ஜம்மு காஷ்மீர் பகல்ஹாமில் ஏப்ரல் 22-ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.
இந்தநிலையில், பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் ஏப்ரல் 23-ஆம் தேதி பாதுகாப்பு அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ராணுவத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். Modi decision against Pakistan
இந்த கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்:
எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் கைவிடும் வரை, 1960-ஆம் ஆண்டு போடப்பட்ட சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படுகிறது.
இந்தியா – பாகிஸ்தான் எல்லையாக பஞ்சாபில் அமைந்துள்ள அட்டாரி ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி உடனடியாக மூடப்படும். இந்த வழியாக உரிய ஒப்புதலுடன் இந்தியா வந்தவர்கள் மே 1-ஆம் தேதிக்குள் உடனடியாக பாகிஸ்தான் திரும்ப வேண்டும்.
சார்க் (SVES) விசாக்களின் கீழ் பாகிஸ்தானியர்கள் இனி இந்தியாவிற்கு பயணிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். கடந்த காலத்தில் பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்பட்ட எந்தவொரு SVES விசாக்களும் ரத்து செய்யப்பட்டதாகக் கருதப்படும். SVES விசாவின் கீழ் தற்போது இந்தியாவில் உள்ள எந்தவொரு பாகிஸ்தானியர்கள் 48 மணிநேரத்திற்குள் வெளியேற வேண்டும்.
டெல்லி பாகிஸ்தான் தூதரகத்தில் உள்ள பாதுகாப்பு, ராணுவம், கடற்படை மற்றும் விமான ஆலோசகர்கள் இந்தியாவை விட்டு ஒரு வாரத்திற்குள் வெளியேற வேண்டும். அதேபோல, இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் இருந்து இந்தியா தனது பாதுகாப்பு, கடற்படை, விமான ஆலோசகர்களை திரும்பப் பெறவுள்ளது.
மே 1-ஆம் தேதிக்குள் பாகிஸ்தான் தூதரகத்தில் உள்ள அதிகாரிகளின் எண்ணிக்கை, 55-லிருந்து 30-ஆகக் குறைக்கப்படும்.