தமிழ் ரசிகர்கள் மத்தியில் ‘மெட்டி ஒலி’ சீரியல் மூலமாகப் பிரபலமானவர் சாந்தி வில்லியம்ஸ். சித்தி, அண்ணாமலை, கலசம், தென்றல் உட்படப் பல படைப்புகளில் இடம்பிடித்த இவர் தற்போது ‘கண்மணி அன்புடன்’ எனும் சீரியலில் நடித்து வருகிறார்.
’அந்நியன்’ உட்படச் சில திரைப்படங்களிலும் இவர் தலைகாட்டியிருக்கிறார். இவரது கணவர் மறைந்த வில்லியம்ஸ் ஒரு ஒளிப்பதிவாளர். தமிழில் ‘நாங்கள்’, ‘நீலக்குயில்’ படங்களில் பணியாற்றிய இவர் மலையாளத்தில் பல வெற்றிப் படங்களில் இடம்பிடித்தவர்.
சாந்தி வில்லியம்ஸ் தரும் யூடியூப் பேட்டிகள் சமீபகாலமாகச் சலசலப்பை ஏற்படுத்தி வருகின்றன. கடந்த சில ஆண்டுகளாக இவர் தந்த பேட்டிகளில் கணவர் வில்லியம்ஸ் உடன் நடிகர் ரஜினிகாந்த், மோகன்லால் உட்படப் பல பிரபலங்கள் கொண்டிருந்த நட்பைக் குறிப்பிட்டு வருகிறார்.
உடல்நலமில்லாமல் தனது கணவர் நலிவுற்றபோது, திரையுலகில் அவரோடு பழகியவர்கள், பயன் பெற்றவர்களில் பலர் உதவி செய்ய முன்வரவில்லை என்றும் குற்றம்சாட்டியிருக்கிறார்.
சமீபத்தில் ‘மாஸ்டர் பின்’ எனும் மலையாள யூடியூப் சேனலுக்கு சாந்தி வில்லியம்ஸ் பேட்டியளித்திருக்கிறார். அதில், தங்கள் வீட்டில் இருந்த சுமார் பத்து அடி கிருஷ்ணர் சிலையை மோகன்லால் எடுத்துச் சென்றதாகக் குறிப்பிட்டிருக்கிறார். ஒரே சந்தன மரத்தில் செய்த சிலை அது என்றும் சொல்லியிருக்கிறார்.
”நாங்க ரொம்பவே கஷ்டப்பட்ட காலகட்டம் அது. அப்போ, அந்த சிலையை என்னால பராமரிக்க முடியாதுங்கற மாதிரி வில்லியம்ஸ் ஒருமுறை மோகன்லாலிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.
தன்னிடம் இருக்கிற நல்லவற்றை அடுத்தவர்களுக்குக் கொடுக்கிற வழக்கம் என் கணவருக்கு உண்டு. அந்த சூழலை லால் பயன்படுத்திக் கொண்டார்.
அந்த நேரத்துல, ’குழந்தைங்களுக்கு ரொம்ப வியர்க்குது. வீட்ல ஏர் கண்டிஷனர் இருந்தா நல்லாயிருக்கும்’னு லால்கிட்ட வில்லியம்ஸ் சொன்னார்.
உடனே லட்சங்கள் மதிப்பு கொண்ட அந்த கிருஷ்ணர் சிலையை எடுத்துக்கிட்டு, அவரோட ஆபிஸ்ல இருந்த பழைய ஏர் கண்டிஷனரை எங்க வீட்டுல மாட்ட ஏற்பாடு செஞ்சார். அது பத்து நாள் கூட ஓடலை.
பக்கத்துல இருந்தவங்க அது எந்நேரமும் வெடிச்சு சிதறிடும்னு சொன்னாங்க. குழந்தைங்களை வீட்ல வச்சுகிட்டு இப்படி இருக்கீங்களேன்னு சொன்னாங்க. அதனால, அதை நாங்க வித்துட்டோம். அப்போ ரெண்டாயிரம் ரூபாய் கிடைச்சது” என்றிருக்கிறார்.
அந்த பேட்டியில், கணவர் வில்லியம்ஸ் இறந்தபோது இயக்குனர் ஷங்கர் உடனடியாகப் பண உதவி செய்ததாகக் கூறியிருக்கிறார். பாண்டிச்சேரியில் படப்பிடிப்பில் இருந்த சாந்தி வில்லியம்ஸ் வீடு திரும்பும் வரை, அவரது வீட்டில் ‘மெட்டி ஒலி’ இயக்குனர் திருமுருகன் மற்றும் குழுவினர் கணவரிடன் சடலத்தோடு காந்திருந்ததாகவும் சொல்லியிருக்கிறார்.
“பாண்டிச்சேரியில இருந்து வீட்டுக்கு வர்ற வரைக்கும் ரெண்டரை மணி நேரம் திருமுருகன் என்கிட்ட போன்ல பேசிக்கிட்டே இருந்தார் எனக்கு லேசா ஹார்ட் அட்டாக் வந்திருந்த நேரம் அது. அதனால, நான் பதற்றமாயிடக் கூடாதுன்னு தொடர்ந்து பேசிக்கிட்டே இருந்தார்” என்று அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.
கணவரும் தானும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்றும், ஆனால் மலையாளிகள் எவருமே தங்களுக்கு உதவி செய்யவில்லை என்றும் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார். இதுநாள் வரை தமிழ்நாடு தான் தன்னை வாழவைத்துக் கொண்டிருப்பதாகச் சொல்லியிருக்கிறார் சாந்தி வில்லியம்ஸ்.
இந்த பேட்டி தற்போது சமூகவலைதளங்களில் ‘வைரல்’ ஆகி வருகிறது