திமுகவுடனான பேச்சுவார்த்தையில் மனித நேய மக்கள் கட்சிக்கு (மமக MMK) 5 தொகுதிகளை ஒதுக்குமாறு கேட்டுள்ளதாகவும் இந்த தேர்தலிலும் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட உள்ளதாகவும் அக்கட்சித் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
சென்னையில் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் டிஆர் பாலு தலைமையிலான திமுக தொகுதி பங்கீட்டு குழுவுடன் மமக இன்று பிப்ரவரி 23-ந் தேதி பேச்சுவார்த்தை நடத்தியது.
இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் ஜவாஹிருல்லா கூறியதாவது: திமுக பொருளாளர் டி.ஆர். பாலு தலைமையில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ள குழுவுடன் மனித நேய மக்கள் கட்சியின் சார்பாக நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தினோம்.
வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியின் வெற்றிக்காக தமிழகத்தின் பட்டிதொட்டியெல்லாம், அனைத்து மாவட்டங்களிலும் வியாபித்திருக்கின்ற மனித நேய மக்கள் கட்சி நிச்சயமாக பாடுபடும் என்பதை மீண்டும் உறுதியாகத் தெரிவித்தோம்.
2021 சட்டமன்றத் தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சி பாபநாசம் மற்றும் மணப்பாறை ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு 100 விழுக்காடு வெற்றி பெற்றது.
எனவே இந்த முறை 5 தொகுதிகளை மனித நேய மக்கள் கட்சிக்குத் தரவேண்டும் என்ற கோரிக்கையை நாங்கள் முன்வைத்திருக்கின்றோம். இது முதற்கட்ட பேச்சுவார்த்தைதான்.
எங்களுடைய கோரிக்கைகளை குறித்துக்கொண்டார்கள். அது குறித்து முதலமைச்சர் ஸ்டாலினிடம் எடுத்துச் செல்வோம் என்று சொல்லியிருக்கிறார்கள். அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைக்கு அழைப்போம் என்றும் சொல்லியிருக்கிறார்கள்.
உதயசூரியன் சின்னத்தில்தான் மனிதநேய மக்கள் கட்சி இந்தத் தேர்தல்ல போட்டியிடும், அதையும் நாங்கள் பேசியிருக்கிறோம். தொகுதிகளை இம்முறை அதிகரித்துத் தர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருக்கிறோம். முதலமைச்சரிடம் கலந்து பேசி அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தையில் அது குறித்து விவாதிப்போம் என்று சொல்லியிருக்கிறார்கள். இவ்வாறு பேராசிரியர் ஜஹவாஹிருல்லா தெரிவித்தார்.
