ஆர்எஸ்எஸ் 1925 இல் நிறுவப்பட்டது, நாங்கள் பிரிட்டிஷ் அரசாங்கத்தில் பதிவு செய்திருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா? என அந்த அமைப்பின் தலைவர் மோகன் பகவத் கேள்வி எழுப்பி உள்ளார்.
கர்நாடக காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பிரியங்க் கார்கே, ஆர்எஸ்எஸ் உண்மையிலேயே தன்னலமின்றி தேசத்திற்கு சேவை செய்தால், சட்டப்பூர்வமாக செயல்படும் அரசு சாரா நிறுவனங்களைப் போல ஏன் பதிவு செய்யக்கூடாது? பதிவு செய்யப்படாத ஒரு அமைப்பின் தலைவர் ஏன் மேம்பட்ட பாதுகாப்பினை பெறுகிறார். ஆர்எஸ்எஸ்க்கு யார் நிதியளிக்கிறார்கள் என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
இந்நிலையில் பெங்களூருவில் ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் நடந்த நிகழ்ச்சியில், பிரியங்க் கார்கேவின் கேள்விக்கு மோகன் பகவத் பதிலளிக்கும் வகையில் பேசி உள்ளார்.
அதில் “ஆர்எஸ்எஸ் 1925 இல் நிறுவப்பட்டது, எனவே நாங்கள் பிரிட்டிஷ் அரசாங்கத்தில் பதிவு செய்திருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா?
சுதந்திரத்திற்கு பின் இந்திய அரசு பதிவு செய்ய வேண்டும் என்பதை கட்டாயமாக்கவில்லை. நாங்கள் பதிவு செய்யப்படாத தனி நபர்களின் அமைப்பாகவே வகைப்பபடுத்தப்பட்டு உள்ளோம். நாங்கள் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அமைப்பு. 3 முறை தடைசெய்யப்பட்டோம். நீதிமன்றங்கள் எங்கள் அமைப்பின் மீதான தடையை நீக்கி அங்கீகரித்துள்ளன. வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
பல காரணங்கள்
ஆர்எஸ்எஸ் அமைப்பு பதிவு செய்யப்படாமல் இருக்க பல காரணங்கள் உள்ளன. இந்து தர்மம் கூட பதிவு செய்யப்படவில்லை. ஆனால் நாங்கள் காவி கொடியை மதிக்கிறோம். மூவர்ணக் கொடி மீதும் மரியாதை வைத்துள்ளளோம் என்றார்.
காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவா?
ஆர்எஸ்எஸ் எந்த ஒரு தனி நபரையோ கட்சியையோ ஆதரிக்கவில்லை. ஆனால் கொள்கையை ஆதரிப்பதற்காக களத்தில் இறங்கி பணியாற்றுகிறோம். அதற்கு உதாரணம் ராமர் கோயில் கட்டும் இயக்கத்தை ஆர்எஸ்எஸ் ஆதரித்தது என்றார். மேலும் அதை காங்கிரஸ் அல்லது வேறு எந்த கட்சி செய்திருந்தாலும் அவர்களை நாங்கள் ஆதரித்திருப்போம் என்றார்.
பாடம் கற்கும்
மேலும் ஆர்எஸ்எஸ் எப்போதும் பாகிஸ்தானுடன் அமைதியை விரும்புகிறது. ஆனால் பாகிஸ்தான் சமாதானத்தை விரும்பவில்லை. பாகிஸ்தான் தனது நடவடிக்கையை சரி செய்யாவிட்டால் ஒருநாள் பாடம் கற்றுக் கொள்ளும். சண்டையிடுவதை விட சமாதானமே நல்லது. ஆனால் அவர்களுக்கு சண்டையிடுவதைத் தவிர வேறு எதுவும் தெரியாது. எனவே அவர்கள் புரிந்து கொள்ளும் மொழியில் நாம் பேச வேண்டும் என்றார்.
சாதி வெறி குறித்து பேசுகையில், நாட்டில் சாதி வெறி இல்லை சாதி குழப்பமே உள்ளது. சில சலுகைகளுக்காகவும், தேர்தலுக்காகவும் சாதி குழப்பம் நிலவி வருகிறது. இதனால் சாதியை ஒழிக்க எந்த முயற்சி எடுப்பதை விட சாதியை மறக்க முயற்சி செய்யவதே அவசியம்” என்றார்.
