் மற்றும் நாடார் தரப்பு நபர்கள் வந்த பிறகு தேவர் வருவார் என்பது முன்பே முடிவு செய்யப்பட்டது என்றும், ஆனால் இம்மானுவேல் சேகரன், முத்துராமலிங்கத் தேவர் வந்த பிறகே வந்ததோடு , கால் மேல் கால் போட்டு உட்கார்ந்தது தேவருக்கு பிடிக்காமல் போக.. , ” என் முன்னால் கால்மேல் கால் போட்டு உட்கார்ந்த அவனை சும்மா விடக்கூடாது ” என்று சொன்னார் என்று, தேவருக்கு வெப்பு நோய்க்கு சிகிச்சை அளித்த ஒரு வைத்தியரே சாட்சி சொன்னதும உண்டு.
உண்மையில் அப்போது கலெக்டராக இருந்த பணிக்கர் என்பவர், தென் தமிழ்நாட்டில் தேவர்களும் நாடார்களும் தாழ்த்தப்பட்டவர்களும் ஒற்றுமையாக இருந்தால் அது தென் மாவட்டங்களில் செட்டில் ஆக வரும் மலையாளிகளுக்கு பாதகம் ஆகும் என்பதால் அந்த ஒற்றுமை வரக்கூடாது என்பதில் பணிக்கர் தீர்மானமாக இருந்தார் என்பார்கள். அந்த முக்கியமான இன்ட்ரஸ்ட்டிங்கான விஷயங்கள் எல்லாம் படத்தில் இல்லை.
தேவரின் சொத்து அவரிடம் வேலை செய்த தொழிலாளர்கள் அனைவருக்கும் பிரித்துக் கொடுக்கப்பட்டது . அவர்களில் சில தாழ்த்தப்பட்ட மக்களும் உண்டு என்கிறது படம் (ஆனால் அந்த சொத்துகளில் சில பின்னர் அவர்களிடமிருந்து காசு கொடுத்து வாங்கப்பட்டது . சிலர் திருப்பி கொடுத்து விட்டார்கள் என்றும் ஒரு தகவல் உண்டு)
பசும்பொன் தேவரின் வரலாற்றுக்கு உரிய அழுத்தமான படமாக்கல் இல்லாமை, இணைப்பு இல்லாமல் சிதறி சிதறிப் போகும் காட்சிகள், தெறிப்பு இல்லாத வசனங்கள் , முக்கிய நடிகர்களைத் தவிர பலரின் செயற்கையான நடிப்பு, பஷீர் தோற்றத்தில் நடை உடை பாவனைகளில் முத்துராமலிங்கத் தேவரை பிரதிபலிக்கிறார் ஓகே . ஆனால் முத்துராமலிங்கத் தேவரின் ஆளுமையை அவரால் நடிப்பில் கொண்டு வர முடியவில்லை.
வரலாற்று நாயகன் என்று தேவரை சொன்னால் கூட ஓகே . ஆனால் இந்த முதல் படத்திலேயே பஷீருக்கு வரலாற்று நாயகர் என்ற பட்டத்தை பஷீருக்கு டைட்டிலில் கொடுத்து இருக்கிறார்கள்.
காமராஜர் படத்தில் காமராஜர் போல தோற்றம் கொண்ட ஒருவர் காமராஜராக நடித்தார், ஆனால் அவரால் காமராஜரின் பர்சனாலிட்டியை கொண்டு வர முடியவில்லை. சாயாஜி ஷிண்டே பாரதியாராக தோற்றம் காட்டியதோடு பாரதியை உணரவும் வைத்தார்.
அவ்வளவு ஏன்? மிகப் புகழ் பெற்ற நடிகரான சத்யராஜ், பெரியாராக நடித்தபோது அவருக்கு அதுவரை இருந்த இமேஜையும் மீறி பெரியாராக மாறினார் . அப்படி முத்துராமலிங்கத் தேவராக நடிப்பவரும் தேவரை உணர வைக்க வேண்டாமா?
தேசியத் தலைவர் என்பதுதான் சரியான தமிழ் . ஆனால் தேசிய தலைவர் என்று ஒற்று எழுத்து இல்லாமல் தவறாக பெயர் வைத்து இருப்பதை சரி செய்து இருக்கலாம் . .
முத்துராமலிங்கத் தேவர் கைது செய்யப்படும் ஒரு காட்சியில் கும்பலில் முதல் வரிசையில் நிற்கும் ஒரு பெண் சிரிப்பதை கவனித்து மாற்றி இருக்கலாம்.
முதல் மாநில மாநாடு என்பதற்குப் பதில் ‘முதல்மாநிலமாநாடு’ என்று வார்த்தைகளுக்கு இடையே இடைவெளி விடாமல் ஒரு பேனர் படத்தில் முக்கியமாக வருவதை சரி செய்து இருக்கலாம்.
கருப்பான ஓர் ஆளுக்கு முகத்தில் பாண்ட்ஸ் பவுடர் கொட்டிப் பூசி வெள்ளைக்கார அதிகாரியாக நடிக்க வைத்து இருக்கிறார்கள்.
கதை சொல்லும் வக்கீலான அரவிந்தராஜின் கெட்டப்பும் படு செயற்கை .
தவம் செய்யும் காட்சியில் தேவராக நடிக்கும் பஷீர் சின் முத்திரையை தவறாக வைத்திருக்கிறார்.
சில இடங்களில் பஷீர் பேசும் இடங்களில் ஒழுங்காக டப்பிங் செய்யாமல் அவர் வெறும் வாயை அசைத்துக் கொண்டு இருக்கிறார்.
இவற்றையும் சரி செய்து இருக்கலாம் .
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் .. என்ற பேருக்கும் வரலாற்றுக்கும் உள்ள உரிய கம்பீரத்தைப் படத்தில் கொண்டு வந்திருக்கலாம்.
–ராஜ திருமகன்
