ADVERTISEMENT

முக்கிய திட்டங்களுக்கு இந்தியிலும் சமஸ்கிருதத்திலும் மட்டுமே பெயரிடப்படுவது ஏன்? – ஸ்டாலின் கேள்வி!

Published On:

| By christopher

mkstalin rise 8 questions for pm modi

நாட்டின் முக்கியமான திட்டங்களுக்கும், சட்டங்களுக்கும் இந்தியிலும் சமஸ்கிருதத்திலும் மட்டுமே பெயரிடப்படுவது என்ன மாதிரியான ஆணவம்? என மத்திய அரசை நோக்கி முதல்வர் ஸ்டாலின் இன்று (அக்டோபர் 18) கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த 4 நாட்களாக நடந்த தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் நேற்றுடன் நிறைவடைந்தது. அப்போது துணை மானிய கோரிக்கைகளின் மீதான விவாதத்தில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு மத்திய அரசை நோக்கி 10 கேள்விகளை முன்வைத்தார்.

ADVERTISEMENT

கூட்டாட்சி, இந்தி திணிப்பு, பாரபட்சமான திட்டங்கள், நிதி ஒதுக்குவதில் புறக்கணிப்பு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை எழுப்பி, மத்திய அரசுக்கு கேள்விகளை எழுப்பினார்.

இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் மத்திய அரசை நோக்கி பல்வேறு கேள்விகள் எழுப்பி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ADVERTISEMENT

இதற்கெல்லாம் பதில் வருமா?

அதில் ”நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு மட்டுமல்ல, நாட்டு மக்களின் நெஞ்சங்களிலும் ஏராளமான கேள்விகள் நிரம்பியுள்ளன. அவற்றில் சிலவற்றை நான் கேட்கிறேன்:

ஊழல்வாதிகள் பா.ஜ.க.வின் கூட்டணிக்கு வந்தபின்பு, வாஷிங் மெஷினில் வெளுப்பது எப்படி?

ADVERTISEMENT

நாட்டின் முக்கியமான திட்டங்களுக்கும், சட்டங்களுக்கும் இந்தியிலும் சமஸ்கிருதத்திலும் மட்டுமே பெயரிடப்படுவது என்ன மாதிரியான ஆணவம்?

ஒன்றிய அமைச்சர்களே நம் குழந்தைகளை அறிவியலுக்குப் புறம்பான மூடநம்பிக்கைகளைச் சொல்லி மட்டுப்படுத்துவது ஏன்?

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில், ஆளுநர்களை வைத்துக் குழப்பம் விளைவித்து என்ன சாதிக்கப் போகிறீர்கள்?

பா.ஜ.க.வின் தேர்தல் வெற்றிக்காக, மக்களின் வாக்குகளைப் பறிக்கும் வாக்குத் திருட்டை #SIR ஆதரிப்பது ஏன்?

இரும்பின் தொன்மை குறித்து அறிவியல்பூர்வமாகத் தமிழ்நாடு மெய்ப்பித்த அறிக்கையைக்கூட அங்கீகரிக்க மனம்வராதது ஏன்?

கீழடி அறிக்கையைத் தடுக்கக் குட்டிக்கரணங்கள் போடுவது ஏன்? இதற்கெல்லாம் பதில் வருமா?

இல்லை வழக்கம்போல, வாட்சப் யூனிவர்சிட்டியில் பொய்ப் பிரசாரத்தைத் தொடங்குவீர்களா?” என முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share