எத்தனைதான் பெரிய மாளிகைகள், ஆடம்பர பங்களாக்களை பார்த்தாலும் கூட, திரையுலகைச் சேர்ந்தவர்களின் வசிப்பிடங்கள் மீது நம்மவர்கள் கொண்டிருக்கிற பிரமிப்பை விவரிப்பது கடினம். ஒரு இடத்தை அடையாளப்படுத்தும்போது கூட, அருகில் வசிக்கும் திரையுலகப் பிரபலத்தின் வீட்டையோ, அலுவலகத்தையோ குறிப்பிடுகிற வழக்கம் பலரிடத்தில் உண்டு. குறிப்பாக, சென்னையில் அதனை எளிதாக எதிர்கொள்ள முடியும். mohan lal ootty house for rent
சுற்றுலாத் தலங்களைப் போல, அவ்விடங்களில் மக்கள் கூட்டம் கொத்து கொத்தாக நிற்பதையும் நம்மில் சிலர் கண்டிருப்போம். அப்படிப்பட்டவர்களுக்கு இந்த செய்தி அதிர்ச்சியையோ, ஆச்சர்யத்தையோ தராது.
வேறொன்றுமில்லை, ஊட்டியில் இருக்கும் தனது வீட்டை வாடகைக்கு விட்டிருக்கிறார் நடிகர் மோகன்லால். லவ்டேல் ரயில்நிலையம் அருகே ஒரு குன்றின் மீது அமைந்துள்ள இந்த வீட்டின் பெயர் ‘ஹைடு அவே’ (Hideaway).
இங்கு மோகன்லால், அவரது மனைவி, மகள், மகன் தங்கிய அறைகள் அவற்றின் அடையாளங்களோடு பராமரிக்கப்பட்டு வருகின்றன.

மோகன்லால் நடித்த திரைப்படங்களின் புகைப்படங்கள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் படங்கள் இந்த வீட்டை அலங்கரிக்கின்றன. மோகன்லால் நடித்த கதாபாத்திரங்களின் பெயர்கள், திரைப்படங்களை அறிகிற வகையில் புதிர் விளையாட்டும் இங்கு நிறுவப்பட்டிருக்கிறதாம்.
இங்கிருக்கும் ‘கன் ஹவுஸ்’ஸில் இதுவரை படங்களில் மோகன்லால் பயன்படுத்திய துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த வீட்டைச் சுற்றி பசுமை நிறைந்த தோட்டம் இருக்கிறது. அங்கும் கூட உணவருந்த முடியும்.
மோகன்லால் வீட்டினருக்குச் சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாகச் சமையல் பணி செய்து வந்த சமையலர் ஒருவரின் மேற்பார்வையில் இங்கு உணவு தயாரிக்கப்படுகிறது.
தங்களது ஆதர்ச நட்சத்திரமான மோகன்லால் தங்கிய, மேற்சொன்ன வசதிகளைக் கொண்ட, அவருக்குச் சொந்தமான ஒரு வீட்டிற்கு அவரது ரசிகர்கள் சாரை சாரையாகப் படையெடுப்பதுதானே இயல்பு. அதனை உத்தேசித்தே, இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறதாம்.
இந்த வீட்டில் ஓரிரவு தங்குவதற்கான வாடகை ரூ.37,000. வரிக்கட்டணம் தவிர்த்த தொகை இது.
இதற்காகப் பிரத்யேகமாக இருக்கும் இணையதளமொன்றை ‘கூகுள்’ செய்து, இந்த தங்குமிடம் குறித்த மேலதிக விவரங்களைப் பெறலாம்.
இந்த விஷயத்தைப் பொறுத்தவரை மோகன்லாலுக்கு முன்னோடி மம்முட்டி தான்.
கொச்சி பனம்பள்ளி பகுதியில் தான் வசித்த வீட்டை, இதே போன்று ரசிகர்கள் தங்குமிடமாக மாற்றினார் மம்முட்டி. இந்தாண்டின் தொடக்கத்தில் இந்த முயற்சியை அவர் மேற்கொண்டார். அங்கு ஓரிரவு தங்குவதற்கான கட்டணம் ரூ.75,000.

மம்முட்டியைக் காண வரும் ரசிகர்கள், அப்பகுதியிலுள்ள ‘மம்முட்டி பாலம்’ என்று சொல்லும் அளவுக்கு இந்த வீடு பிரபலம். மம்முட்டியின் திரையுலக வளர்ச்சி மட்டுமல்லாமல் துல்கர் சல்மானின் அறிமுகம், பன்மொழி வெற்றிப்பட அனுபவங்களையும் கண்டது இவ்வீடு.
இவ்விஷயங்களைக் கேள்விப்படுகிறபோது, ‘எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறாங்க’ என்றே கேட்கத் தோன்றுகிறது. இந்த வரிசையில், தமிழ் திரையுலக நட்சத்திரங்களின் வீடுகளும் இது போன்று தங்குமிடங்களாக மாறுமா எனும் சிலரது ‘மைண்ட்வாய்ஸ்’களுக்கான பதில்களை இன்னும் சில காலத்தில் நாம் அறிய நேரிடலாம்..!