ADVERTISEMENT

திரைப்படமாகும் ராமதாஸ் பயோபிக்… குவியும் பிரபலங்களின் வாழ்த்து!

Published On:

| By christopher

celebreties wishes poured for ramadoss biopic

“அய்யா – The Lion of Tamil Nadu” என்ற பெயரில் பாமக நிறுவனர் ராமதாஸின் வாழ்க்கை வரலாற்றை இயக்குநர் சேரன் இயக்க உள்ளதாக அறிவித்ததை அடுத்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையே தொடர்ந்து கடுமையான உட்கட்சி பூசல் நிலவி வருகிறது.

ADVERTISEMENT

இந்த நிலையில் ராமதாஸின் 87வது பிறந்தநாளான நேற்று (ஜூலை 25) அவரது வாழ்க்கை வரலாறு படமாக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மூத்த இயக்குநர் சேரன் இயக்கும் இப்படத்தில், ராமதாஸாக நடிகர் ஆரி அர்ஜுனன் நடிக்கிறார். மேலும் பாமக மூத்த தலைவர் ஜி.கே. மணியின் மகன் தமிழ் குமரன், இந்த படத்தின் மூலம் தயாரிப்பாளராக அடியெடுத்து வைக்கிறார்.

மேலும் இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக ஏகாம்பரம், இசையமைப்பாளராக சுந்தரமூர்த்தி மற்றும் படத்தொகுப்பாளராக பொன் கதிரேசன் ஆகியோர் பணியாற்ற உள்ளனர்.

ADVERTISEMENT

அய்யா என தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தின் போஸ்டரில், ‘The Lion of TamilNadu’ மற்றும் ‘இன விடுதலைக்கான போராட்டத்தின் வரலாறு’ ஆகிய வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன. வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு கோரி நடைபெற்ற போராட்டத்தை குறிக்கும் வகையில் ‘1987’ என்பதும் போஸ்டரில் உள்ளது.

ADVERTISEMENT

இதுதொடர்பாக இயக்குநர் சேரன் வெளியிட்ட பதிவில், “நான் இயக்கப்போகும் அய்யா திரைப்படத்தை ஜிகே மணி அய்யாவின் புதல்வரும் லைகா நிறுவனத்தின் மேலாளருமான ஜி.கே. தமிழ்குமரன் தயாரிக்கிறார் என்பதை பெருமையுடன் அறிவிக்கிறேன். அவரின் தயாரிப்பில் பெரும் பொருட்செலவில் உருவாகும் இப்படம் செப்டம்பரில் துவங்குகிறது” என அறிவித்துள்ளார்.

நடிகர் ஆரி அர்ஜுனன் தனது எக்ஸ் பக்கத்தில் டாக்டர் ராமதாஸின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ’அய்யா’வில் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி! 🙏இந்த வாய்ப்பிற்காக இயக்குனர் சேரன் ஐயா மற்றும் தயாரிப்பாளர் தமிழ் குமரனுக்கு நன்றி 🔥 இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் 🎬 குரலற்றவர்களுக்காக அவரது குரல் கர்ஜித்தது. இப்போது, அவரது கதை பெரிய திரையில் கர்ஜிக்க இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து திரையுலக பிரபலங்கள் பலரும் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இயக்குநர் தங்கர் பச்சான்

மருத்துவர் ராமதாஸ் அய்யா வாழ்வின் பெரும்பகுதியை தமிழக மக்களின் நலனுக்காக செலவழித்தவர். தமிழக அரசியலில் போக்கினை மாற்றி உழைக்கும் மக்களின் பக்கம் திருப்பியவர்.

கடந்த காலங்களில் உண்மையான தலைவர்கள், போராளிகளின் வரலாறு மறைக்கப்பட்டன! அத்துடன் அவரவர் வசதிக்கேற்ப மாற்றி திரித்து அவரவர்க்கு வேண்டியவர்களை தலைவர்களாகவும் போராளிகளாகவும் உருவாக்கினார்கள்!

வாழும் காலத்திலேயே மருத்துவர் ராமதாசு அய்யாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட திரைப்படம் உருவாகும் சேதி இன்று வெளியாகி உள்ளது பெரு மகிழ்ச்சியை அளிக்கிறது!

எதிர்காலத் தலைமுறையினருக்கு ஆவணமாகப்போகும் “அய்யா” திரைப்படத்தை தேர்ந்த இயக்குநர் சேரன் இயக்குவது மேலும் மகிழ்ச்சி அளிக்கிறது! திரைப்படம் வெற்றி அடைய மனம் உவந்து வாழ்த்துகிறேன்!!

தயாரிப்பாளர் தனஞ்செயன்

தமிழ் சினிமாவிற்கு விரைவில் எம்.ஜி.ஆர், கலைஞர், ஜெயலலிதா போன்ற நமது தலைவர்களைப் பற்றிய வாழ்க்கை வரலாற்று படங்கள் தேவை. அய்யா படத்திற்காக சேரன், ஆரி அர்ஜுனன் மற்றும் குழுவினருக்கு வாழ்த்துக்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share