இன்று முதல் ஏப்ரல் 7ஆம் தேதி வரை தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. moderate rain for tamilnadu
தமிழகத்தில் மார்ச் முதலே வெயில் சுட்டெரிக்க தொடங்கிவிட்டது. தமிழ்நாடு, புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் கரூர் பரமத்தியில் 38.0° செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 35-38° செல்சியஸ், தமிழக கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 32-35° செல்சியஸ், மலைப் பகுதிகளில் 21-30° செல்சியஸ் வெயில் பதிவாகியுள்ளது.
இந்தநிலையில் வரும் 7ஆம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இன்று (ஏப்ரல் 1) வெளியிட்ட அறிவிப்பில், “ தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் வடதமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது.
இதன் காரணமாக இன்று (01-04-2025) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
02-04-2025 அன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
03-04-2025 அன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
04-04-2025 மற்றும் 05-04-2025 ஆகிய நாட்களில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
06-04-2025 மற்றும் 07-04-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்” என்று கூறியுள்ளது.
இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு
மேலும், “01-04-2025 மற்றும் 02-04-2025: தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை ஒட்டி-இயல்பை விட சற்று குறைவாக இருக்கக்கூடும்.
03-04-2025 முதல் 05-04-2025 வரை: தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் இயல்பை விட 2-3° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு
இன்று (01-04-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை (02-04-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்” என்றும் தெரிவித்துள்ளது.