பாமக நிறுவனர் ராமதாஸுக்கு பிரதமர் மோடி தாமதமாக பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடந்த ஜூலை 25ஆம் தேதி 87ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். அவரது மனைவி சரஸ்வதி ராமதாஸுக்கு தாமரை மலரை கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி என அரசியல் கட்சித் தலைவர்கள் ராமதாஸுக்கு சமூக வலைதளங்கள் வாயிலாகவும், தொலைபேசி வாயிலாகவும் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்தநிலையில் அன்றைய தினம் வாழ்த்து தெரிவிக்காமல் தாமதமாக ராமதாஸுக்கு வாழ்த்து கூறியுள்ளார் பிரதமர் மோடி.
இதுகுறித்து இன்று (ஜூலை 28) பாமக வெளியிட்ட அறிக்கையில், பா.ம.க நிறுவனர் தலைவர் ராமதாஸுக்கு பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி மூலம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.
அப்போது, ‘உங்கள் பிறந்தநாளான ஜூலை 25-ஆம் தேதி. எனக்கு வெளியில் வேறு அலுவல்கள் இருந்ததால் அன்றைய நாளில் வாழ்த்த முடியாமல் போய் விட்டது’ என்று தெரிவித்தார்.
அப்போது, ராமதாஸ், “நீங்கள் நூறாண்டு காலம் நலமுடன் வாழ்ந்து மக்கள் பணியாற்ற வேண்டும்’ என்று பிரதமரை வாழ்த்தினார்.
இந்த வாழ்த்தை ஏற்றுக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, முன் மாதிரியாக நீங்கள் வாழ்ந்து மக்கள் தொண்டாற்ற வேண்டும்’ என்று ராமதாஸை வாழ்த்தி மகிழ்ந்தார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.